21 சனவரி 2019, திங்கள்

ஜனவரி 21

ஜனவரி 21

 

எபிரேயர் 5: 1-10

 

தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் மீட்படையக் காரணமான இயேசு

 

நிகழ்வு

 

       சிறுவன் ஒருவன் தன்னுடைய வீட்டுக்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் அங்கும் இங்கும் ஓடியாடி, மரத்தில் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தான். மகன் தோட்டத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று பார்ப்பதற்காக, தற்செயலாக அங்கு வந்த அவனுடைய தந்தை, “பிலிப்! சத்தம் போடாமல் இங்கு ஓடிவந்துவிடு” என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் தந்தை சொல்லிவிட்டாரே என்பதற்காக, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, மரத்திலிருந்து வேகமாகக் கீழே இறங்கி,  அவரிடத்தில் ஓடி வந்தான்.

 

அவரை அடைந்ததும் அவன் மூச்சிரைக்க அவரிடம், “ஏன்பா! என்னை ஓடிவரச் சொன்னீர்கள்” என்று கேட்டான். அதற்கு அவனுடைய தந்தை அவனிடம், “தம்பி நீ நின்றுகொண்டிருந்த இடத்தை சற்று திரும்பிப் பார்” என்றார். அவன் திரும்பிப் பார்த்தபோது, பத்தடிக்கும் பெரிதான ஒரு மலைப்பாம்பு அங்கே தொங்கிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து மிரண்டுபோன அவன், “அப்பா! நான் மட்டும் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடந்திருக்காவிட்டால், இப்போது நான் உயிரோடு இருந்திருக்கமாட்டேன். என் உயிரைக் காப்பாற்றியதர்காங்க ரொம்ப தேங்க்ஸ் பா” என்றான். அதற்கு அவனுடைய தந்தை, “இன்றைக்கு மட்டுமல்லாம், என்றைக்கும் நீ என்னுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அது உனக்கு நலம் பயக்கும்” என்றார்.

 

எப்படி சிறுவன் பிலிப், தந்தையின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, சாவிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டானோ, அதுபோன்று நாமும் ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவர் வழி நடந்தால், வாழ்வடைவது உறுதி.

 

இயேசு - கீழ்ப்படிதலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு

 

       கடவுளோடு, கடவுளாக இருந்த வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து, இந்த உலகை மீட்கவேண்டும் என்ற தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்தார். அதற்காக மனுவுரு எடுத்து, பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார். தான் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்கு முன்பாக, கெத்சமணித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்து, “தந்தையே, உமக்கு விருப்பமானால் இந்த துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று ஜெபித்தார் (லூக் 22:42). இவ்வாறு கடைசிவரைக்கும் கடவுளின் திருவுளத்திற்கு, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்து, இயேசு கீழ்ப்படிதலுக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றார்.

 

தமக்குக் கீழ்ப்படிவோர் மீட்படையக் காரணமான இயேசு

 

        தந்தைக் கடவுளின் திருவுளத்திற்கு/ அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்து, கீழ்ப்படிதலுக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இயேசு, தனக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் மீட்படையக் காரணமாக இருக்கின்றார். இங்கே எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர், கீழ்ப்படிதல் என்று எதைச் சுட்டிக்காட்டுகின்றார்?, இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் நாம் எப்படி மீட்பினைக் பெற்றுக்கொள்கின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் நல்லது.

 

இங்கே கீழ்ப்படிதல் என்று சொல்லப்படுவதை, இறைவனின் வார்த்தையை நம்பி, அதனை வாழ்வாக்குதல் என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம். இதை ஒட்டி தூய பேதுரு ஒரு செய்தியைச் சொல்வார், “உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மையடைந்துள்ளதால், நீங்கள் வெளிவேடமற்ற முறையில் அன்பு காட்ட முடியும்” என்று. (1 பேதுரு 1:22). இதன்மூலம் பேதுரு சொல்லக்கூடிய செய்தி, நாம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன்மூலம் நம்முடைய ஆன்மா தூய்மை அடைகின்றது. அதன்மூலம் நாம் ஒருவர் மற்றவரை உள்ளார்ந்த விதமாய் அன்பு காட்ட முடியும்” என்று. எப்போது நாம் உண்மையான அன்பு காட்டுகின்றோமோ, அப்போது நாம் இறைவன் வழங்குகின்ற மீட்பினைப் பெறுவதற்குத் தகுதி உள்ளவர்கள் ஆகிவிடுவோம். ஆகையால், கீழ்ப்படிதல் என்ற ஒரு பண்பு, நம்முடைய மீட்பிற்குக் காரணமாக இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாது.

 

தொடக்கத்தில் ஆதிப் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்படியாமல் போனதால், பாவம் இந்த உலகத்திற்குள் நுழைந்தது. ஆனால், அது மரியா ஆம் என்று சொல்லி, இறைவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தனால், அவர் மகன் இயேசுவின் வழியாக பாவத்திற்கும் சாவிற்கும் சாவுமணி அடிக்கப்பட்டது.

 

சிந்தனை

 

இன்றைக்கு யாரையும் மதிக்காமல், யாருக்கும் கீழ்ப்படியாமல் நடக்கின்ற போக்கானது நிலவிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய போக்கு முடிவுக்கு வரவேண்டும்; நாம் ஒவ்வொருவரும் இறைவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றவர்களாக மாறவேண்டும்.

 

ஆகவே, நாம் இறைவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக அவர் தருகின்ற மீட்பினையும் அருளையும் நிறைவாய் பெறுவோம்.