16 சனவரி 2019, புதன்

ஜனவரி 16

ஜனவரி 16

 

எபிரேயர் 2:14-18

 

இயேசு, சோதிக்கப்படுவோருக்கு உதவிசெய்வதில் வல்லவர்!

 

நிகழ்வு

 

         கிரேக்கப் புராணங்களில் சிரேன்ஸ் (Sirens) என்ற ஒருவிதமான பறவையைக் குறித்து ஒரு குறிப்பு உண்டு. அந்தப் பறவையின் தலை ஒரு பெண்ணின் தலையைப் போன்றும், அதனுடைய உடல் பறவையின் உடல் போன்றும், ஒரு பெரிய இராட்சசப் பறவை போன்று இருக்கும். இந்தப் பறவை மத்திய தரைக்கடல் பகுதிகளில் இருக்கும் பெரும் பாறைகளில் அமர்ந்துகொண்டு கானம் பாடும். இதனுடைய குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும். இதனால், கடலில் பயணம் செய்பவர்கள், ‘இந்தக் குரல் எங்கிருந்து வருகின்றது’ என்று அந்தக் குரலுக்கு மயங்கி, குரல் வந்த திசையை நோக்கி வருவார்கள். அப்படி வருபவர்களை எல்லாம் பாறையில் அமர்ந்திருக்கும் சிரேன்ஸ் பறவைகள் கொத்திக் கொத்தி தங்களுக்கு இரையாக்கிக் கொள்ளும்.

 

இது தெரியாமல், அந்த வழியாகப் போகிறவர்கள் எல்லாரும் சிரேன்ஸ் பறவையின் குரலுக்கு மயங்கி, அதைத் தேடிச் சென்று, அதனாலேயே கொத்தப்பட்டு இறந்துபோனார்கள். இதற்கடையில் மத்திய தரைக்கடல் வழியாகச் சென்ற ஒருசிலர் சிரேன்ஸ் பறவையைக் குறித்துக் கேள்விப்பட்டு, அதன் குரலுக்கு மயங்கிவிடாமல் இருக்க, தன்னுடைய காதுகளை அறுத்துக்கொண்டார்கள். இதனால் மற்ற கப்பல்களில் வரக்கூடியவர்கள் தங்களோடு என்ன செய்தியினை பரிமாறிக்கொள்கிறார்கள் என்று தெரியாமலே மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

 

இப்படியே ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருந்தன. இதைக் குறித்து கேள்விப்பட்ட தார்சியுஸ் என்ற மன்னர் சிரேன்ஸ் பறவைகளுக்கு முடிவுகட்ட நினைத்தான். எனவே அவன் மிகச் சிறந்த பாடகரும் கவிஞருமாகிய ஓர்பேயுசை கூட்டிக்கொண்டு மத்தியத் தரைக்கடல் வழியாகச் சென்றான். கடலில் செல்லும்போது தார்சியுஸ் மன்னர், ஓர்பேயுசை கையில் இருக்கும் யாழினை மீட்டி, பாடச் சொன்னான். ஓர்பேயுசும் மன்னனின் வார்த்தைகளுக்கு இணங்கி, கையிலில் இருந்த யாழினை எடுத்து, அற்புதமாகப் பாடத் தொடங்கினான். அவனுடைய குரல் வானமண்டலத்தில் வேகமாகப் பரவி, தொலைவில் இருந்த சிரேன்ஸ் பறவையின் செவிகளை எட்டியது. அவை ‘எங்கிருந்து இந்த அற்புதமான குரல் வருகின்றது?’, என்று குரல் வந்த திசையை நோக்கிப் பறந்துவந்தன. இப்படிப் பறந்துவந்த பறவைகளை எல்லாம் தார்சியுஸ் மன்னர் தன்னுடைய கையில் இருந்த வாளால் வெட்டிக் கொன்றுபோட்டான்.

 

பலர் சிரேன்ஸின் குரலுக்கு மயங்கி, அதனால் கொல்லப்பட்டிருக்கையில், தார்சியுஸ் மன்னர் மிகவும் முன்மதியோடு நடந்து, ஓர்பேவின் உதவியுடன் அவற்றை வீழ்த்தினான்.

 

தார்சியுஸ் ஓர்பேயுசின் உதவியால் சிரேன்ஸ் பறவையை வென்றதுபோன்று, நாமும்கூடிய இயேசுவின் துணையால் நம்முடைய வாழ்க்கையில் வரும் சோதனைகளை எளிதாக வெற்றி கொள்ளலாம்.

 

சோதிக்கப்படுவோருக்கு உதவும் இயேசு

 

         எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், “தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால், சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்” என்று எழுதுகின்றார். இதையே நாம் நம்முடைய இன்றைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

 

இயேசு இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் பாவம் தவிர மற்ற அனைத்திலும் சாதாரண ஒரு மனிதரைப் போன்று வாழ்ந்தார். அவர் நம்மைப் போன்றே துன்பங்களை அனுபவித்தார்; நம்மைப் போன்றே புறக்கணிக்கப்பட்டார்; நம்மைப் போன்றே சோதிக்கப்பட்டார். நம்மைப் போன்றே பசி தாகமுற்றார் (யோவா 4:6-8). அப்படிப்பட்ட இயேசு நாம் சோதிக்கப்படும்போது, நமக்கு உதவி செய்பவராக இருக்கின்றார். அதைத்தான் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் எடுத்துச் சொல்கின்றார்.

 

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஏலி என்ற தலைமைக் குரு இருந்தார் (1 சாமு 2:27-34). அவர் கடவுளுடைய வார்த்தையில் நம்பிக்கையில்லாமல், சகமனிதர்கள் மீது இரக்கமில்லாமல் இருந்தார். ஆனால் ஆண்டவர் இயேசு அப்படியில்லை. அவர் இரக்கமும் நம்பிக்கையும் கொண்ட தலைமைக்குருவாகவும், மக்களின் நிலைகண்டு இரங்குகின்ற ஒருவராகவும் இருக்கின்றார். அதனால்தான் நம்முடைய சோதனை வேளையிலும் நமக்கு உதவி செய்ய வருகின்றவராக இருக்கின்றார். இப்படிப்பட்ட ஒரு தலைமைக் குருவை நாம் பெற்றது நமது பாக்கியம் என்றாலும், அவரைப் போன்று சோதனையில் விழுந்துவிடாது, சோதனைகளை வென்று வருவதுதான் சிறப்பானது.

 

சிந்தனை

 

         இயேசு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரங்கி, நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கக்கூடிய சோதனைகளை வெற்றிகொள்வதற்கு துணையாக இருக்கின்றார். நாமும் வலுவற்றவர்களின்மீது இரங்கி, அவர்கள் தன்னுடைய சோதனைகளை வெற்றிகொள்வதற்கு நாம் நம்மாலான உதவிகளைச் செய்வது சிறப்பானது.

 

ஆகவே, இயேசுவைப் போன்று வலுவற்றவர்கள்மீது இரங்கும் உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.