14 சனவரி 2019, திங்கள்

திங்கள்கிழமை

பொதுக்காலம் முதல் வாரம்

திங்கள்கிழமை

மாற்கு 1:14-20

 

மனம் மாறுங்கள்; நற்செய்தியை நம்புங்கள்

 

நிகழ்வு

 

         ஓர் ஊரில் சகோதரர்கள் இருவர் இருந்தனர். அவர்கள் இருவரும் பயங்கரமான ‘ஆடு திருடர்கள்’.

 

ஒருநாள் அவர்கள் இருவரும் ஓர் ஆட்டுப் பட்டியிலிருந்து ஆட்டைத் திருட முற்பட, அவர்கள் இருவரும் அங்கிருந்த காவல்காரனின் கண்ணில் விழ, அவன் சத்தம்போட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்களை எழுப்பிவிட, அவர்கள் அனைவரும் ஓடிவந்து, சகோதர்கள் இருவரையும் நையப்புடைத்தனர். பின்னர் அவர்கள் சகோதரர்கள் இருவருடைய நெற்றியிலும் ஆடு திருடன் (Sheep Thief) என்பதைக் குறிக்கும் வண்ணமாக ST என்று முத்திரை குத்தி, அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.

 

மக்களால் இப்படி அவமானப்படுத்தப்பட்டு, விரட்டியடிக்கப்பட்ட அந்த சகோதரர்களில் ஒருவன் நடந்ததை நினைத்து மிகவும் வருந்தினான். அது மட்டுமல்லாமல் தன்னுடைய நெத்தியில் குத்தப்பட்ட ST என்பதற்கான அர்த்தம் என்ன என்று அவனைச் சந்தித்தவர்கள் கேட்டபோது, அவன் அவமானத்தால் கூனிக்குறுகிப் போனான். எனவே, அவன் சொந்த ஊரில் இருந்தால், எல்லாரும் இதையேதான் கேட்டுக்கொண்டிருப்பார்கள், அதனால் கண்காணாத இடத்திற்குச் சென்று, அங்கு மகிழ்ச்சியாக வாழலாம் என முடிவுசெய்து, ஓர் ஊருக்குப் போனான். அங்கேயும் மக்கள் அதற்கான அர்த்தத்தைக் கேட்டபோது, அவன் வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்து இறந்து போனான்.

 

ஆனால், ஊரில் இருந்த அந்த இருவரில் இன்னொருவன், தன்னுடைய தவற்றை நினைத்து மிகவும் வருந்தி, திருந்தி நடக்கத் தொடங்கினான். இதனால் மக்கள் மத்தியில் அவனுக்கு நல்ல பெயர் உண்டானது.

 

இப்படியே ஆண்டுகள் பல உருண்டோடின. ஒருநாள் படித்த இளைஞன் ஒருவன் அந்த மனிதனிடம், “ஐயா! உங்களுடைய நெற்றில் ST என்று பொறிக்கப்பட்டிருக்கின்றதே, இது எப்படி உங்களுடைய நெற்றியில் வந்தது, அதனுடைய அர்த்தம் என்ன?” என்று கேட்டான். அதற்கு அந்த மனிதன், “இந்த ST என்ற வார்த்தை எப்படி என் நெற்றியில் வந்தது என்று தெரியவில்லை. ஆனால், (புனிதர்) Saint என்பதைத்தான் அப்படிப் பொறித்திருக்கிறார்கள் போலும்” என்றான்.

 

இதைக் கேட்ட அந்த இளைஞன், “உங்களைப் பார்த்தால் ஒரு புனிதரைப் போன்றுதான் இருக்கின்றது” என்று சொல்லி, அவனைக் கைகூப்பி வணங்கிவிட்டுப் போனான்.

 

உண்மையான மனமாற்றம் ஒருவருடைய வாழ்வில் வெளிப்படவேண்டும். அந்த வகையில் ஆடு திருடனாக இருந்து, புனிதராக மாறிய இந்த மனிதர் மனமாற்றத்திற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

 

இறையாட்சி பற்றி நற்செய்தி அறிவிக்கத் தொடங்கிய இயேசு

 

நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து, திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பின்பு, கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே கலிலேயாவிற்கு வந்ததாக வாசிக்கின்றோம். திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பின்பு, அங்கு ஒரு வெற்றிடம் ஏற்படுகின்றது. அதனை நிரப்புவதற்காக இயேசு கலிலேயாவுக்கு வருகின்றார்.

 

மேலும் இயேசு கடவுளின் நற்செய்தியை மக்களுக்குப் பறைசாற்றிக் கொண்டே வந்தார் எனில், அவர் இந்த உலகில் மற்ற அரசர்களைப் போன்று உலகப் போக்கிலான ஆட்சியை அல்ல, கடவுளின் ஆட்சியை அதாவது இறையாட்சியை நிறுவ வந்தார் என்று சொல்லலாம். அத்தகைய இறையாட்சிக்காக  அவர் மக்கள் மனம்மாறி, இறைவனிடத்தில் நம்பிக்கை கொள்ள அழைப்புத் தருகின்றார்.

 

மனமாற்றம் என்பது யாதெனில்..

 

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இறையாட்சி நிறுவதற்காக மக்கள் மனம் மாற வேண்டுமென்று அழைப்புத் தருகின்றார். இது எத்தகைய மனமாற்றம் என்று நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

 

மனமாற்றம் என்பது வெறுமனே, பாவங்களுக்காக மனம் வருந்துதலோடு நின்றுவிடக் கூடாது. அது நம்மை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்லவேண்டும். ஆண்டவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் தன்னுடைய குற்றத்திற்காக மனம்வருந்தினான்தான். ஆனால், அவன் கடவுளின் பேரன்பை உணர்ந்து, அவரிடம் திரும்பிவரவில்லை, அவரிடத்தில் நம்பிக்கை கொள்ளவும் இல்லை. ஆனால், பேதுருவோ இயேசுவை மறுதலித்தாலும்கூட, தன்னுடைய தவற்றை நினைத்து மனம் வருந்தினார், அதற்குப் பின்பு அவர்மீது நம்பிக்கை கொண்டு அவர் வழியில் நடக்கத் தொடங்கினார் (மத் 27: 3-5)

 

ஆகையால், ஆண்டவர் இயேசு விடுக்கின்ற மனமாற்ற அழைப்பு என்பது பாவங்களுக்காக மனம் வருந்துவதோடு நின்றுவிடாமல், அவர்மீது நம்பிக்கை கொள்ள நம்மை இட்டுச் செல்லவேண்டும். அத்தகைய மனமாற்றமே உண்மையான மனமாற்றம்.

 

சிந்தனை

 

         “நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” என்பார் (மத் 3:8) திருமுழுக்கு யோவான். நமது மனமாற்றம் உண்மையானதாக இருக்க, நல்வாழ்வு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.