தூய தொன் போஸ்கோ
தூய தொன் போஸ்கோ (ஜனவரி 31)
நிகழ்வு
ஜான் போஸ்கோ சிறுவனாக இருந்தபோது ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் இளைஞர்கள் சிலர் ஓரிடத்தில் சிரித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் இன்னும் ஒருசில இளைஞர்கள் தீய வார்த்தைகளைப் பேசிக்கொண்டும் தீய பழக்கவழக்கங்களில் ஈடுபட்டுக்கொண்டும் இருந்தார்கள். இதைப் பார்த்த ஜான் போஸ்கோ அவர்களை என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார். அப்போது வெண்ணிற ஆடை அணிந்த மனிதர் ஒருவர் தோன்றி, “போஸ்கோ! இந்த இளைஞர்களை நீதான் நல்வழிப்படுத்தவேண்டும். அடக்குமுறையால் அல்ல, அன்பினால், பொறுமையினால், தாழ்சியினால் திருத்தவேண்டும்” என்று சொல்லி மறைந்துபோனார்.
இந்தக் காட்சியை ஜான் போஸ்கோ தன்னுடைய அன்னையிடம் எடுத்துச் சொன்னபோது, அவள், எதிர்காலத்தில் அவர் செய்யப்போகும் பணியின் முன்னடையாளம்தான் இது என அவருக்கு எடுத்துச் சொன்னார்.
வாழ்க்கை வரலாறு
ஜான் போஸ்கோ வட இத்தாலியில் உள்ள பெக்கி என்ற சிறிய கிராமத்தில் 1814 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16 ஆம் நாள், பிரான்சிஸ் லூயி போஸ்கோ, மார்கரித் ஒக்கியேனா என்ற தம்பதியினருடைய மகனாக பிறந்தார். இவருக்கு இரண்டு வயது நடந்துகொண்டிருக்கும்போது இவர் தன்னுடைய தந்தையை இழந்தார். எனவே இவர் தாயின் பராமரிப்பிலே வளர்ந்தார். ஜான் போஸ்கோவின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அதனால் கல்வி கற்க கடினமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட ஜான் போஸ்கோ ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு கல்வி கற்றார்.
1841 ஆம் ஆண்டு ஜான் போஸ்கோ குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் குருவாக மாறியபிறகு செய்த முதல் காரியம், சிறைச்சாலைகளிலிருந்த கைதிகளை அதுவும் குறைந்த வயதில் இருந்த கைதிகளைச் சந்தித்து அவர்களை ஆற்றுப்படுத்தியதுதான். அவர் ஆற்றிய பணியினால் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. இளைஞர்கள் தங்களுடைய தீயவழிகளை விட்டு மனமாறினார்கள். அதன்பிறகு ஜான் போஸ்கோ தூரின் என்ற இடத்தில் பங்குகுருவாக நியமிக்கப்பட்டார். இவர் அங்கு சென்று காலகட்டத்தில் இத்தாலி நாடு முழுவதும் தொழில்புரட்சி ஏற்பட்டிருந்தது. எனவே, பெரும்பாலான இளைஞர்கள் தவறான பழக்கவழக்கங்களுக்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமைப்பட்டுக்கிடந்தார்கள். இதைக் கண்ணுற்ற தொன் போஸ்கோ மனம் வருந்தினார். அவர்களை எப்படியாவது நல்வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்று மிகத் தீவிரமாக உழைத்தார்.
ஆரட்டரி இளைஞர் மன்றம் என்ற ஓர் அமைப்பை எடுத்தி இளைஞர்களை நல்வழிக்குக் கொண்டுவரத் திட்டம்தீட்டினார். பல்வேறு கதைகள், அறிவுரைகள் சொல்லி, அந்தக் கதைகள், அறிவுரைகள் இடையிடையே விவிலியத்திலிருந்தும் நல்ல நல்ல கருத்துகளைச் சொல்லிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தினார். தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தான் கல்வி கற்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை நன்கு உணர்ந்த தொன் போஸ்கோ முறைசாரா கல்வி நிறுவனங்கள், இரவு நேரப் படிப்பங்கள் வழியாக இளைஞர்களுக்கு கல்வியறிவு புகட்டினார். தொன் போஸ்கோ அடிக்கடி சொல்லக்கூடிய வசனம், “இளைஞர்களை நாம் அன்புசெய்கிறோம் என்பது முக்கியமல்ல, மாறாக நாம் இளைஞர்களை அன்புசெய்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியவேண்டும். அதுதான் முக்கியமாகும்” என்பதாகும்.
இப்படி இளைஞர்களைக் குறித்து எப்போதும் அக்கறைகொண்ட தொன்போஸ்கோ அவர்களுக்கு சரியாகப் பயிற்சி கொடுத்தார். அவர்களை குருவாக உயர்த்தினார். அப்படி உருவான குருக்களை வைத்து 1874 ஆண்டு சலேசிய சபையை தோற்றுவித்தார். அது இன்றைக்கு பல நாடுகளிலும் பறந்து விரிந்து பற்பல பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். தொன்போஸ்கோ புனித மரிய மசரெல்லா என்பரோடு இணைந்து பெண்களுக்காக ‘கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் புதல்வியர்கள் என்ற சபையையும் தோற்றுவித்தார். அதைப் போன்று 1876 ஆண்டு பொதுநிலையினருக்கும் ஒரு சபையைத் தோற்றுவித்து அதன்வழியாக சிறப்பான ஒரு பணியைச் செய்தார்.
புனித அன்னைத் தெரசா, தூய தொன் போஸ்கோவைக் குறித்து கூறுவார், “அவர் ஏழைகளில் இயேசுவைக் கண்டார். அந்த ஏழைகளுக்கு செய்கின்ற சேவைகள் அனைத்தையும் இறைவனுக்கே செய்வதாக உணர்ந்தார். இப்படியாக அவர் ஏழைகளுக்காக, இளைஞர்களுக்காக தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். அப்படிப்பட்டவர் 1888 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் நாள் தன்னுடைய எழுபத்தி இரண்டாவது வயதில் இறைவனடி சேர்ந்தார். 1934 ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய (ஜான்) தொன் போஸ்கோவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. தாயின் துணை
தொன் போஸ்கோவின் வாழ்க்கை வரலாற்றை ஆழமாகப் படிக்கும்போது அவருடைய வாழ்க்கையில் அவருடைய அன்புத் தாய் எந்தளவுக்கு முக்கியப் பங்காற்றி இருக்கிறாள் என நாம் புரிந்துகொள்ளலாம். சிறு வயதிலே தந்தையை இழந்த தொன் போஸ்கோ தாயின் பராமரிப்பில்தான் வளர்ந்தார். குருவாக உயர்ந்த பிறகும்கூட, தொன் போஸ்கோவின் தாய் அவருக்கு பக்க பலமாக இருந்தார். எப்படி ஆண்டவர் இயேசுவுக்கு அன்னை மரியாள் பக்க பலமாக இருந்து, எல்லா நிலைகளிலும் உதவி, அவருடைய வாழ்வின் இறுதி வரை உடன் பயணித்தாரோ, அதைப் போன்று தொன் போஸ்கோவின் தாயும், அவருக்கு வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் உடனிருந்து அவரைத் தேற்றினார். ஆகவே, ஒவ்வொரு தாய்மாரும், தன்னுடைய பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.
கவிஞன் ஒருவன் சொல்வான், “ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள் இருந்து என்ன பயன்?. அம்மா! வேரனென நீ இருந்தாய், அதில் வீழ்ந்திடாது நான் இருந்தான்” என்று. ஆம், ஆலமரத்திற்கு ஆயிரம் விழுதுகள் இருந்தும், அவற்றால் அந்த மரத்திற்கு ஒரு பயனும் இல்லை. அந்த மரத்தைத் தாங்கிப் பிடிக்கக்கூடியது அதனுடைய ஆணிவேர்தான். அதை போன்றுதான் இந்த உலகத்தில் எத்தனை உறவுகள் இருந்தாலும், தாய் என்ற உறவுக்கு ஈடாகாது. ஆகவே, ஒவ்வொரு தாயும் தன்னுடைய பிள்ளையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றவேண்டும் என்ற உண்மையை உணர்ந்து அதற்கேற்ப வாழவேண்டும்.
2. அன்னை மரியிடம் ஆழமான பக்தி
தொன் போஸ்கோ எவ்வளவு பணிகளைச் செய்தாலும், அவர் செபிப்பதற்கு நேரம் ஒதுக்க தவறவில்லை என்பது அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமாகும். தொன் போஸ்கோ அன்னை மரியாவிடம் ஆழமான பக்தி கொண்டு வாழ்ந்தார். அந்த பக்திதான் அவரை எல்லாவிதச் சவால்களைகளையும் துணிவுடன் எதிர்கொள்ள உறுதுணையாக இருந்தது. கிறிஸ்தவர்களாக நாம் மரியன்னையின் மீது ஆழமான பக்திகொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். “எங்கள் மகிழ்ச்சியின் காரணமே’ என்று மரியன்னைக் குறித்து சொல்கிறோம். ஆம், நமது மகிழ்சிக்குக் காரணமாக இருக்கும் அன்னையின்மீது ஆழ்ந்த பக்திகொண்டு வாழ்வோம். அதன்வழியாக அவரது பரிந்துரையையும் பாதுக்காப்பையும் பெறுவோம்.
3. இளைஞர்கள்மீது அக்கறை
தொன் போஸ்கோ இளைஞர்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவருடைய காலத்தில் வழிதவறி அலைந்த ஆடுகளான இளைஞர்கள்மீது அவர் அன்பும் கரிசனையும் கொண்டுவாழ்ந்தார், அவர்களுடைய வாழ்வு ஏற்றம் பெற தன்னுடைய உடல் பொருள் ஆவி அத்தனையை கொடுத்தார். அதனால்தான் அவர் இளைஞர்களின் பாதுகாவலாராக விளங்குகின்றார்.
நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த சமுதாயச் சூழலில் இளைஞர்களை எப்படிப் பார்க்கிறோம், அவர்களுக்கு நாம் எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். “இன்றைய சமுதாயத்தின் அவலங்களையும் அக்கிரமங்களையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒலி பெருக்கிகள் இளைஞர்கள்” என்பார் தந்தைப் பெரியார். அதை போன்று கவிஞர் வைரமுத்து, “நியாத்தை நிலைநாட்டத் துடிக்கும் நேரிய உள்ளமும் அநீதிக்குச் சிறுதும் அடிபணியாத இரும்பு நெஞ்சமும் நாளைய உலகை நலமாக்கும் நம்பிக்கைச் சுடர்களே இளைஞர்” என்று. ஆகவே, இளைஞர்களிடம் இருக்கும் ஆற்றலையும் வல்லமையையும் உணர்ந்துகொண்டு, அவர்களை சரியான முறையில் பயன்படுத்தி, தொன் போஸ்கோவைப் போன்று இந்த சமூகத்தை புதுப்பொழிவு பெறச் செய்வோம்.
எனவே, தூய தொன் போஸ்கோவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடம் விளங்கிய நற்பண்புகளை நமதாக்குவோம். தன்வழியாக இறையருள் பெறுவோம்.
– Palay, Fr. Maria Antonyraj.