12 சனவரி 2019, சனி

கார்லியோன் நகர் தூய பெர்னார்ட்

கார்லியோன் நகர் தூய பெர்னார்ட் (ஜனவரி 12)

நிகழ்வு

பெர்னார்ட், கப்புச்சின் சபைத் துறவியாக மாறியபிறகு மரியன்னையிடம் ஆழமான பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த பக்தியின் பொருட்டு, மரியன்னையும் அவருக்கு அவ்வப்போது காட்சி கொடுத்து வந்தார். ஒருசில காட்சிகளில் மரியன்னை குழந்தை இயேசுவோடு தோன்றி, நீண்டநேரம் அவரோடு பேசி வந்தார். அத்தகைய தருணங்களில் எல்லாம், பெர்னார்ட் பரவச நிலையை அடைந்தார். ஒருமுறை மரியன்னை அவருக்குத் தோன்றியபோது, பெர்னார்ட் எப்போது இறப்பார் என்பதைக் குறித்து மரியன்னை அவருக்கு மிகத் திட்டவட்டமாகக் கூறினார். தன்னுடைய இறப்புத் தேதியை முன்கூட்டியே தெரிந்த பெர்னார்ட் பதற்றமடையவில்லை, மாறாக, எல்லாம் இறைத்திருவுளம் என ஏற்றுக்கொண்டு தன்னுடைய சாவுக்கு தன்னையே தயாரித்து வந்தார்.

வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ்வொன்றையும் இறைத்திருவுளம் என ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழ்ந்த பெர்னார்ட் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி.

வாழ்க்கை வரலாறு

பெர்னார்ட், 1605 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 6 ஆம் நாள், சிசிலியில் உள்ள கார்லியோன் என்னும் நகரில் பிறந்தார். இவர் கார்லியோன் நகரில் பிறந்ததால், கார்லியோன் நகர் பெர்னார்ட் என்று அன்போடு அழைக்கப்படுகின்றார்.

இவருடைய தந்தை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. சிறு வயதில் இவர் தன்னுடைய தந்தையோடு சேர்ந்து செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருந்து வந்தார். தந்தையின் இறப்புக்குப் பிறகு முழுநேர செருப்பு தைக்கும் தொழிலாளியாக மாறி, குடும்பத்திற்குப் பேருதவியாக இருந்து வந்தார். ஆனால், இது நீண்டநாட்களுக்கு நீடிக்கவில்லை. அரசாங்கத்திலிருந்து இராணுவத்திற்கு ஆட்கள் எடுத்தபோது, இவர் குடும்பப் பொறுப்பை தன்னுடைய தாயிடம் ஒப்படைத்துவிட்டு இராணுவத்தில் போய் சேர்ந்தார். இயல்பிலே பயங்கரக் கோபக்காரரக இருந்த பெர்னார்ட், தன்னை யாராவது சீண்டிபார்க்கின்ற பட்சத்தில், அவர்களை ஒரு வழி பார்க்காமல் விடமாட்டார். ஒருசமயம் விடோ கனினோ என்னும் சக படைவீரர் ஒருவர் அவரைச் சீண்டியபோது, பெர்னார்ட் அவருடைய வலக்கையை துண்டாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி, கப்புச்சின் சபையில் அடைக்கலம் புகுந்தார். பின்னர் அங்கேயே கடைசி வரைக்கும் சகோதராக இருந்து, பல்வேறு பணிகளைச் செய்து வந்தார்.

பெர்னார்ட், கப்புசின் சபையில் சேர்ந்தபிறகு, புதிய மனிதனாக உருமாறி நின்றார். அதுவரைக்கும் பயங்கரக் கோபக்காரராக இருந்த பெர்னார்ட், அதன்பிறகு சாந்த சொருபியாக மாறினார். அது மட்டுமல்லாமல், நீண்ட நேரம் ஜெபத்திலும் தவத்திலும் செலவழித்தார். மிக சொற்பமான உணவையே உண்டுவந்தார். சாதாரண வேலைகளையும்கூட மனமுவந்து செய்யத் தொடங்கினார். இதனால் துறவற மடத்தில் இருந்த எல்லாருக்கும் அவரைப் பிடித்துப் போனது. பெர்னார்ட் மரியன்னயிடம் அடிக்கடி பேசுகின்ற பாக்கியத்தையும் பெற்றார். அதனால் தன்னுடைய சாவினை முன்கூட்டியே அறிந்துகொள்ளக்கூடிய பேறு பெற்றார். இப்படி ஒரு கரடுமுரடான மனிதராக இருந்து, சாந்த சொருபியாக, எளிய மனிதராக மாறிய பெர்னார்ட் 1667 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறந்த பிறகு இவருடைய கல்லறையில் நிறைய புதுமைகள் நடந்தன. அவையெல்லாம் இவரைப் புனித நிலைக்கு உயர்த்தப் பேருதவியாக இருந்தன. இவருக்கு 2001 ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் யோவானால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெர்னார்டின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. மனமாற்றம்

தூய பெர்னார்டின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவருடைய மனமாறிய வாழ்வு அல்லது மனமாற்றம்தான். ஒரு பெரிய முரடராக, எதற்கெடுத்தாலும் சினம் கொள்பவராக இருந்த பெர்னார்ட், மிகவும் அமைதியானவராக, எளியவராக மாறினார் என்றால், நாமும் நம்முடைய தீய வாழ்க்கையிலிருந்து, தீய பழக்கவழக்கத்திலிருந்து மனம்மாறவேண்டும் என்பதுதான் நம்முன்னே இருக்கும் சவாலாக இருக்கின்றது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது, மனமாறி நற்செய்தியை நம்புங்கள்” (மாற் 1:15) என்ற போதனையைத்தான் தன்னுடைய முதன்மையான போதனையாக முன்வைக்கின்றார். அப்படியானால், மனமாற்றம் என்பது நம்முடைய வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் ஓர் உண்மைச் சம்பவத்தைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஜிம்பாபேயில் நற்செய்திப் பணியைச் செய்துவந்தவர் கய்லோர்ட் கம்பராமி (Gaylord Kambarami) என்னும் அருட்பணியாளர். இவருடைய பங்கில் பயங்கர சிகரட் புகைப்பவர் ஒருவர் இருந்தார். அவரை எப்படியாவது புகைப்பதிலிருந்து மாற்றிவிடவேண்டும் என்று தீர்மானித்த கைலோர்ட், ஒருநாள் அவரைத் தேடிச் சென்று, புகைப்பதில் உள்ள தீமையை எடுத்துச் சொல்லி, “இனிமேலும் புகைக்கக்கூடாது. ஒருவேளை புகைக்கவேண்டும் என்று தோன்றினால், இந்த புதிய ஏற்பாட்டு நூலை வாசி” என்று சொல்லி, அவரிடம் ஒரு புதிய ஏற்பாட்டு நூலைக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அந்த மனிதர், “என்னால் புகை பழக்கத்தை எல்லாம் விட்டுவிட முடியாது, வேண்டுமானால் இந்த புதிய ஏற்பாட்டு நூலில் இருக்கின்ற தாள்களை நான் புகைபிடிக்கின்றபோது சுருட்டி, சிகரெட்டாகப் பயன்படுத்திக்கொள்கின்றேன்” என்றார். “தயவுசெய்து இந்த புதிய ஏற்பாட்டு நூலை வாசி, உன்னுடைய வாழ்வில் நிச்சயம் மாற்றத்தைக் காண்பாய்” என்று சொல்லிவிட்டு, கைலோர்ட் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இது நடந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அதற்கிடையில் கைலோர்ட் அந்த மனிதரைச் சந்தித்ததேயில்லை. ஒருநாள் தற்செயலாக கைலோர்ட் ஒரு மெதோடிஸ்ட் சர்ச்சிற்குள் நுழைந்தார். அங்கே போதித்துக்கொண்டிருந்த போதகர் கைலோர்டைப் பார்த்ததும் ஒருநிமிடம் அமைதியானார். பின்னர் அவர் மக்களை நோக்கி, “அன்பார்ந்த மக்களே! உங்களிடத்தில் நான் ஒன்றைச் சொல்லியாகவேண்டும். ஒருகாலத்தில் நான் புகைப்பழகத்திற்கும் இன்னும் ஒருசில தீய பழக்கவழக்கங்களுக்கும் அடிமையாக இருந்தேன். அப்போது இவர் (கைலோர்டைச் சுட்டிக்காட்டி) எனக்கு புதிய ஏற்பாட்டு நூலைக் கொடுத்து, இதைப் படி சென்றார். நானும் விளையாட்டுத்தனமாக அந்த நூலில் இருந்த மத்தேயு, மாற்கு, லூக்கா நூல்களை சிகரெட்டா சுருட்டி அதனைப் புகைத்துக்கொண்டிருந்தேன். எப்போது நான் யோவான் 3:16 ஐ வாசித்தேனோ அப்போதே ஒருவிதமான மாற்றத்தை உணர்ந்தேன். அப்பகுதி என்னை ஏதோ செய்தது. அன்றைக்கே நான் என்னிடமிருந்த தீய பழக்கவழக்கங்களை எல்லாம் விட்டுவிட்டு மனமாறி, இந்த மெதோடிஸ்ட் சர்ச்சில் பாஸ்டராக மாறினேன்” என்றார். இதைக் கேட்டு கைலோர்டுக்கு கண்ணீரே வந்துவிட்டது.

தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாக இருந்த அந்த மனிதர், இறைவார்த்தையின் தூண்டுதலால் புதிய மனிதராய் மாறியதுபோன்று, நாம் ஒவ்வொருவரும் மனம்மாறி, புதுவாழ்க்கை வாழவேண்டும். அதைத்தான் இன்று நாம் நினைவுகூறும் தூய பெர்னார்ட்டும் நமக்கு எடுத்துக்கூறுகின்றார்.

ஆகவே, தூய பெர்னார்டின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று மனமாறிய மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.