21 சனவரி 2019, திங்கள்

தூய ஆக்னஸ்

தூய ஆக்னஸ் (ஜனவரி 21)

நிகழ்வு

ஆக்னஸ் பிறப்பிலே பேரழகியாக இருந்தாள். அவளுக்குப் பதிமூன்று வயது நடந்துகொண்டிருந்தபோதே நிறைய மாப்பிளைகள் (Suitors) அவளைப் பெண்பார்க்க வந்தார்கள். ஆனால் ஆக்னசோ, ‘நான் ஆண்டவருக்கு என்னை அர்ப்பணித்துவிட்டேன். அதனால் யாரையும் மணமுடிப்பதாய் இல்லை” என்று சொல்லி எல்லாரையும் அனுப்பிவிட்டாள்.

இதில் சினமடைந்த மாப்பிள்ளை ஒருவன் ஆக்னசைக் கட்டி இழுத்துச் சென்று விபச்சார விடுதியில் கொண்டுபோய் விட்டுவிட்டான். அப்போது அவள் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அங்கு நிறைய ஆண்கள் அவளைத் தொட முயன்றார்கள். ஆனால், அவளுடைய முகத்திலிருந்து வெளிப்பட்ட பிரகாசமான ஒளியைக் கண்டு அவர்கள் மிரண்டுபோய் பின்வாங்கத் தொடங்கினார்கள். அப்படியும் ஓர் இளைஞன் ஆக்னசை அணுகிச் சென்று, அவளிடம் தன்னுடைய ஆசையைத் தீர்த்துக்கொள்ள நினைத்தான். ஆனால், திடிரென்று ஏதோ ஒரு ஒளி தாக்க, அவன் அந்த இடத்திலேயே குருடாகிப்போனான். கடைசியில் ஆக்னஸ்தான் அவன்மீது இரக்கப்பட்டு, அவனுக்காக இறைவனிடம் ஜெபித்து, அவனுக்குப் பார்வை மீண்டும் கிடைக்க உதவி செய்தாள்.

வாழ்க்கை வரலாறு

தொடக்கத் திருச்சபையில் இருந்த எல்லாருக்கும், ஏன் தூய அகுஸ்தினார், தூய அம்புரோசியார் உட்பட யாவருக்கும் முன்மாதிரிகையான புனிதையாக ஒருவர் இருந்தார் என்றால், அது தூய ஆக்னசைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது. தூய ஆக்னஸ் கி.பி. 292 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.305 ஆம் ஆண்டுவரை வெறும் பதிமூன்று ஆண்டுகளே வாழ்ந்திருக்கின்றார் என்று அவருடைய வாழ்க்கைக் குறிப்பு சொல்கின்றது. ஆக்னஸ் சிறுவயதிலே தன்னை கடவுளுக்கு அர்ப்பணித்து, அவர் ஒருவருக்காக வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் நிறைய ஆண்கள் ஆக்னஸின் அழகில் மயங்கி அவளை மணம்முடித்துக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் அவர், “நான் ஆண்டவருக்கு என்னை அர்ப்பணித்துவிட்டேன். அதனால் யாரையும் மனமுடிப்பதாய் இல்லை” என்று சொல்லி வந்த எல்லாரையும் மறுத்துவிட்டார். இதில் சினமடைந்த ஓர் இளைஞன்தான் ஆக்னசை கட்டி இழுத்துச் சென்று, அவளை விபச்சார விடுதியில் தள்ளினான். அங்கே ஆக்னஸ் அடைந்த கொடுமைகளுக்கு அளவே இல்லை.

தான் விபச்சார விடுதியில் தள்ளப்பட்டாலும் ஆக்னஸ் தன்னுடைய கற்பைக் காத்துக்கொள்ள மிகக் கடுமையாகப் போராடினாள். யாராவது அவளை அணுகிச் சென்றால், அவளுடைய முகத்திலிருந்து வெளிப்பட்ட பிரகாசமான ஒளி அவர்களைத் தாக்கி அவர்களை நிலைகுலையச் செய்தது. இதனால் அவரை அணுகிச் செல்ல யாவருமே பயந்தார்கள். இதற்கிடையில் ஆக்னஸின் மீது பயங்கரக் கோபத்துடன் இருந்த கூட்டம் அவரை கொன்று போட்டது. இவ்வாறு ஆக்னஸ் இறுதிவரைக்கும் தன்னுடைய புனிதத்தில் உறுதியாய் இருந்து, தன்னை கடவுளுக்கு உகந்த நறுமணம் கமழும் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

ஆக்னஸின் உடல் உரோமை நகருக்கு ஒன்றரைக் கிலோமீட்டருக்கு வெளியே இருந்த அவருடைய பெற்றோரின் கல்லறைக்கு அருகிலே அடக்கம் செய்யப்பட்டது. 630 ஆம் ஆண்டில் திருத்தந்தை ஹோனோரியுஸ் என்பவர் ஆக்னஸின் உடல் இருந்த கல்லறைக்கு மேலே ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பி அவருடைய புகழ் உலகமெங்கும் பரவச் செய்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

கற்பிற்கும், தூய்மைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய தூய ஆக்னஸின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


1. புனிதத்தில் – தூய்மையில் மேலோங்கி வளர்வோம்

லேவியர் புத்தகம் 19:2 ல் வாசிக்கின்றோம், “தூயோராய் இருங்கள், ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவர்” என்று. தூய ஆக்னஸின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் எந்தளவுக்கு தூயவராய் கற்பு நெறியில் வாழ்ந்து வந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. தூய ஆக்னசைப் போன்று நாம் புனிதத்தில் – தூய்மையில் – கற்பில் சிறந்து விளங்குகின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல நேரங்களில் நாம் சுய கட்டுப்பாடு இல்லமால், நம்முடைய உடல் இச்சைகளுக்கு அடிமையாகி பாவத்தில் விழுந்துவிடுவது மிகவும் துரதிஸ்டவசமானது.

பணக்காரர் ஒருவர் உயர்ரக நாய் ஒன்றை வாங்கி தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்தார். அவர் அந்த நாயின்மீது தனிப்பட்ட கவனம் செலுத்தினார் நாயும் அவர்மீது ஏறி அமர்வதும், அவருடைய முகத்தில் நாக்கால் வருடிக்கொடுப்பதுமாக தன்னுடைய அன்பை அவருக்கு வெளிப்படுத்தியது. ஒருநாள் அவரைப் பார்க்க அவருடைய நண்பர் ஒருவர் அவருடைய வீட்டிற்கு வந்தார்.. நண்பரும் அவரும் வராந்தாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது வழக்கம்போல பணக்காரரின் நாய் அவர்மீது ஏறி அமர்வதும் அவருடைய முகத்தை நாக்கால் வருடிக்கொடுப்பதுமாக இருந்தது. இது அவருடைய நண்பருக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.

நண்பர் அவரிடமிருந்து விடைபெறும்போது சொன்னார், “நண்பா! உன்னுடைய வீட்டில் இருக்கின்ற நாய் உனது செல்ல நாயாக இருந்தாலும், அது அடுத்தவர் உன்னுடைய வீட்டிற்கு வருகின்றபோது, அது வந்து உன்மீது ஏறி அமர்வதையும் இன்ன பிற காரியங்களையும் செய்வதைப் பார்க்கின்றபோது அருவருப்பாக இருக்கின்றது. அதனால் அதனை ஒரு கட்டுக்குள் வைத்திரு. இல்லையென்றால் உன்னுடைய வீட்டிற்கு வரக்கூடியவர்கள் முகம் சுழித்துக்கொண்டு போகும் நிலை ஏற்படும்”.

அதன்பிறகு அந்தப் பணக்காரர் தன்னுடைய நாய் எப்போதெல்லாம் தன்மீது ஏறி அமர வருமோ, அப்போதெல்லாம் ஒரு அதட்டு அதட்டி, அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இந்த நிகழ்வினை ஒரு உருவகமாக எடுத்துக்கொள்ளலாம். கதையில் வரும் பணக்காரர்தான் நாம். நாய் நம்முடைய உணர்வுகள், பணக்கரார் தன்னுடைய நாயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காத அது அவருக்கு அவப்பெயரைத் தந்தது. அது போன்றுதான் நாமும் நம்முடைய உணர்வுகள் கட்டுக்குள் வைத்திருக்காதபோது, நாம் ஒழுக்க நெறியின்படி வாழாதபோது நாம் அவமானத்திற்குத்தான் உள்ளாகவேண்டும். மாறாக, நாம் தூயவர்களாய் வாழ்கின்றபோது, புனிதத்தில் மேலும் மேலும் வளர்கின்றபோது இறைவனுக்கு மிக நெருக்கமாகுவோம் என்பது உறுதி.

ஆக்னஸ் தூய்மையில் – புனிதத்தில் - மேலோங்கி வளர்ந்தார், அதனால்தான் அவர் கடவுளுக்கு மிக நெருக்கமானவர் ஆனார். ஆகவே, தூய ஆக்னஸின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவரைப் போன்று தூய வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.