திங்கள்கிழமை
பொதுக்காலம் இரண்டாம் வாரம்
திங்கள்கிழமை
மாற்கு 2:18-22
இயேசு எழுதிய புதிய சாசனம்
நிகழ்வு
ஒருசமயம் ஆராய்ச்சியாளர் ஒருவர் ஓர் அறையில் எட்டுக் குரங்குகளை வைத்தார். பின்னர் அந்த அறையின் நடுவே கூரையிலிருந்து ஒரு வாழைப்பழத் தாரைத் தொங்கவிட்டார். குரங்குகள் அந்த வாழைப்பழத் தாரிலிருந்து பழங்களை எடுப்பதற்கு மிகவும் வசதியாக கூடவே ஒரு ஏணியையும் வைத்தார்.
வாழைப்பழத் தாரைப் பார்த்ததும் ஒரு குரங்கு ஏணியில் வேகமாக ஏறியது. அந்நேரத்தில் ஆராய்ச்சியாளர் மற்ற ஏழு குரங்குகளின்மீதும் குளிர்ந்த நீரைப் பீய்ச்சியடித்தார். இது அவற்றைத் துன்பத்திற்கு உள்ளாக்கியது.
ஒரு குரங்கு ஏணியில் ஏறி, வாழைப்பழத் தாரிலிருந்த பழங்களைப் பறித்துக்கொண்டு வந்ததைப் பார்த்த இன்னொரு குரங்கு, ஏணியில் ஏறி வாழைப்பழத் தாரிலிருந்து பழங்களைப் பறிக்க விரைந்தது. அப்போதும் ஆராய்ச்சியாளர் மற்ற குரங்குகளின்மீது குளிர்ந்த நீரைப் பீய்ச்சியடித்தார். இது அவற்றை இன்னும் அதிகமாக துன்பத்திற்கு உள்ளாக்கியது. இப்படியே மூன்று நான்கு முறை அவர் தொடர்ந்ததும், ஏதாவது ஒரு குரங்கு ஏணியில் ஏறி, பழத்தைப் பறிக்கத் தொடங்கினால், ஏனைய குரங்குகளின்மீது குளிர்ந்த நீரானது பீச்சி அடைக்கப்படும் என்ற ஒருவிதமான பய உணர்வானது அவைகளைத் தொற்றிக்கொண்டது. இதனால் ஒரு குரங்கு பழத்தைப் பறிக்க முயற்சித்தால், மற்ற குரங்குகள் அதை அடித்து பழங்களை எடுக்கவிடாமல் தடுக்கத் தொடங்கின.
சிறிதுநேரத்திற்குப் பின்பு ஆராய்ச்சியாளர் அந்த எட்டுக் குரங்கில் ஒரு குரங்கை வெளியே எடுத்துவிட்டு புதிதாக ஒரு குரங்கை உள்ளே விட்டார். இப்போது புதிதாக உள்ளே வந்த குரங்கு வாழைப்பழத் தாரைக் கண்டதும், அதிலிருந்து பழங்களை எடுக்க ஏணியில் வேகமாக ஏறத்தொடங்கியது. இதைக் கண்டதும் மற்ற குரங்குகள் அந்த புதிய குரங்கை அடித்துக் கீழே இறக்கின (குளிர்ந்த நீர் பீய்ச்சி அடிக்கப்படாமலே). தன்னை எதற்கு மற்ற குரங்கு அடிக்கின்றன என்று புரியாமலே அந்த புதிய குரங்கு கீழே வந்தது. ஆனால் வாழைப்பழத்தை எடுத்தால் அடிவிழும் என்பது மட்டும் அதற்கு நன்றாகப் புரிந்தது.
மீண்டும் ஆராய்ச்சியாளர் பழைய குரங்குகளிலிருந்து ஒரு குரங்கை எடுத்து வெளியே விட்டுவிட்டு புதிய குரங்கு ஒன்றை உள்ளேவிட்டார். அதுவும் பழத்தைக் கண்டதும் பறிப்பதற்கு ஏணியில் வேகமாக ஏறியது. ஆனால் அந்தக் குரங்கு பழத்தைப் பறித்தால், தங்கள்மீது குளிர்ந்த நீர் பீய்ச்சப்படும் என்ற பயத்தில் புதிய குரங்கை மற்ற குரங்குகள் அடித்துக் கீழே இறக்கின. இப்படியே பழைய குரங்குகள் ஒவ்வொன்றாக வெளியே எடுத்துவிடப்பட்டு, புதிய குரங்குகள் உள்ளே கொண்டுவரப்பட்டன. இப்போது ஏதாவது ஒரு குரங்கு பழத்தைப் பறிக்க ஏணியில் ஏறினாலும்கூட, குளிர்ந்த நீர் பீய்ச்சியடிக்கப்படாமலே அவை அந்தக் குரங்கை அடித்துக் கீழே தள்ளின.
குரங்குகளை வைத்து இப்படியோர் ஆராய்ச்சியைச் செய்து முடித்த அந்த ஆராய்ச்சியாளர், “மனிதர்களும் இப்படித்தான் ஒரு விஷயத்தை ஏன் செய்கிறோம், எதற்காகச் செய்கின்றோம் என்று தெரியாமல் செய்கிறார்கள்” என்று ஆராய்ச்சி முடிவை எழுதி முடித்தார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் சிலர், நோன்பு பற்றிய கேள்வியைக் கேட்டபோது, அவர் அவர்களிடம் இருவேறுவிதமான உருவகங்களைச் சொல்லி அவர்களுக்கு அவர்களுக்குப் பதிலளிக்கின்றார். இதில் இயேசு பயன்படுத்திய இரண்டாவது உருவகத்தை மட்டும் எடுத்து இன்றைய நாளில் சிந்தித்துப் பார்ப்போம்.
‘எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை’. அவ்வாறு ஓட்டுப்போட்டால் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும்’. இது மறுக்க முடியாத உண்மை. ஆண்டவர் இயேசு தான் ஏற்படுத்த இருந்த புதிய உடன்படிக்கையின் வழியாக (லூக் 22: 19-20) பழையதும் அதேநேரத்தில் நாள்பட்டதுமான உடன்படிக்கையை மறையச் செய்ய இருந்தார்(எபி 8:13). மேலும் இந்த உடன்படிக்கை முந்தைய உடன்படிக்கையைப் போன்று கல்லில் எழுதப்படும் ஒன்றல்ல, மாறாக மனித இதயத்தில் எழுதப்படும் உடன்படிக்கை (2 கொரி 3:3). ஆகவே, இத்தகைதோர் உடன்படிக்கையை தான் ஏற்படுத்த இருப்பதால்தான் இயேசு பழைய ஆடை என்னும் மோசேயின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை புதிய துணி என்னும் தன்னுடைய உடன்படிக்கையோடு ஓட்டுப்போட்டுவது நல்லதல்ல, என்று கூறுகின்றார்.
ஆகையால் கண்மூடித்தனமாகவும் அர்த்தம் புரியாமலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நோன்பும் இன்ன பிற சடங்குமுறைகளும் இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டு, புதுப்படைப்பாக மாற்றப்பட்ட ஒருவருக்குத் தேவையில்லை என்பதுதான் இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது (2 கொரி 5:17)
சிந்தனை
சடங்குகள், சம்பிராதயங்கள் இவற்றை விடவும், ஆண்டவர் இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் அன்புக் கட்டளை பெரியது. ஆகவே, நாம் ஆண்டவரின் அன்புக் கட்டளையின் படி நடந்து, புதுப்படைபாக மாறுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.