புதன்கிழமை
பொதுக்காலம் முதல் வாரம்
புதன்கிழமை
மாற்கு 1:29-39
இயேசுவை நம் இல்லத்திற்கு வரவேற்போம்!
நிகழ்வு
பரம ஏழை ஒருவன் இருந்தான். அவனுக்கு தன் நாட்டு அரசரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து, விருந்து கொடுக்கவேண்டும் என்று நீண்டநாள் ஆசை. ஆனால், அவனிடத்தில் போதுமான வசதியில்லாததால் அவன் தயங்கியவாறே நின்றான். அப்படியிருக்கிற வேளையில் ஒருநாள் அவன் தன்னுடைய உள்ளத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அரசரைச் சென்று சந்தித்து, தன்னுடைய விருப்பத்தை அவரிடத்தில் எடுத்துச் சொன்னான். அரசரும் மிகவும் மகிழ்ச்சியோடு ஒரு குறிப்பிட்ட நாளில் அவனுடைய வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்.
இதைக் கேட்டு அந்த ஏழைக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடினாலும், இன்னொரு பக்கம், ‘அரசர் வீட்டிற்கு வருகின்றபோது அவரைத் தரையிலா உட்கார வைப்பது? நல்லதொரு இருக்கையும் கட்டிலும் வேண்டுமல்லவா!... அறுசுவை உணவு கொடுக்க போதிய பணம்வேண்டும் அல்லவா!... அவரை வரவேற்க பூச்செண்டுகளும் மேளதாளங்கள் வேண்டும்தானே!... இவற்றுக்கெல்லாம் நான் எங்கே போவேன்’ என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான். இப்படி அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் அழகு வேலைப்பாடுகள் நிறைந்த இருக்கையும் கட்டிலும் தரை விரிப்புகளும் பூச்செண்டுகளும் போதுமான பணமும் அவனிடம் கொண்டு வந்து கொடுத்தார்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “நான் என்னென்ன வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ, அவற்றையெல்லாம் கொண்டுவந்து தருகிறீர்கள், உண்மையில் நீங்கள் யார்?” என்று கேட்டான் அவன். அதற்கு அந்த புதிய ஆள், “அதுவெல்லாம் இருக்கட்டும், நேரம் வரும்போது உங்களுக்குத் தானாகவே விளங்கும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார்.
அந்த ஏழையோ புதிய ஆள் கொண்டுவந்த எல்லாப் பொருட்களையும் ஆங்காங்கே எடுத்துவைத்து வீட்டை அழகுபடுத்தி, அறுசுவை உணவு தயாரித்துவைத்து, மேளதாளங்களோடு அரசரை வரவேற்கத் தயாரானான். மாலை வேளையில் அரசர் அவனுடைய வீட்டிற்கு வந்தார். அவரை இன்முகத்தோடு வரவேற்ற அவன், அவருக்கு அறுசுவை உணவு கொடுத்து அவரை உபசரித்தான். பின்னர் அவன் அரசரிடம், “அரசே! இந்த ஏழை என்னுடைய அழைப்பை ஏற்று, நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வருகிறீர்கள் என்று சொன்னதும், உங்களைக் கவனிப்பதற்கான எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்ய பணத்திற்கு என்ன செய்வது என்று நான் குழம்பிக்கொண்டிருந்தேன். அப்போது முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் எனக்குத் தேவையான பொருட்களும் போதுமான பணமும் தந்துவிட்டுப் போனார். அவருடைய தயவில்தான் என்னால் இவற்றையெல்லாம் செய்ய முடிந்தது” என்றார்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அரசர், “நீ என்னை உன்னுடைய வீட்டிற்கு வரவேற்பதில் காட்டுக்கின்ற ஆர்வத்தையும் உன்னுடைய வறிய நிலையையும் அறிந்தேன். அதனால் நான் ஒரு ஆளை அனுப்பி, உனக்குத் தேவையான பொருட்களைத் தனது உதவினேன். மேலும் உன்னுடைய நல்ல மனசுக்காக இந்தப் பொற்காசுகளை வைத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு அவனிடம் பொற்காசுகளைக் கொடுத்துவிட்டு விடைபெற்றுச் சென்றார் அரசர்.
நல்மனதோடு அரசனை தன் இல்லத்திற்கு வரவழைத்து உபசரித்ததால், அரசன் எப்படி அந்த ஏழைகளுக்கு பொற்காசுகள் தந்து, அவனுடைய வாழ்வினை வளம்பெறச் செய்தாரே, அதுபோன்று நாம் இறைவனை நம் உள்ளத்திற்கு/ இல்லத்திற்கு அழைத்து குடியமர்த்தினால், அவரிடமிருந்து ஏராளமான ஆசிர்வாதங்கள் பெறுவது உறுதி.
இயேசுவை வீட்டிற்கு அழைத்த பேதுரு, அந்திரேயா
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவரிடமிருந்து அத்தீய ஆவியை ஒட்டியபின்பு, யோவான் மற்றும் யாக்கோபுவுடன் பேதுரு, அந்திரேயாவின் விட்டிற்குள் செல்கின்றார் அல்லது அவர்களுடைய வீட்டில் வரவேற்கப்படுகின்றார். அங்கு சீமோன் பேதுருவினுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடப்பது குறித்து சொல்லப்படுகின்றார். உடனே இயேசு அவருடைய கையைப் பிடித்துத் தூக்க, காய்ச்சல் அவரை விட்டு நீங்குகின்றது. உடனே அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்குகின்றார்.
சீமோன் மற்றும் அந்திரேயாவின் வீட்டிற்குள் இயேசுவின் வருகை நிகழ்ந்தது, காய்ச்சலாய்க் கிடந்த சீமோன் மாமியாருக்கு குணம் கிடைக்கக் காரணமாக இருக்கின்றது. இங்கே இன்னொரு செய்தியை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். காய்ச்சாலாய்க் கிடந்து குணம்பெறுகின்ற ஒருவர், அதிலிருந்து விரைவிலே மீண்டுவர முடியாது. எப்படியும் ஓரிரு நாட்களாவது பிடிக்கும். ஆனால், நற்செய்தியில் இயேசு சீமோன் பேதுருவின் மாமியாரைக் காய்ச்சலிலிருந்து குணமாக்கியவுடன், உடனே அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கிவிடுகின்றார். இதிலிருந்து இயேசு அளிக்கின்ற குணம் முழுமையானது, வல்லமை நிறைந்தது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
ஆகையால், இயேசுவை நம்முடைய உள்ளத்திலும் இல்லத்திலும் அழைக்கின்றபோது, இதுபோன்ற நன்மைகளை நாம் அதிகமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியாகச் சொல்லலாம்.
சிந்தனை
“இதோ, நான் கதவருகில் நின்றுகொண்டு, தட்டிக்கொண்டிருக்கின்றேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்” என்பார் இயேசு (திவெ 3:20). ஆம், நம் ஆண்டவர் இயேசு நம்மோடு விருந்துண்ண, நமக்கு ஆசிர் வழங்க ஆவலாகக் காத்திருக்கின்றார். ஆகவே, அவரை நமது உள்ளத்தில், இல்லத்தில் வரவேற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.