31 சனவரி 2019, வியாழன்

வியாழக்கிழமை

பொதுக்காலம் மூன்றாம் வாரம்

வியாழக்கிழமை

மாற்கு 4: 21-25

 

எல்லாருக்கும் ஒளி கொடுக்குமாம் விளக்கு!

 

நிகழ்வு

 

         அஸ்ஸாம் மாநிலத்தில், தள்ளுவண்டியில் காய்கறி விற்றுவந்தவர் சோபரான் என்ற மனிதர். ஒருநாள் அவர் வழக்கமாக காய்கறிகளை விற்கும் தெருவில் காய்கறிகளைக் கூவிக் கூவி விற்றுக்கொண்டு சென்றபோது, தெருவோரத்தில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

 

உடனே அவர் பதறிப்போய் குப்பைத் தொட்டியின் அருகே சென்று பார்த்தார். அங்கே பிறந்து ஓரிரு மணிநேரமே இருக்கும் ஓர் அழகான பெண்குழந்தை கைகளையும் கால்களையும் ஆட்டி ஆட்டி அழுந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்து இரக்கப்பட்ட சோப்ரான் அக்குழந்தையை வீட்டிற்குத் தூக்கிப்போய் வளர்க்கலாமா என்று யோசித்தார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அப்படியிருக்கின்றது இந்தக் குழந்தையை வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு போய் வளர்த்தால், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தீவிரமாக யோசித்தார். பின்னர் அவர் ‘மற்றவர்கள் எண்ணமும் நினைத்துவிட்டுப் போகட்டும், நாம் இந்தக் குழந்தையை வளர்ப்போம்’ என்று முடிவுசெய்து அந்தப் பெண் குழந்தையை தன்னுடைய வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு போய், அதற்கு சோதி எனப் பெயரிட்டு வளர்க்கத் தொடங்கினார்.

 

சோதியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, கல்வி கேள்வியில் சிறந்துவிளங்கி வந்தாள். 2013 ஆம் ஆண்டு Computer Science பிரிவில் இளங்கலைப் பட்ட பெற்ற சோதி, 2014 ஆம் அண்டு அஸ்ஸாம் பப்ளிக் சர்விஸ் கமிஷன் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று சேல்ஸ் டாக்ஸ் அசிஸ்டன்ட் கமிஷனராக மாறினார். இதற்குப் பின்பு தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் செய்து, தன்னை வளர்த்தெடுத்து, தன்னுடைய வாழ்வில் சோதியை – ஒளியை – ஏற்றிவைத்த தன்னுடைய (வளர்ப்புத்) தந்தை சோப்ரானை நல்லமுறையில் பராமரித்து வருகின்றார். ஆனாலும்கூட சோப்ரான் தனக்கு காய்கறித் தொழில் செய்வதில் மனநிறைவு கிடைக்கிறது என்று அத்தொழிலை தொடர்ந்து செய்துவருகின்றார்.

 

ஒரு குப்பைத் தொட்டியில் அனாதையாகக் கிடந்த சோதியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சோப்ரான், நாம் ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு ஒளியாக விளங்க மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

        

விளக்குத் தண்டின்மீது வைக்கபடவே விளக்கு!

 

         நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, விளக்கினுடைய பயன்பாட்டையும் அதனுடைய முக்கியத்துவத்தையும் குறித்துப் பேசுகின்றார். இங்கே விளக்கு என்று இயேசு குறிப்பிடுவது அவருடைய சீடர்களாக இருக்கின்ற நம் ஒவ்வொருவரையும்தான். மலைப்பொழிவில் இயேசு இதைத்தான், “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்” என்பார் (மத் 5:14). ஆகையால், நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்திற்கு விளக்காக இருந்து ஒளி கொடுக்கவேண்டும் என்பதே இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கினறது.

 

இறைவன் என்னும் எண்ணெய் ஒருவருள் இருக்கின்றபோதுதான் அவரால் ஒளி கொடுக்கமுடியும்

 

          இந்த உலகிற்கு நாம் ஒளியாக இருக்கவேண்டும் என்று இயேசு சொல்கிறார் எனில், அது நம்மால் மட்டுமே முடியாது, எல்லாம் வல்ல இறைவன் நம்முள் இருக்கின்றபோதுதான் சாத்தியப்படும் (யோவா 15:5). அந்தக் காலத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றப்பட்டு, திரி ஏற்றப்பட்டுதான் விளக்கானது எரியும். ஒருவேளை அந்தக் களிமண் கிண்ணத்தில் எண்ணெய் இல்லையென்றால் அதனால் ஒளி கொடுக்க முடியாது. அதுபோன்றுதான் இறைவன் நம்முள் இருக்கின்றபோதும் இறைவார்த்தையை நாம் வாழ்வாக்கின்றபோதும் மட்டுமே நம்மால் ஒளிகொடுக்க முடியும். அப்படியில்லாதபோது நம்மால் எதுவும் சாத்தியப்படாது.

 

நற்செய்தியில் இயேசு தொடர்ந்து சொல்வார், “உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்று. ஆம், நாம் இறைவனை நம்முள் வைத்துக்கொண்டு ஒளிகொடுக்கின்றபோது நம் ஒளி மேலும் மேலும் பெருகும். அதே நேரத்தில் இறைவன் நம்முள் இல்லாதபோது, ஏற்கனவே நம்முள் இருப்பதும் இல்லாமல் போய்விடும். ஆகவே, அருட்பெரும்ஜோதியாகிய இறைவனை நம்முள் வைத்துக்கொண்டு நாம் வாழ்ந்தோமில் நம்மால் மிகுந்த ஒளி கொடுக்க முடியும் என்பது உறுதி.

 

சிந்தனை

 

         இன்றைய உலகில் மனிதர்கள் தாங்கள் பெற்ற தாலந்துகளை, வசதி வாய்ப்புகளை தங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் ஓர் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது யாரும் ஒளியாக அல்ல, இருளாகவே இருக்கிறார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை. ஆகவே, நாம் ற்ற தாலந்துகளை, வசதி வாய்ப்புகளை பிறருக்காகப் பயன்படுத்தி, பிறருடைய வாழ்வில் ஒளியேற்றி வைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.