சனிக்கிழமை
பொதுக்காலம் முதல் வாரம்
சனிக்கிழமை
மாற்கு 2:13-17
“
இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?”
நிகழ்வு
அது ஒரு தனியார் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தில் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்து வந்த மாணவர்களுக்கு அவர்களுடைய வகுப்பு ஆசிரியர் ஒருநாள் ஒரு தேர்வு வைத்தார். அந்தத் தேர்வில் முதலாவதாகக் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்: “நம்முடைய பள்ளிக்கூடத்தை ஒவ்வொருவரும் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளரின் பெரியரென்ன?”
இப்படியொரு கேள்வியை சிறிதும் எதிர்பாராத மாணவர்கள், “இதெல்லாம் ஒரு கேள்வியென்று கேட்டிருக்கிறாரே!” என்று ஆசிரியருக்கு எதிராக முணுமுணுத்தனர். இன்னும் ஒருசில மாணவர்கள் எழுந்து, “சார்! இந்தக் கேள்வியைத் தவிர்த்துவிட்டு, அடுத்த கேள்விகளுக்கான விடை எழுதலாமா? என்று கேட்டார்கள். அதற்கு வகுப்பு ஆசிரியர் அவர்களிடம், “இந்தக் கேள்வியைத் தவிர்த்துவிட்டு, அடுத்த கேள்விகளுக்கான விடை எழுதினாலும் நீங்கள் தேர்வில் தோற்றுத்தான் போவீர்கள். ஏனெனில் இந்தக் கேள்விக்கான விடைக்கு நூற்றுக்கு தொண்ணூறு மதிப்பெண்கள்” என்றார். இதைக் கேட்டுவிட்டு அனைத்து மாணவர்களும் பேயறைந்தவர்கள்போல் இருந்தார்கள்.
அப்போது வகுப்பு ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துச் சொன்னார், “சாதாரண ஒரு துப்புரவுப் பணியாளர்தானே, அவரைப் பற்றி அல்லது அவருடைய பெயரைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப்போகிறது என்று நினைக்காதீர்கள். இதுபோன்ற சாதாரண மக்களால்தான் இந்த சமூகம், ஏன் நாம்கூட நன்றாக இருக்கமுடிகிறது. அவர்கள் மட்டும் தங்களுடைய பணிகளை ஒருநாள் நிறுத்திவிட்டால், நம் பாடு பெரும்பாடுதான்”.
நாம் வாழும் இந்த சமூகம் பணம் படைத்தவர்களையும் பகட்டாக இருப்பவர்களையும்தான் பெருமையோடு நினைத்துப் பார்க்கின்றது. சாதாரண மக்களையும் வறியவர்களையும் கண்டுகொள்வதே இல்லை. இதற்கு முற்றிலும் மாறாக ஏழைகளோடு ஏழையாக, வறியவர்களோடு வறியவராக இருந்து, அவர்களுக்கு மத்தியில் அன்புப் பணிசெய்த ஆண்டவர் இயேசுவைக் குறித்து இன்றைய வாசகத்தின் வழியாக சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
பாவிகளையே அழைக்க வந்த இயேசு
நற்செய்தி வாசகத்தில் இயேசு, பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் விருந்துபதைப் பார்த்த மறைநூல் அறிஞர்கள் அவருடைய சீடர்களிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்கின்றார்கள். இதைக் கேட்ட இயேசு அவர்களிடம், “நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்கின்றார்.
அனைவரும் மீட்புப்பெறவேண்டும் என்பதற்காக (1 திமொ 2:4) வந்த இயேசு இங்கு “பாவிகளையே அழைக்க வந்தேன்” என்று சொல்லக் காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இயேசு அனைவருக்கும் மீட்புக் கொடுக்க வந்தபோதும், தங்களை நேர்மையாளர் என்று அழைத்துக்கொண்டவர்கள் இயேசுவை யாரென்றே தெரியாமல் இருந்தார்கள், அல்லது இயேசுவைப் பற்றித் தெரிந்திருந்தபோதும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளாமலும் அவருடைய தேவையை உணராமலும் இருந்தார்கள். அதனால் அவர்கள் இயேசு அளிக்க வந்த மீட்பைப் பெற்றுக்கொள்ளத் தகுதியற்றுப் போனார்கள். ஆனால், பாவிகள் அப்படியில்லை, அவர்கள் இயேசுவை யாரென்று அறிந்திருந்தார்கள், அறிந்ததோடு மட்டுமல்லாமல், அவர்மீது நம்பிக்கை வைத்து அவரைப் பின்தொடரவும் செய்தார்கள். இது மட்டுமல்லாமல், பாவிகளுக்கு கடவுளின் அன்பு மற்றவர்களைவிட அதிகமாகத் தேவைப்பட்டது. எனவேதான் இயேசு பாவிகளையே அழைக்க வந்தேன் என்று சொல்கின்றார்.
பாவநோய் போக்க வந்த இயேசு
நற்செய்தி வாசகத்தில் ‘பாவிகளையே அழைக்க வந்தேன்’ எனச் சொல்லும் இயேசு, ‘நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை’ என்றும் சொல்கின்றார். இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
யூதர்கள் மத்தியில் நோயானது பாவத்தினால் வருகின்றது என்ற கருத்தானது ஆழமாகப் பதிந்திருந்தது (யோவா 9: 1-3). இன்னும் சொல்லப்போனால் பாவும் நோயும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று நம்பப்பட்டது. இதனை நன்குணர்ந்த இயேசு, “(பாவ)நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை, நோயற்றவருக்கு அல்ல” என்கின்றார். அதாவது தன்னை யாராரெல்லாம் பாவி என்று உணர்கின்றார்களோ அப்படிப்பட்டவர்களுக்கு நான் பாவ நோய் போக்கும் மருத்துவராக இருக்கிறேன் என்கின்றார் இயேசு.
நாம் எப்போது நம்முடைய தவற்றை உணர்ந்து, இறைவனின் அருட்பெருக்கை எதிர்நோக்கிக் காத்திருக்கப் போகிறோம் என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
சிந்தனை
இயேசு, தான் வாழ்ந்த காலத்தில் இருந்த ஏழைகள், பாவிகள் இவர்களோடு தன்னை ஐக்கியபடுத்துக்கொண்டு, அவர்களுடைய மீட்புக்காக தன்னையே அர்ப்பணித்தார். நாமும் நம்மோடு வாழக்கூடிய ஏழைகள், அனாதைகள் இவர்கள்மீது தனிப்பட்ட அன்புகாட்டி, அவர்கள் வாழ்வு ஏற்றம்பெற உழைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.