16 சனவரி 2019, புதன்

தூய ஜோசப் வாஸ்

தூய ஜோசப் வாஸ் (ஜனவரி 16)

நிகழ்வு

1690 களில் அருட்தந்தை ஜோசப் வாஸ் இலங்கையில் உள்ள கண்டியில் நற்செய்திப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் எல்லாரும் உணவில்லாமல், குறிப்பாக மழையில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுப் போனார்கள். இதைப் பார்த்த குறுநில மன்னன் விமல தர்ம சூரியா, தான் சேர்ந்த புத்த மதத்திலிருந்து ஒருசில புத்தபிட்குகளை அழைத்துவந்து ஜெபிக்கச் சொன்னான். அவர்கள் ஒருசில மந்திரங்களைச் சொல்லி எவ்வளவோ ஜெபித்துப் பார்த்தார்கள். ஆனால் மழைதான் வருவே இல்லை.

அந்த நேரத்தில் யாரோ ஒருவர் சொன்னதன் பேரில் குறுநில அருட்தந்தை மன்னன் ஜோசப் வாசை அழைத்து ஜெபிக்கச் சொன்னான். அருட்தந்தை ஜோசப் வாஸ் அங்கு வந்து ஜெபித்த சில மணித்துளிகளில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன, மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி மக்களையும் மன்னனையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. இதனால் பெரிதும் மகிழ்ந்து போன மன்னன், ஜோசப் வாஸ் எல்லா இடங்களிலும் நற்செய்தி அறிவிக்க வழிவகை செய்துகொடுத்தான். அருட்தந்தை ஜோசப் வாஸ் தன்னுடைய ஜெபத்தின் உதவியால் மேலும் மேலும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து வந்தார்.

வாழ்க்கை வரலாறு

அருட்தந்தை ஜோசப் வாஸ் 1651 ஆண்டு, ஏப்ரல் 21 ஆம் நாள், கோவாவில் உள்ள பெனாலிம் என்ற ஊரில் கிறிஸ்டோபர் வாஸ் என்பவருக்கும் மரியாதே மிரண்டா என்பவருக்கும் 8 வது மகனாகப் பிறந்தார். ஜோசப் வாஸ் அவர்கள் குழந்தைப் பருவத்திலேயே ஜெபத்தில் அதிக ஆர்வமும் ஏழை எளியவரிடத்தில் அதிக அன்பும் கரிசனையும் கொண்டு வாழ்ந்தார். தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பை சேசு சபையார் நடத்திய கல்வி நிறுவனங்களில் பெற்றவர், அதன்பிறகு தூய தாமஸ் அக்வினாஸ் குருமடத்தில் சேர்ந்து, தன்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட பின்னர் அருட்தந்தை ஜோசப் வாஸ் கொங்கன் மற்றும் மங்களூரில் சிலகாலம் அருட்பணி செய்தார்.

அந்த காலத்தில் எல்லாம் நம்முடைய இந்தியத் திருநாடானது போர்த்துக்கீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்களின் காலனி ஆத்திகத்தில் இருந்தது. போர்த்துக்கீசியர்களோ கத்தோலிக்க விசுவாசத்தைப் பரப்ப, டச்சுக்காரர்களோ கால்வின் பதிதத்தை பரப்ப நினைத்தார்கள். இதனால் இரண்டு நாட்டவருக்கும் இடையே அடிக்கடி சண்டைச் சச்சரவுகள் ஏற்பட்டன. டச்சுக்காரார்கள் மிகவும் தந்திரமாக கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களை தங்களுடைய சபைக்குள் இழுக்கப் பார்த்தார்கள். இன்னும் ஒருசிலரை அவர்கள் சித்ரவதை செய்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அருட்தந்தை ஜோசப் வாஸ் மிகவும் துணிச்சலாக கத்தோலிக்க விசுவாசத்தை மக்களிடம் எடுத்துரைத்து, அவர்களை விசுவாசகத்தில் மேலும் மேலும் வளர்த்தார். அதன்பிறகு அவர் கோவாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அப்போது ஜோசப் வாஸ், அருட்தந்தை பாஸ்கால் டக்கோஸ்டா ஜெராமிசாஸ் என்பவரைச் சந்தித்தார். அவர் ஏற்கனவே ஒரு சபையை நிறுவியிருந்தார். அச்சபையில் சேர்ந்த ஜோசப் வாஸ் சில காலத்திற்குப் பிறகு அச்சபைத் தலைவராக உயர்ந்தார். இந்த காலகட்டத்தில்தான் அண்டை நாடான இலங்கையில் டச்சுக்காரர்களால் கத்தோலிக்க விசுவாசகதிற்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தார். எனவே அவர் ஒரு கூலியாளைப் போன்று வேடம் தரித்து இலங்கைக்குச் சென்று கத்தோலிக்க விசுவாசத்தை மக்களிடத்தில் பரப்ப முயன்றார். அதன்பேரில் 1687 ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் தரை இறங்கினார். யாழ்பாணத்திற்கு மிக அருகே இருந்த சீத்தாழை என்னும் இடத்தில் மூன்று ஆண்டுகள் அருட்பணி செய்தார். அங்கே டச்சுகாரர்களால் கத்தோலிக்க விசுவாசத்தை பின்பற்றிய மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருந்தது என்பதை உணர்ந்தார். அவற்றை எல்லாம் ஜோசப் வாஸ் மிகத் துணிவோடு எதிர்கொண்டார்.

சீத்தழையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு கண்டிக்கு சென்று அங்கே இருந்த மக்களுக்கு மத்தியில் அருட்பணி ஆற்றத்தொடங்கினார். பொதுநிலையினரையும் தனக்குத் துணையாக வைத்துக்கொண்டு பணிசெய்து வந்தார். ஒருசமயம் தன்னுடைய சக பணியாளர்களோடு அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவரை உளவாளி என நினைத்து, கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். சிறையில் இவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்தார். இவரோடு வந்த 7 பேரை சந்தேகத்தின் பேரில் தூக்கிலிட்டுக் கொன்றார்கள். ஆனால் அருட்தந்தை ஜோசப் வாஸ் அவர்களோ தன்னுடைய ஜெபவாழ்வால் தான் உளவாளி அல்ல, இறைபணியாளர் என்பதை நிரூபித்தார். இதைக் கண்ட அரசன் அவரை விடுதலை செய்தான்.

கண்டியில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பான அருட்பணி ஆற்றிய தந்தை ஜோசப் வாஸ் 55,000 பேருக்கும் மேல் கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்குள் கொண்டு வந்துசேர்த்தார். இப்படி ஒரு சிறப்பான பணியை இலங்கை மண்ணில் ஆற்றிய அருட்தந்தை 16-11-1711 அன்று நோய்வாய்ப்பட்டு இறையடி சேர்ந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜோசப் வாசின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவரிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஜெப வாழ்வு

நம் புனிதர் ஜெபிக்கின்ற மனிதராக, ஜெப வீரராக வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. எந்தளவுக்கு என்றால், சிறுவயது முதலே ஜெபிப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட தூய ஜோசப் வாஸ் ஆலயத்திக்கு செல்கிறபோதும் பள்ளிக்கூடம் செல்கிறபோதும் ஜெபமாலை சொல்லிக்கொண்டும் ஜெபித்துக்கொண்டே செல்வார். சில நேரங்களில் இவர் ஊரில் இருக்கும் ஆலயத்தில் உள்ள நற்கருணை ஆண்டவரிடம் ஜெபிக்கச் செல்கிறபோது ஆலயத்தின் கதவுகள் தானாகவே திறக்கும் என்று இவருடைய வாழ்க்கைக் குறிப்பு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இவர் குருவாக திருநிலைப்பட்ட பிறகும்கூட நற்கருணை ஆண்டவர்மீதும் அன்னை மரியாவின்மீது ஆழமான பற்றுகொண்டு வாழ்ந்தார். நீண்ட நேரம் அவர்களிடம் ஜெபித்தார். அந்த ஜெபம்தான் அவரை பல இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றியது.

இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் தருகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். யாரோ ஒருவர் சொன்னார், “ஜெபம் செய்யாத மனிதர் கூரையில்லாத வீட்டுக்குச் சமம்” என்று. இது முற்றிலும் உண்மை. ஒரு வீட்டிற்கு கூரையானது எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு ஒரு மனிதனுக்கு ஜெபமானது மிகவும் முக்கியம்.

O Henry யின் சிறுகதை இது: பெருநகரம் ஒன்றில் நன்றாக இயங்கிக்கொண்டிருந்த உணவகம் ஒன்றில் திடிரென்று மக்கள் வரத்து குறைந்துபோனது. இத்தனை நாட்களும் இலாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அந்த உணவகம் இப்போது நட்டத்தில் இயங்குவதைப் பார்த்த அதன் முதலாளி ஆடிப்போனார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போதுதான் யாரோ ஒருவர், ஊருக்கு வெளியே ஒரு மலை இருக்கிறது. அந்த மலையில் ஒரு சிற்றாலம் இருக்கிறது. அந்த சிற்றாலயத்தில் போய் நம்பிக்கையோடு ஜெபித்தால், நினைத்தது நடக்கும் என்று சொல்ல, அவர் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அந்த சிற்றாலயத்திற்குச் சென்று, ஜெபித்து வந்தார். அவர் ஜெபிக்கின்றபோது தன்னுடைய உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்காக ஜெபித்தார், உணவகத்தில் வேலை பார்க்கும் வேலையாட்களுக்காக ஜெபித்தார். இன்னும் உணவகத்தில் பணிபுரியும் நிர்வாகிகளுக்காக ஜெபித்தார்.

நாட்கள் சென்றன. அவர் ஒவ்வொருநாளும் மலைமேல் இருக்கும் சிற்றாலயத்திற்குச் சென்று, தொடர்ந்து ஜெபித்ததன் பேரில் உணவகத்திற்கு மக்கள் வரத்து அதிகமாக வரத் தொடங்கியது. முன்பைவிடவும் உணவகம் இலாபத்தில் இயங்கத் தொடங்கியது. அப்போது அந்த உணவகத்தின் முதலாளி தனக்குள் சொல்லிக்கொண்டார் “ஜெபம் எத்தகைய வலிமை உடையது” என்று. ஆம், நாம் தொடர்ந்து இறைவனிடம் ஜெபிக்கின்றபோது அதற்கான அருளை நிச்சயம் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

2. மக்கள் சேவை

நம் புனிதர் ஜெபத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரோ அந்தளவுக்கு மக்களுக்கு சேவை செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுத்தார். ஒருமுறை கண்டியில் கொள்ளை நோய் பரவியபோது மக்களை ஆண்ட குறுநில மன்னனும் அமைச்சர்களும் ஓடிவிட, நம் புனிதர்தான் தன்னுடைய உயிரையும் கூட பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்தார். அவர்களுக்கு போதிய மருத்துவ உதவிகளைச் செய்துகொடுத்து, அவர்களை நோயிலிருந்து காப்பாற்றினார். இதைப் பற்றி கேள்விப்பட்ட மன்னன், நம் புனிதர் நற்செய்திப் பணி செய்வதற்கு எல்லா வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தார்.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம் நம்மோடு வாழும் ஏழை எளியவர், வறியவர்களுக்கு சேவை செய்து வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில், “செயலற்ற நம்பிக்கை தன்னிலே உயிரற்றது” என்கிறார் (2:17). ஆம், நம்முடைய நம்பிக்கை செயல்வடிவம் பெறவில்லை என்றால் அதனால் என்ன பயன்?

ஆகவே, தூய ஜோசப் வாஸ் அவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாமும் அவரைப்போன்று நற்செய்தியின் அதிக தாகம் கொண்டுவாழ்வோம். ஜெப வாழ்விற்கும் அதே நேரத்தில் மக்கள் பணிக்கும் அதிக முக்கியத்துவம் தந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

– Palay Fr. Maria Antonyraj.