12 சனவரி 2019, சனி

சனிக்கிழமை

திருக்காட்சிக்குப் பின்வரும் வாரம்

சனிக்கிழமை

யோவான் 3:22-30

 

விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும்

எதையும் பெற்றுக்கொள்ள முடியாது

 

நிகழ்வு

 

தன்னுடைய வீட்டுக்குப் பிச்சை கேட்கவந்த ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து  செல்வந்தர் ஒருவர் கேட்டார்: “உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?”. அதற்கு அந்த பிச்சைகாரன், “ஐயா! எனக்கு திடீரென்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை... உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்” என்றான்.

 

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்” என்றார் செல்வந்தர். “வேறு ஒண்ணா... எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன். அதற்கு செல்வந்தர், “உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்” என்றார். “என்னது பிசினஸ் பார்ட்னரா...?" என்று ஆச்சரியத்தோடு கேட்டான் பிச்சைக்காரன்.

 

“ஆமாம்... எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்குக் கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். தானியங்களை விற்று, லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!” என்றார் செல்வந்தர். “முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா?” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

 

“ஐயா! லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்?... உங்களுக்கு 90% எனக்கு 10% என்றா? இல்லை உங்களுக்கு 90%  எனக்கு 10%  என்றா  எப்படி??” என்று ஆர்வத்தோடு கேட்டான். “இல்லை,  நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்” என்றார் செல்வந்தர். அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை. பின்னர் அவன் “எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே, நான் உனக்கு என்றென்றைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” என்று அவன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்தான்.

இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெறத் துவங்கியன. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது. ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான். ஒரு சில மாதங்கள் சென்றன. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன், ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான், “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார். அப்போது அவன், “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ஓவராகப் பேசத் தொடங்கினான். இதனால் கடுஞ்சினமுற்ற செல்வந்தர், “இந்த வாழ்க்கையே நான் உனக்குப் பிச்சை. அப்படியிருக்க எனக்குச் சேர வேண்டிய 10% லாபத்தைக் கொடுக்க யோசிக்கிறாயா?” என்று அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்.

 

இந்த வாழ்வும் இதில் நாம் அனுபவிக்கும் அத்தனை வசதிகளும் கடவுள் நமக்கு அருளிய/கொடுத்த கொடை/பிச்சை. அப்படியிருக்கும்போது அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு என்னால்தான் எல்லாம் என்று தப்பட்டம் அடிப்பது எந்தவிதத்தில் நியாயம்?.

 

எல்லாம் இறைவனின் கொடை

 

         நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானிடத்தில், அவருடைய சீடர்களும் இன்னும் ஒருசிலரும் வந்து, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் இயேசு திருமுழுக்குக் கொடுப்பதையும், மக்கள் அனைவரும் அவரிடம் செல்வதையும் எடுத்துச் சொல்கின்றனர். அப்போதுதான் திருமுழுக்கு யோவான் அவர்களிடம், “விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால், எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது” என்கின்றார். இதை நாம் வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், நாம் அனுப்பவிக்கும் வாய்ப்பு, வசதிகள் அனைத்தும் இறைவன் கொடுத்தது. அவருடைய கருணை இல்லாமல், நம்மால் ஒன்றும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதாகும். பவுலடியாரும் இதே கருத்தைத்தான் 1 கொரி 3:1-9 ல் வலியுறுத்திக் கூறுவார்.

 

ஆகையால், இறைவனின் அருளால்தான் நாம் எல்லாக் கொடைகளையும் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை உணர்வது தேவையான ஒன்று.

 

சிந்தனை

 

         இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற கொடைகளை இறைவனின் மகிமைக்காகப் பயன்படுத்துவோம்.அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.