ஜனவரி 31
ஜனவரி 31
எபிரேயர் 10: 19-25
“அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டி எழுப்பவும் கருத்தாயிருப்போமாக”
நிகழ்வு
இந்திய மண்ணில் வாழ்ந்து வந்த சாது வாஸ்வானி ஒருசமயம் தன் சீடரோடு பக்கத்துக்கு ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பெரிய மரத்திற்கு அடியில் கிழிந்த ஆடையோடும், உடலெல்லாம் சேறோடும் சகதியோடும் பிச்சைக்காரர் ஒருவர் இருக்கக் கண்டார். அவரைப் பார்த்து இரக்கப்பட்ட சாது வாஸ்வானி அவரருகே சென்று, அவரைப் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றிற்கு தன்னுடைய சீடரின் உதவியுடன் தூக்கிக்கொண்டு சென்று குளிப்பாட்டினார். பின்னர் அவரை முன்பு அவர் அமர்ந்திருந்த இடத்திற்குத் தூக்கிக்கொண்டு வந்து அமர வைத்து, தான் உடுத்தியிருந்த மேலாடையைக் கழற்றி அவருக்குப் போர்த்தினார். சாது வாஸ்வானி தன்னுடைய தலையில் தொப்பி ஒன்றை அணிந்திருந்தார். அதையும் அவர் கேட்டதால், உடனே அதைக் கழட்டிக்கொடுத்துவிட்டு, தொடர்ந்து நடக்கத் தொடங்கினார்.
இதைப் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த சாது வாஸ்வானியின் சீடர் அவரிடம், “ஐயா! உங்களிடத்தில் இருந்த மேலாடை, தொப்பி முதற்கொண்டு எல்லாவற்றையும் அந்த பிச்சைக்காரரிடம் கழற்றிக் கொடுத்துவிட்டீர்களே... ஏன் அப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சாது வாஸ்வானி அவரிடம், “கடவுள் எனக்கு இந்த மேலாடையையும் தொப்பியையும் கொடுத்ததே, வறியநிலையில் இருக்கின்ற ஒருவருக்குக் கொடுத்து உதவத்தான். அப்படியிருக்கும்போது, என்னிடம் கொடுக்கப்பட்டதை நான் மட்டும் வைத்திருப்பேனாகில், நான் மிகப்பெரிய சுயநலவாதி ஆகிவிடுவேன்” என்றார்.
நம்முடைய வாழ்வும் சரி, நம்மிடம் கொடுக்கப்பட்ட கொடைகளும் திறமைகளும் சரி, நமக்கானதல்ல அது பிறருக்கானது என்ற ஆழமான உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
தன்னலம் கடந்து, பொதுநலத்துடன் கூடிய வாழ்வு
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர், “அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டி எழுப்பக் கருத்தாயிருப்போமா” என்று கூறுகின்றார். இவ்வார்த்தைகளை இதற்குப் பின்னால் வரக்கூடிய ‘சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை’ என்று வார்த்தைகளோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும்.
எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர், இந்தத் திருமுகத்தை எழுதிய காலத்தில், அவருடைய சபையில் இருந்தவர்கள் சபைக்கூட்டங்களில் ஒழுங்காகக் கலந்துகொள்ளாமல் இருந்தார்கள். இங்கே ஓர் உண்மையை நாம் நம்முடைய மனதில் பதிய வைத்துகொள்ளவேண்டும். சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது என்பது இறைவனை வழிபடுவதற்கு மட்டுமில்லை, சபையில் சபையில் சகோதர, சகோதரிகளை உற்சாகப்படுத்துவதற்கும் அன்பினால், நற்செயல்கள் தேற்றுவதற்கும்தான். எபிரேயர்கள் மத்தியில் அப்படிப்பட்ட வழக்கம் குறைந்துபோனதால்தான், ஆசிரியர் இவ்வாறு எழுதுகின்றார்.
எபிரேயர்களிடத்தில் இருந்த இதே வழக்கம்தான் கொரிந்து நகர மக்களிடத்திலும் இருந்தது. ஆனால் அது சான்று வித்தியாசமாக இருந்தது. ‘அகாப்பே’ விருந்துக்கு வந்த செல்வந்தர்கள், தாங்கள் கொண்டுவந்த உணவை தாங்கள் மட்டுமே உண்டுவிட்டு, உணவில்லாமல் வந்த ஏழை, எளிய மக்களைக் கண்டும் காணாமல் போனார்கள். அதனால்தான் பவுலடியார்கள் அவர்களிடம், “நீங்கள் ஒன்றாகக் கூடிவந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல, ஏனெனில் நீங்கள் உண்ணும் நேரத்தில், ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த உணவை மற்றவர்களுக்கு முன்பே உண்டுவிடுகிறீர்கள். இதனால் சிலர் பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள்” என்கின்றார் (1 கொரி 11:20-21). கொரிந்து நகர மக்களிடம் பொதுநலம் இல்லாமல், தன்னலம் மட்டுமே இருந்தது. அதனால்தான் பவுலடியார் அவர்களை இவ்வாறு கடிந்துகொள்கிறார்.
ஆகையால், இறைவனின் திருப்பெயரால், இறைமக்கள் சமூகமாக ஒன்றாகக் கூடிவருகின்ற ஒவ்வொருவரும் தன்னல நாட்டங்களைத் தவிர்த்துவிட்டு, பிறர் நலத்தில் அக்கறை கொண்டு, அன்பினாலும் நற்செயல்களாலும் நல்வாக்காலும் ஒருவரை ஒருவர் தேற்றவேண்டும். அதுதான் நாம் இறைமக்கள் சமூகம், இறைவனின் அன்பு மக்கள் என அழைக்கப்பட தகுதியுள்ளதாக இருக்கும். அப்படியில்லாத பட்சத்தில் நம்முடைய வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் அனைத்தும் வெற்றுச் சடங்குகளாகவே இருக்கும்.
சிந்தனை
“நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றது” என்பார் தூய யாக்கோபு (யாக் 2:20). ஆம், நம்முடைய நம்பிக்கை வாழ்வு ஆண்டவரிடத்தில் வேரூன்றியதாக இருக்கவேண்டும். அப்படி இருக்கின்ற வாழ்வு அடுத்தவர் மட்டில் அன்பு காட்டக்கூடியதாக, வறியவரைக் கண்டு இரங்கக்கூடியதாக, சோர்ந்து போனவருக்கு ஊக்கமூட்டக் கூடியதாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட வாழ்வே உண்மையான சீடத்துவ வாழ்வு.
ஆகவே, நம்முடைய வாழ்வை அன்பாலும் நற்செயல்களாலும் நிரம்பி, அதற்கு செயல் வடிவம் கொடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.