ஜனவரி 14
ஜனவரி 14
எபிரேயர் 1:1-6
இயேசு வழியாக உலகைப் படைத்த இறைவன்
நிகழ்வு
முன்பொரு காலத்தில் அகிவா என்றொரு யூத ராபி இருந்தார். ஒருசமயம் அவரிடத்தில் வந்த ஓர் இளைஞன், “இந்த உலகினைப் படைத்தவர் யார்?” என்று கேட்டான். அகிவாவோ சிறிதும் தாமதியாமல், “எல்லாம் வல்ல இறைவன்” என்று பதிலுரைத்தார். அதற்கு அந்த இளைஞன், ‘இறைவன்தான் இந்த உலகினைப் படைத்தார் என்பதற்கு ஏதாவது அத்தாட்சி (சான்று) இருக்கின்றதா?” என்று கேட்டார். உடனே அகிவா, “இதற்கான பதிலை நான் நாளைக்குச் சொல்கிறேன், நீ இன்று போய்விட்டு நாளைக்கு வா” என்று அவனை அனுப்பி வைத்தார்.
அந்த இளைஞனும் அகிவா சொன்னவாறு அன்றைக்கு அவரிடமிருந்து விடைபெற்றுவிட்டு, மறுநாள் அவரிடத்தில் திரும்பி வந்தான். அப்போது அகிவா அந்த இளைஞனிடத்தில், “உன்மேல் என்ன அணிந்திருக்கிறாய்?” என்று கேட்டார். அவனோ பதிலுக்கு, “ம்ம்ம்... பாத்தால் தெரியவில்லையா... பளபளப்பான ஆடை அணிந்திருக்கிறேன்” என்றான். “அப்படியா... இந்த ஆடையை நெய்தவர் யார்?” என்று மீண்டுமாக அவனிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டார் அவர். “இதிலென்ன சந்தேகம். இந்த ஆடையை யார் நெய்திருக்க முடியும்? ஒரு நெசவாளிதானே நெய்திருக்க முடியும்!” என்றான் அவன்.
அகிவாவோ விடமால் அவனிடம், “நீ சொல்வதுபோல் நெசவாளிதான் இதை நெய்திருக்கவேண்டும் என்றால், அதற்கான அத்தாட்சி எங்கே?” என்றார். இளைஞனோ பொறுமை இழந்துபோய், “ஆடையை நெசவாளிதான் நெய்திருக்கவேண்டும். இதில் என்ன அத்தாட்சி வேண்டிக் கிடக்கு” என்று கத்தத் தொடங்கினான். அப்போது அகிவா அவனிடம், “தம்பி! இப்போது சொன்னாயே, இதிலே நீ கேட்ட கேள்விக்கான பதில் இருக்கின்றது... எப்படி ஓர் ஆடையை ஒரு நெசவாளிதான் நெய்ய முடியுமோ, ஒரு வீட்டை ஒரு கொத்தனார்தான் கட்டமுடியுமா?, ஒரு கதவை ஓர் ஆசாரிதான் செய்யமுடியுமோ. அதுபோன்றுதான் இந்த உலகத்தை எல்லாம் வல்ல இறைவன்தான் படைத்திருக்க முடியும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை” என்றார்.
இந்த உலகம் எப்படிப் படைக்கப்பட்டது, அதை யார் படைத்தார் என்பதற்கான விடையாக அமைகின்றது இந்த நிகழ்வு.
உலகைப் படைத்த இறைவன், அதை இயேசுவின் வழியாகப் படைத்தார்
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், “பலமுறை, பலவகைகளில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையர்களிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்” என்கின்றார். இப்படி எழுதிவிட்டு தொடர்ந்து எழுதுகின்றார், “இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாக்கினார்;
இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்” என்கின்றார். இதையே நாம் நம்முடைய இன்றைய சிந்தனைக்காக எடுத்துக் கொள்வோம்.
தொடக்கநூல் முதல் அதிகாரம், முதல் வசனத்தில், “தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார்” என்று வாசிக்கின்றோம். ஆனால், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் ஒருபடி மேலே சென்று, “உலகைப் படைத்த இறைவன், அதனை இயேசுவின் படைத்தார்” என்று எடுத்துச் சொல்கின்றார்.
இதனை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், யோவான் நற்செய்தி 1:1 ல் வருகின்ற “தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாகவும் இருந்தது” என்ற இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும். யோவான் நற்செய்தி 1:1 ல் வரக்கூடிய இந்த இறைவார்த்தை நமக்கு மூன்று முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றன. ஒன்று. வாக்கு என்னும் இயேசு உலகம் படைக்கப்பட்டதற்கு முன்பாகவே இருந்தார் என்பதாகும். இரண்டு. வாக்கு என்னும் இயேசு தந்தைக் கடவுளோடு இருந்தார் என்பதாகும். மூன்று. தொடக்கத்திலிருந்தே தந்தைக் கடவுளோடு இருந்த வாக்கு என்னும் இயேசு கடவுளாகவும் இருந்தார் என்பதாகும். ஆகையால், இயேசு கடவுளோடு இருந்து, தன் வழியாக உலகம் படைக்கப்பட காரணமாக இருந்தார் என நாம் உறுதியாகச் சொல்லலாம்.
சிந்தனை
இயேசு வழியாக இறைவன் உலகினைப் படைத்தார் எனில், அவரும் கடவுள்தான். இதைதான் நாம் தந்தை, மகன், தூய ஆவி என்று ஆள் வகையில் கடவுள் வேறு வேறாக இருந்தாலும், இறைத்தன்மையில் ஒருவராக இருக்கின்றார் என்று நம்புகின்றோம்.
இத்தகைய இயேசுவுக்கு நாம் செய்யவேண்டியது என்ன என்று சிந்தித்துப் பார்க்கின்றபோது, இறைவார்த்தை நமக்குச் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் அவர்மீது நம்பிக்கை கொள்வதாகும். யோவான் நற்செய்தி 20:20 ல் வாசிக்கின்றோம், “அவரிடத்தில் கொள்வோர், வாழ்வடைவர்” என்று. ஆகவே, நாம் இயேசு இறைவன், மெசியா என நம்புவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.