12 சனவரி 2019, சனி

ஜனவரி 12

ஜனவரி 12

 

1யோவான் 5:14 - 21

 

இறைவனுக்குத் திருவுளமானால், நம் வேண்டுதல் கேட்கப்படும்

 

நிகழ்வு

 

          அது ஒரு பண்டிகை நாள். அன்றைய நாளில் பெண்ணொருத்தி கையில் பணமேதும் இல்லாமல், மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கச் சென்றாள். அவள் கையில் பணமில்லாமல் சென்றதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அவளுடைய குடும்பத்தில் நிலவிய வறுமை. அவளுடைய கணவரோ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கிக் கிடந்தார். அவளுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருந்தன. அந்த இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைப்பதற்கே அவளுடைய வருமானம் போதுமானதாக இருந்தது. இதில் எங்கிருந்து அவள், நல்ல நாளுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுவது?.

 

அந்தப் பெண்மணி கையில் பணமில்லாமல் சென்றதற்கான இரண்டாவது காரணம். அவள் கடவுள்மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை. எப்படியும் இந்த பண்டிகை நாளில், கடவுள் தனக்கும் தன்னுடைய குடும்பத்தைப் போன்றே வறிய நிலையில் இருக்கின்ற தனது அக்கம் பக்கத்துக்குக் குடும்பங்களுக்கும் நல்ல உணவினை உட்கொள்ள மளிகைப் பொருட்களைத் தந்து உதவுவார் என்று நம்பிக்கையோடு அவள் மளிகைக் கடைக்குச் சென்றாள்.

 

அவள் கடைக்குச் சென்ற நேரம் கடையில் கடைக்காரர் மட்டுமே இருந்தார். வேறு யாரும் அங்கு இல்லை. கடைக்காரர் அவளிடம், “என்னம்மா வேண்டும், சொல்” என்றார். அவளோ, “நல்லதொரு விருந்து படைக்கத் தேவையான பொருட்கள் எல்லாம் வேண்டும்” என்றாள். “அப்படியா... கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கின்றாய்” என்று கேட்டார் கடைக்காரர். அதற்கு அந்தப் பெண், “கையில் பணமெல்லாம் இல்லை. நேற்று இரவு மனமுருகி ஒரு தாளில் என் குடும்பத்தின் கஷ்டத்தை நினைத்து ஒரு ஜெபத்தை எழுதி வைத்தேன், அந்தத் தாள் இருக்கின்றது” என்றாள்.

 

கடைக்காரர் அந்தப் பெண்மணியை ஒருநிமிடம் ஏற இறங்கப் பார்த்தார். காரணம் அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இருந்தாலும் இளகிய மனம் படைத்தவர். பின்னர் அவர் அந்த பெண்மணியைப் பார்த்து, “சரிம்மா, என்னுடைய கடையையும் உன்னுடைய ஜெபத்தையும் நம்பி இங்கு வந்துவிட்டாய். இப்போது நீ ஜெபம் எழுதி வைத்திருக்கின்ற அந்த தாளைக் கொடு. அதனை நான் தராசில் ஒரு பகுதியில் வைத்துவிட்டு, அதனுடைய எடைக்கு இணையாக உனக்கு மளிகைப் பொருட்களைத் தருகிறேன்” என்றார். அந்தப் பெண்மணியும் அதற்குச் சரியென்று சொல்ல, கடைக்காரர் ஜெபத்தாளை ஒருபக்கம் வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் கொஞ்சம் அரிசியை அள்ளி வைத்தார்.

 

அப்படி அவர் அரிசியை அள்ளி வைக்கும்போது, எப்படியும் இந்த அரிசியின் எடைக்குக் கூட இந்த ஜெபத்தாளின் எடை இருக்காது என்ற எண்ணத்தோடுதான் அள்ளி வைத்தார். ஆனால், அவர் ஆச்சரியப்படும் வகையில் ஜெபத்தாள் இருந்த பகுதி தாழ்த்தும், அரிசி இருந்த பகுதி உயர்த்தும் இருந்தது. ‘கொஞ்சூண்டு அரசியைத்தானே வைத்தோம். இப்போது ஒருகிலோ அரிசியை வைத்துவிட்டு என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்’ என்று ஒருகிலோ அரிசியை அள்ளி வைத்தார் அவர். அப்போதும் ஜெபத்தாள் இருந்த பகுதி தாழ்ந்திருந்தது. பின்னர் அவர் காய்கறிகள், மளிகைச் பொருட்கள் என்று நிறைய எடுத்து வைத்தார். அப்போதும் ஜெபத்தாள் இருந்த பகுதியே தாழ்ந்திருந்தது. இதைப் பார்த்து மிரண்டு போன கடைக்காரர், பத்துப் பேர் சாப்பிடுகின்ற அளவுக்கு மளிகைச் சாமான்களை எடுத்து தராசில் வைத்தார். அப்போதுதான் ஜெபத்தாள் இருந்த பகுதியும் மளிகைச் சாமான்கள் இருந்த சரிசமமானது.

 

இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கடைக்காரர் அந்த பெண்மணியைப் பார்த்து, “அம்மா! உன்னுடைய ஜெபம் உண்மையிலே ஆற்றல் வாய்ந்தது. இறைவன் உனக்கு வேண்டிய மட்டும் பொருட்களைக் கொடுக்கவேண்டும் என்று நினைத்திருக்கின்றார் போலும், அதனால்தான் இப்படியோர் அதிசயம் நடந்திருக்கின்றது” என்று அவரைப் பாராட்டிவிட்டு, ஜெபத்தாளுக்கு இணையாக இருந்த மளிகைச் சாமான்களை அந்தப் பெண்மணியிடம் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

 

தன்னுடைய விருப்பதற்கு ஏற்ப, யாராரெல்லாம் தன்னிடம் நம்பிக்கையோடு வேண்டுகிறார்களோ, அவர்களுக்கு இறைவன் செவி சாய்க்கின்றார் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

 

இறைவனுக்குத் திருவுளமானால், நம் வேண்டுதல் கேட்கப்படும்

 

         இன்றைய முதல் வாசகத்தில் யோவான், “நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவி சாயக்கின்றார்” என்கின்றார். இறைவன் எல்லாவற்றுக்கும் செவி சாய்ப்பதில்லை. ஆனால், அவர் யாராரெல்லாம் தன்னுடைய திருவுளத்திற்கு ஏற்ப ஜெபிக்கின்றார்களோ, அவர்களுக்கு செவிமடுக்கின்றார். மட்டுமல்லாமல், மாசற்ற உள்ளத்தோடு ஜெபிப்போருக்கும் அவர் செவிமடுகின்றார் (திபா 66:18)

 

சிந்தனை

 

         இறைவனுக்குத் தெரியும் தன்னுடைய பிள்ளைகளுக்கு எப்போது, என்ன கொடுப்பது என்று. இருந்தாலும் நம்பிக்கையோடு அவருடைய திருவுளத்திற்கு ஏற்ப ஜெபிக்கின்றபோது, அவர் நமக்கு செவி சாய்க்கின்றார்.

 

ஆகவே, நமது ஜெபம் இறைவனுக்கு உகந்ததாக இருக்கச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.