19 சனவரி 2019, சனி

தூய கனூத்

தூய கனூத் (ஜனவரி 19)

நிகழ்வு

டென்மார்க்கின் மன்னர் ஹெரால்டின் இறப்புக்குப் பிறகு அவருடைய சகோதரரான கனூத் டென்மார்க்கின் மன்னராக மணிமுடி சூட்டப்பட்டார். அப்போது கனூத் தனக்கு அணிவிக்கப்பட்ட மனிமுடியைக் கழற்றி ஆண்டவருடைய திருப்பீடத்தில் வைத்து “இந்த மணிமுடியும் பேரும் புகழும் நீர் தந்தது. அதனால் எல்லாம் உனக்குச் சொந்தம்” என்றார். அப்போது அவரைச் சூழ்ந்திருந்த கூட்டம் இதைக் கேட்டு மன்னர் கனூத் இந்தளவுக்குத் தாழ்ச்சி நிறைந்தவராக இருக்கின்றாரே என்று அவரைப் போற்றிப் புகழ்ந்தனர்.

வாழக்கை வரலாறு

கனூத், 1042 ஆம் ஆண்டு டென்மார்க்கின் மன்னராகிய ஸ்வைன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவரோடு உடன்பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். அவருடைய தந்தை ஸ்வைனின் மறைவிற்குப் பிறகு கனூத்தின் சகோதரரான ஹெரால்டின் என்பவர் டென்மார்க்கின் மன்னரானார். அவரும் சில ஆண்டுகளிலேயே இறந்துவிடவே, கனூத் மன்னராக வேண்டிய நிலை உருவானது.

கனூத் வளரும்போதே இறைபற்றோடு வளர்ந்ததால், அரசனாக உயர்ந்தபின்பு டென்மார்க் திருச்சபையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பினைச் செய்தார். குறிப்பாக நிறைய நிலங்களை ஆலயத்திற்காக தானமாகக் கொடுத்தார்; அனைத்துப் புனித நாட்களையும் சரியான விதத்தில் கடைப்பிடிக்கவேண்டும் என்னும் வழக்கத்தை கொண்டுவந்தார்; லுந்த் பேராலயம் எழுப்பப்பட பெரிதும் உதவி செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக ரோங்கில்டு பேராலயம் கற்களாலேயே கட்டி எழுப்பப்பட எல்லாவிதமான உதவிகள் செய்தார். அவர் கனூத் ஆலயத்திற்காக நிறைய உதவிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், மக்களுடைய வளர்ச்சிக்கும் பெரிதும் உதவினார். அவர்களுக்கு தேவையானதைச் செய்துவந்து பொற்கால ஆட்சியினை மலரச் செய்தார்.

இதற்கிடையில் மன்னர் கனூத்தைப் பிடிக்காத ஒருசிலர் அவரைப் பற்றி தவறாக மக்களிடம் சொல்லி, மக்களை அவருக்கு எதிராகத் தூண்டிவிட்டனர். இதனால் டென்மார்க்கில் மிகப்பெரிய கலகம் மூண்டது. இத்தகையதோர் இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல் அவர் பெரிதும் தடுமாறினார். எனவே, அவர் தன்னுடைய கூட்டாளிகள் ஒருசிலரோடு யாருக்கும் அவ்வளவாகத் தெரியாத ஒரு சிற்றாலயத்தில் போய் அடைக்கலம் புகுந்தார். ஆனால், மன்னர் இருக்கின்ற செய்தியை எப்படியோ கேள்விப்பட்ட கலகக்காரர்கள் அந்த சிற்றாலயத்திற்கு வந்து, அவர்மீது அம்பெய்தி அவரைக் கொன்று போட்டார்கள். மன்னர் கனூத் இறக்கின்றபோது ‘தந்தையே இவர்களை மன்னியும்” என்று சொல்லிக் கொண்டே இறந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கனூத்தின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. மன்னித்து வாழ்வோம்.

தூய கனூத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே. அவரிடமிருந்த மன்னிப்புக்கும் பண்புதான். மக்களுக்கு அவர் நல்லதே செய்தபோதும் அவரைப் பிடிக்காத கலகக்காரர்கள் அவரை கொன்றுபோட்டார்கள். அப்போதும் அவர் இறைவனிடம் அவர்களை மன்னிக்கவேண்டும் என்றே மன்றாடி உயிர் துறக்கின்றார். எப்படி ஆண்டவர் இயேசு தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களுக்காக இறைவனிடம் மன்றாடினாரோ, அவரைப் போன்று மன்னர் கனூத்தும் தன்னைக் கொன்றவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுகின்றார். இவ்வாறு தூய கனூத் மன்னிப்பதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகின்றார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் மன்னிக்கும் பண்பில் சிறந்து விளங்குகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நமக்கு எதிராகத் தீங்கு செய்தவர்களை பழிவாங்க நினைக்கின்றோம். பழிவாங்கும் எண்ணம் ஒருபோதும் தீர்வாகாது. மாறாக மன்னிப்பும் அன்பும்தான் இந்த மானுடத்தைத் தழைக்கச் செய்யும்.

இந்த இடத்தில் ஓர் உண்மை நிகழ்வை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்தினை அடைந்திருந்த தருணம். அப்போது ஹிட்லரின் நாசிப்படையினர் இங்கிலாந்தில் உள்ள கவன்டி என்னும் இடத்தில் இருந்த ஓர் ஆலயத்தின்மீது குண்டு வீசி அதனைத் தீக்கிரையாக்கிவிட்டனர். இதனை அறிந்த மக்கள் அனைவரும், ஆண்டவருடைய ஆலயம் இப்படி அழிக்கப்பட்டுவிட்டதே என்று அழுது புலம்பினர். இருந்தாலும் இப்படிப்பட்ட பாதகச் செயலைச் செய்த கயவர்களை அவர்கள் திட்டிகொண்டிருக்கவில்லை, மாறாக அந்த ஆலயத்தில் எரிந்துபோய்க் கிடந்த இரண்டு மரக் கம்புகளை எடுத்து, அதில் சிலுவை செய்து அதற்குக் கீழே ‘தந்தையே இவர்களை மன்னியும்” என்ற வாகத்தைப் பொறுத்து வைத்து, அவர்களுக்காக ஜெபித்தார்.

தீமை செய்தவர்களை வசைபாடாமல் மன்னித்தது கவன்டி நகர இறைமக்களின் உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகின்றது. நாமும் நமக்குத் தீமை செய்தவர்களை மன்னித்து வாழ்கின்றபோது இறைவனின் பார்வையில் உயர்ந்தவர்களாவோம் என்பது உறுதி.

ஆகவே, தூய கனூத்தின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தீமை செய்தவர்களை மன்னித்து அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.