14 சனவரி 2019, திங்கள்

அருளாளர் தேவசகாயம்

அருளாளர் தேவசகாயம் (ஜனவரி 14)

நிகழ்வு

அருளாளர் தேவசகாயம் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா என்பவருக்குக் கீழ் காரியக்காரராக வேலைப்பார்த்துக்கொண்டிருந்த நேரம், அவருடைய வாழ்க்கையில் சோதனைகளுக்கு மேல் சோதனைகள் வந்தன. அத்தகைய வேளைதனில் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். பிறகு அவர் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் மார்த்தாண்டவர்மாவின் படையில் படைத்தளபதியாக பணியாற்றிக்கொண்டிருந்த பெனடிக்ட் டிலனாய் என்பரிடம் எடுத்துச் சொன்னார். அதற்கு அவர், விவிலியத்தில் வரும் யோபுவின் கதையை எடுத்துச்சொல்லி, அவருக்குக் விளக்கினார். இதைக் கேட்ட தேவசகாயம், யோபுவின் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள், கவலைகள், சோதனைகளோடு ஒப்பிடும்போது தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட சோதனைகள், கஷ்டங்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்று உணர்ந்து மன அமைதி பெற்றார். அதன்பிறகு வேதநூலை – விவிலியத்தைக் - குறித்து முழுமையாக அறிந்துகொண்டார். கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்.

வாழ்க்கை வரலாறு

விடுதலையின் வேள்வியை ‘தண்ணீர் விட்டா வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்!” என்பான் புரட்சிக் கவிஞன் பாரதியார். ஆம், நம்முடைய இந்திய விடுதலைக்காக ஏராளமான பேர் தங்களுடைய இன்னுயிரைத் துறந்தார்கள்; தங்களுடைய வாழ்வையே முழுதாய் தியாகம் செய்தார்கள். அதேபோன்று இந்திய மண்ணில் கிறிஸ்துவின் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மடிந்தவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர்தான் அருளாளர் தேவசகாயம்.

அருளாளர் தேவசகாயம் 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் நட்டாலம் என்ற குக்கிராமத்தில் திருவாளர் வாசுதேவன் நம்பூதிரி, திருமதி தேவகியம்மை என்ற தம்பதியினருக்கு தலைமகனாய் பிறந்தார். சிறுவயதிலே இவர் ஞானமும் அறிவும் பெற்றவராய் விளங்கினார். இதனால் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா என்பரின் அரண்மனையில் காரியக்காரராக மாறும் அளவுக்கு தேர்த்தி பெற்றார். அதன்பிறகு இவர் பார்க்கவியம்மா என்ற பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துவந்தார்.

ஒருசமயம் தேவசகாயத்தின் வாழ்க்கையில் சோதனைகளுக்கு மேல் சோதனைகள் வந்தன. அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். அப்போது மன்னரின் படைப்பிரிவில் படைத்தளபதியாக வேலைபார்த்த பெனடிக்ட் டிலனாய் என்பவரிடத்தில் தன்னுடைய வாழ்வில் வரும் சோதனைகளை எடுத்துச் சொல்ல, அதற்கு அவர் விவிலியத்திலிருந்து யோபுவின் கதையை எடுத்துச் சொல்ல தேவசகாயம் மன அமைதி பெற்றார். பிறகு அவர் வேதநூலையும், இயேசு கிறிஸ்துவையும் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். அதனால் அவர் பத்பநாபபுரத்தில் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை பீட்டர் பரைரேஸ் என்பவரைச் சந்தித்து கிறிஸ்துவைப் பற்றி இன்னும் முழுமையாக அறிந்துகொண்டார். கிறிஸ்துவைப் பற்றி அறிய அறிய அவர் உண்மையான கிறிஸ்தவராகவே மாறிப்போனார். ஆம், அருளாளர் தேவசகாயம் 1745 ஆம் ஆண்டு 17 ஆம் நாள் வடக்கன்குளத்தில் திருமுழுக்குப் பெற்று ‘நீலகண்டன் என்ற தன்னுடைய பெயரை தேவசகாயம் என்று மற்றிக்கொண்டார். இவரோடு சேர்ந்து இவருடைய மனைவியும் திருமுழுக்குப் பெற்றார். அவர் தன்னுடைய பெயரான பார்க்கவியம்மா என்பதை ஞானப்பூ என மாற்றிக்கொண்டார்.

தேவசயாகம் திருமுழுக்குப் பெற்றபிறகு புது ஆற்றல் பெற்றவராய் உணர்ந்தார். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் மிகத் துணிவுடன் எடுத்துரைத்தார். இதனால் ஏழை எளிய மக்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மனமாறத் தொடங்கினார்கள். இதைக் கண்ட ஒருசில புரோகிதர்களும் நம்பூதிரிகளும் திருவிதாங்கூர் மன்னரின் பிரதான அமைச்சரான இராமையன் தளவாய் என்பவரைச் சந்தித்து, எல்லாவற்றையும் எடுத்துச்சொன்னார்கள். இதைக் கண்டு சினமுற்ற அமைச்சர் இப்பிரச்சனையை மன்னரிடத்தில் எடுத்துச் சொன்னார்.

மன்னாரோ மக்கள் அனைவரும் நடுங்கும் வண்ணம் தேவசகாயத்தை கழுதையின்மீது ஏற்றி, எருக்கலை மாலையை அவருக்கு அணிவித்து, ஏறக்குறைய எட்டு மைல்தூரம் அவரைக் கூட்டிச் சென்று, பலவிதமாகத் துன்புறுத்தினார். அப்போதும்கூட அவர் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்துக்கொண்டே இருந்தார். இதனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் பரவியது. இதைப் பார்த்து மிரண்டுபோன சதிகாரக் கும்பல் மன்னனிடம், “இவரை இப்படியே விட்டால், சமயமாற்றம் பெருகுமே ஒழிய, அது நிற்பதற்கான வழியில்லை. அதனால் இவரைக் தீர்த்துக்கட்டினால்தால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் வழிபிறக்கும்” என்று நயவஞ்சகமாகப் பேசியது. இதனால் மன்னன் தேவசகாயத்தை தீர்த்துக்கட்டத் துணிந்தான்.

1752 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள், மன்னன் தேவசகாயத்தை ஆரல்வாய்மொழிக்குப் பக்கத்தில் இருக்கும் காற்றாடி மலைக்கு கூட்டிச் சென்று, கொலை செய்வதற்காக நிறுத்தினான். அப்போது தேவசகாயம் வானத்தை அண்ணார்ந்து, “தந்தையே என்னுடைய ஆவியை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன். இப்போது நான் உம்மிடத்தில் வருவதை நினைத்துப் பெருமைபடுகிறேன்” என்று சொல்லி ஜெபித்தார். அதன்பிறகு மன்னன் தேவசகாயத்தை துப்பாக்கியால் சுட்டுத்தள்ள ஆணையிட்டான். அதன்படி துப்பாக்கிக் குண்டுகள் தேவசகாயத்தின் மார்பில் பாய, அவர் மலையிலிருந்து சரிந்துவிழுந்து தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். அவருடைய உடலின் ஒருசில பகுதிகள் கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள தூய சவேரியார் ஆலய பீடத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இவர் 2012 ஆண்டு டிசம்பர் 2 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

அருளாளர் தேவசகாயம் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடத்தில் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

1. கிறிஸ்துவுக்காக எதையும் ஏற்கத் துணிதல்
அருளாளர் தேவசகாயம், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் ஏற்கத் துணிந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருமுறை மன்னரின் அமைச்சராக இருந்த இராமையன் தளவாய் தேவசகாயத்திடம், “இழிபிறப்பாளர் பின்பற்றும் சமயத்தை உடனே விட்டுவிடு, இல்லையென்றால் உன்னையும் உன்னோடு சேர்ந்த கூட்டத்தையும் கழுமரத்தில் ஏற்றுவேன்” என்று சொன்னபோது, அவர் மிகவும் துணிச்சலாக, “என்னை எவ்வளவு வேண்டுமானாலும் துன்புறுத்துங்கள், கொடுமைப்படுத்துங்கள், ஆனால் கிறிஸ்தவர்களை மட்டும் ஒன்றும் செய்யாதீர்கள்” என்று மிகத் துணிச்சலாக எடுத்துச் சொன்னார். அந்தளவுக்கு அவர் கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கையும் பற்றும் கொண்டு வாழ்ந்து வந்தார்.

அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று துன்பங்களை, அவமானங்களை, சிலுவையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவர்” (மத் 16:24 -25). அருளாளர் தேவசகாயம் கிறிஸ்துவின் பொருட்டு தன்னுடைய உயிரை இழக்கத் துணிந்ததால், விண்ணகத்தில் நிலையான ஒரு இடத்தினைப் பெற்றுக்கொண்டார். நாமும் ஆண்டவர் இயேசுவுக்காக எல்லாவற்றையும் இழக்கத் துணியும்போது வாழ்வினைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

2. எல்லா மக்களையும் சமமாகப் பார்த்தல்
3.
அருளாளர் தேவசகாயம் வாழ்ந்த காலத்தில் சாதியின் அடிப்படையில், பிறப்பின் அடிப்படியில் மக்களை வேறுபடுத்திப் பார்க்கும் கொடுமை அதிகமாகவே நிலவியது. குறிப்பாக சூத்திரர்கள் என அழைக்கபப்ட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் உயர்சாதியினர் வாழும் தெருக்களில் காலைவேளையிலும் மாலைவேளையிலும் நடக்கவே கூடாது. ஏனென்றால் இந்த இரண்டு நேரங்களில் அம்மனிதர்களின் நிழல் மிகவும் பெரிதாக இருப்பதால், அது உயர்சாதியினர் மீதுபட்டால் தீட்டாகிவிடுமே (?) என்பதற்காக அவர்கள் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த மக்களை காலையிலும் மாலையிலும் நடக்க அனுமதிக்கவில்லை.

இன்னும் கொடுமை என்னவென்றால் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த மக்கள் நடக்கும்போது கழுத்தில் ஒரு சிறிய வாளியையும், முதுகுக்குப் பின்னால் ஒரு பெருக்குமாரையும் கட்டிக்கொண்டு செல்லவேண்டும். எதற்காக என்றால் ஒருவேளை அவர்களுக்கு எச்சில் துப்பவேண்டிய நிலை ஏற்பட்டால், கீழே துப்பக்கூடாது. அப்படித் துப்பினால் தெரு தீட்டாகிவிடுமே. அதனால் அவர்கள் தங்கள் கழுத்தில் கட்டியிருக்கும் வாளியில் துப்பிக்கொள்ளவேண்டும். முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருக்கும் பெருக்குமார் அவர்கள் நடந்து சென்றதால் தீட்டுப்பட்ட (?) தெருவை சுத்தம் செய்வதற்காக.

இப்படியெல்லாம் சாதியின் அடிப்படையில் கொடுமைப்படுத்தப்பட்ட தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த மக்களோடு (பிறப்பால் நம்பூதிரி என்ற உயர்குலத்தைச் சார்ந்த) தேவசகாயம் சமமாகப் பழகினார். அவர்களை மனித மாண்போடு நடத்தி ஆண்டவர் இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்தார். அருளாளர் தேவசகாயத்திடம் இருந்த அந்த எல்லா மக்களையும் சமமாகப் பார்க்கும் மனநிலை நம்மிடத்தில் இருக்கிறதா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் கிறிஸ்துவர்கள் என்று பெருமைபட்டுக்கொள்ளும் நாம், சாதியின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பது வேதனையளிப்பதாக இருக்கின்றது.

தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், “இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” (கலா 3:28). ஆம், கிறிஸ்து இயேசுவோடு இணைத்திருக்கும் நாம் ஒன்றாய் இருக்கிறோம். இதை அருளாளர் தேவசகாயம் உணர்ந்து வாழ்ந்தார். நாமும் இதை உணர்ந்துகொண்டு எல்லா மக்களையும் சகோதர சகோதரிகளாக, உடன்பிறப்புகளாக, ஒருதாயின் பிள்ளைகளாக பார்க்கப் பழகுவோம்.

ஆகவே, அருளாளர் தேவசகாயம் அவர்களது விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடத்தில் விளங்கிய சாட்சிய வாழ்வைவும், எல்லோரையும் சமமாகப் பார்க்கும் மனநிலையையும் நமதாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Palay Fr. Maria Antonyraj.