ஜனவரி 19
ஜனவரி 19
எபிரேயர் 4:12-16
“கடவுளுடைய வார்த்தை இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது”
நிகழ்வு
1970 ஆம் ஆண்டு, பங்களாதேஷில் பாகிஸ்தானியர்கள் நடத்திய தொடர் தாக்குதலைத் தொடர்ந்து, பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்த பலர் மேற்கு வங்கத்தில் தஞ்சமடைந்தனர். இப்படி சொந்த மண்ணை விட்டுவிட்டு மேற்கு வங்கத்தில் தஞ்சமடைந்த மக்களுக்கு பலர் உதவிக்கரம் நீட்டினார்கள். நிறைய அருட்சகோதரிகளும் வந்து அவர்களுக்கு மத்தியில் பணிசெய்யத் தொடங்கினார்கள்.
அந்த மக்களுக்கு மத்தியில் பணிசெய்து வந்து ஓர் அருட்சகோதரி, ஒவ்வொருநாளும் அந்த மக்களுக்கு உதவிகள் செய்வதும், கதைகள் சொல்வதும், தன்னிடம் இருக்கும் இசைக்கருவியை மீட்டி, அவர்களை மகிழ்விப்பதுமாக இருந்தார். இதைப் பார்த்துவிட்டு அந்த முகாமில் இருந்த ஒரு பெரியவர், ‘எப்படி உங்களால் என்னைப் போன்றவர்களுக்கு உதவிகள் செய்யமுடிகின்றது?; கவலைகளோடு இருக்கின்ற எங்களுக்கு சந்தோசத்தைத் தரமுடிகின்றது?. இத்தனைக்கும் என்போன்றவர்கள் உங்களைப் பார்த்து சிரிப்பது கிடையாது, நன்றி என்று ஒருவார்த்தை சொல்வது கிடையாது. அப்படியிருந்தபோடும் எப்படி உங்களால் இதுபோன்ற பணிகளைச் செய்ய முடிகின்றது” என்று கேட்டார்.
அதற்கு அந்த அருட்சகோதரி சிரித்துக்கொண்டே பதிலளித்தார். “நானும் என்னைப் போன்றவர்களும் இதுபோன்ற பணிகளைச் செய்வதற்குக் காரணம், நான் வணங்குகின்ற இயேசு, ‘நான் உங்களை அன்பு செய்தது போன்று, நீங்கள் ஒருவர் மற்றவரை அன்புசெய்யவேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். அதனால்தான் நான் இதுபோன்ற பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றேன்”.
இதைக் கேட்டுவிட்டு அந்தப் பெரியவர், “உங்களோடு பேசியதிலிருந்து இயேசுவைக் குறித்து இன்னும் அதிசமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆர்வமாக இருக்கின்றது... எனக்காக ஒரு விவிலியத்தைக் கொண்டுவந்து தரமுடியுமா?” என்று கேட்டார். “விவிலியத்தை இங்கே கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது அல்லவா... இருந்தாலும் உங்களுக்காக நான் ஒரு விவிலியத்தைக் கொண்டுவந்து தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, மறுநாள் ஒரு விவிலியத்தை மறைவாக எடுத்துக்கொண்டு வந்து, அந்த பெரியவரிடம் கொடுத்தார்.
அருட்சகோதரியிடமிருந்து விவிலியத்தைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெரியவர் பொறுமையாக வாசிக்கத் தொடங்கினார். அவர் ஒவ்வொரு பகுதியாக வாசிக்க வாசிக்க அவருடைய கண்களில் நீர் தாரைதாரையாக வழியத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல் அவருடையை உள்ளத்தில் பேரமைதி உண்டானது. ஒருமாத காலத்திற்குப் பிறகு விவிலியம் முழுவதையும் வாசித்துவிட்டு, அருட்சகோதரியைச் சந்தித்த அந்த பெரியவர், “அம்மா! நீங்கள் கொடுத்த விவிலியம், என்னுடைய மனைவியையும் மகனையும் கண்ணெதிரே இழந்து, வேதனையில் இருந்த எனக்கு ஆறுதலையும் மனநிம்மதியையும் தந்திருக்கிறது” என்றார்.
இறைவனுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது. அது உள்ளத்தை ஊடுருவக்கூடியது என்பதற்கு இந்த நிகழ்வு போதும்
உயிருள்ள இறைவனின் வார்த்தைகள்
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர், கடவுளின் வார்த்தைக்கு இருக்கின்ற வல்லமையையும், அதனுடைய மகத்துவத்தையும் எடுத்துச் சொல்கின்றார்.
இறைவன் ‘உண்டாகுக’ என்று ஒரு வார்த்தை சொன்னார். உடனே வானும் மண்ணும் கடலும் அதில் உள்ள யாவும், நிலத்தில் உள்ள ஊர்வன, பறப்பன எல்லாம் தோன்றன. அந்தளவுக்கு கடவுளின் வார்த்தை உயிருள்ளதாகவும் ஆற்றலுள்ளதாகும் இருக்கின்றது. இத்தகைய இறைவார்த்தை முதலில் இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் அவர்களோ அதற்கு செவிகொடுக்காமலும், அதனை எடுத்துச் சொன்ன இறைவாக்கினர்களையும் துன்புறுத்தினார்கள். கடைசியில் இறைவார்த்தை – வாக்கு – என்னும் இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். அவரையும்கூட இந்த மக்கள் புறக்கணித்தார்கள். அதனால் அவர் கொண்டு வாழ்வென்னும் கொடையை அவர்கள் இழந்துபோனார்கள்.
நாமும்கூட இறைவார்த்தையை அன்றாடம் கேட்கின்றோம். அதனை நாம் வாழ்வாக்குகின்றோமா? அதன்படி நடக்கின்றோமா? என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் அதன் ஆசிரியர் சொல்கிறார், “வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால், நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமா?” (4:14) என்கின்றார். பற்றிக்கொள்தல் என்றால், அதன்படி வாழ்தல் என்றுகூட நாம் பொருள் எடுத்துக் கொள்ளலாம். ஆம், இயேசுவின் உயிருள்ள இறைவார்த்தையினைப் பற்றிக்கொண்டு வாழ்கின்றபோது, நாம் அவரிடமிருந்து நிறைவான ஆசிரைப் பெறுவது உறுதி.
சிந்தனை
“யாரிடம் போவோம். நிலைவாழ்வு அளிக்கின்ற வார்த்தைகள் உம்மிடதானே உள்ளன” என்பார் தூய பேதுரு. ஆம், இயேசுவின் வார்த்தைகள் உயிருள்ள வார்த்தைகள். நாம் அத்தகைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்கின்றபோது இறையருளை நிறைவாய் பெறுவது உறுதி.
ஆகவே, நாம் உயிருள்ள இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.