செவ்வாய்க்கிழமை
திருக்காட்சிக்குப் பின்வரும் வாரம்
செவ்வாய்க்கிழமை
மாற்கு 6:45-52
உணவளிக்கும் இறைவன்
நிகழ்வு
அது ஒரு மலைப்பாங்கான பகுதி. அப்பகுதியில் ஒருசில ஆண்டுகளாகவே மழை பெய்யாததால், அங்கு வசித்து வந்த காட்டு விலங்குகள் உணவுக்காக கீழே இறங்கிவரத் தொடங்கின.
ஒருநாள் உணவுகிடைக்காமல் தவித்த ஒரு குரங்குக்கூட்டம் மக்கள் வந்துபோன ஒருசாலையோரத்தில் மிகவும் பாவமாய் நின்றுகொண்டிருந்தன. அந்நேரத்தில் பழங்களைப் பெட்டி பெட்டியாய் அடுக்கிக்கொண்டு சென்ற ஒரு பெரிய லாரி அந்தப் பக்கமாய் வந்தது. அது அங்கிருந்த பள்ளத்தில் ஏறி இறங்கியபோது, அதிலிருந்து ஒரு பெட்டி சரிந்து கீழே விழுந்தது. லாரியை ஒட்டிக்கொண்டு சென்ற வண்டி ஓட்டுநர், வண்டியிலிருந்து ஒரு பெட்டி கீழே விழுந்ததுகூடத் தெரியாமல் வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றார்..
லாரியிலிருந்து பெட்டி விழுந்ததைக் கவனித்த குரங்குக்கூட்டம் அதனருகே சென்று, கையில் ஆளுக்கொரு பழத்தை எடுத்துக்கொண்டு பசிதீரச் சாப்பிட்டது.
கடவுள் தன் பார்வையில் உள்ள யாரையும் பசியாய் இருக்க விடமாட்டார் என்பதற்கு இந்த நிகழுவு ஒரு சான்று
ஆயனில்லா ஆடுகள் போன்று இருந்த மக்கள்
நற்செய்தி வாசகத்தில், இயேசு கடற்கரையில் இறங்கியபோது, அங்கு பெருந்திரளான மக்கள் இருப்பதையும், அவர்கள் ஆயினில்லா ஆடுகள் போன்று இருப்பதையும் கண்டு, அவர்கள்மீது பரிவு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். திருப்பாடல் 23 ல் வாசிப்பதுபோல், ஓர் ஆயன் என்பவன் மக்களை நன்முறையில் வழிநடத்தி, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி, அவர்களுக்கு அரணாக இருக்கவேண்டும். ஆனால், இயேசுவின் காலத்திற்கு முன்பாக இருந்த தலைவர்கள் எல்லாம் ஓர் ஆயனுக்குரிய கடமையை ஆற்றாமல், தங்களை வளப்படுத்திக்கொள்வதிலே குறியாக இருந்ததால், மக்கள் ஆயனில்லாத ஆடுகளைப் போன்று இருந்தார்கள். இதைக் கண்டு இயேசு அவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்கு பலவற்றைக் கற்பிக்கின்றார்.
பிரச்சினையைப் பிரச்சினையாகவே மட்டும் பார்த்த சீடர்கள்
இயேசு மக்கள் கூட்டத்திற்கு தொடர்ந்து போதித்துக்கொண்டிருக்கும்போது நேரமாகிவிடவே, சீடர் இயேசுவிடம் வந்து, “மக்களை பக்கத்து ஊர்களுக்குச் சென்று உணவு வாங்கிக்கொள்ளுமாறு அனுப்பிவிடும்” என்கின்றார். இயேசுவோ அவர்களிடம், “அவர்கள் செல்லத் தேவையில்லை, நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள்” என்கின்றார். இங்கேதான் சீடர்கள் ஒரு பிரச்சினையைக் கையாண்ட விதத்திற்கும், இயேசு ஒரு பிரச்சினையைக் கையாண்ட வித்தியாசத்தையும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். சீடர்கள் இது பாலை நிலமாயிற்றே, இவ்வளவு பெரிய மக்கள்தொகைக்கு இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறுதுண்டுகூடக் கிடைக்காதே என்று பிரச்னையை அதாவது இல்லாததையே நினைத்தையே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், இயேசு அப்படியெல்லாம் நினைக்கவில்லை. அவருடைய அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது.
பிரச்சினையை வாய்ப்பாகப் பார்த்த இயேசு
சீடர்கள், இது பாலைநிலம், இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும், ஆளுக்கு ஒரு சிறுதுண்டுகூடக் கிடைக்காதே என நினைத்துக்கொண்டிருக்கும்போது, இயேசு அவர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய் பாருங்கள்” என்கின்றார். அவர்களும் போய் பார்த்துவிட்டு, “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள் உள்ளன” என்கின்றனர். இயேசு அவற்றை ஆசிர்வதித்துவிட்டு மக்களுக்குக் கொடுக்க, பெண்கள், குழந்தைகள் நீங்கலாக ஐயாயிரம் ஆண்கள் உணவு உண்கின்றார்கள்.
சீடர்கள் ஒன்றும் செய்ய முடியாதவாறு கையறு நிலையில் நின்றுகொண்டிருந்தபோது, இயேசுவால் மக்களுக்கு அப்பங்களைப் பகிர்ந்தளிக்க முடிந்தது என்றால், அவர் தனக்கு முன்னால் இருந்த பிரச்சினையை பிரச்சினையாகப் பார்க்காமல், கடவுளின் பேரன்பை, அவர் எல்லா உயிர்களுக்கும் உணவிடுகின்ற அருட்பெருக்கை மக்களுக்குக் காட்டும் ஒரு வாய்ப்பாகப் பார்த்தார். அதனால்தான் அவரால் அத்தனை மக்களுக்கும் உணவிட முடிந்தது. இதை இன்னும் வேறு கோணத்தில் பார்த்தால், சீடர்கள் தங்களுக்கு முன்பாக இருந்த பிரச்சினையை அவநம்பிக்கையோடு அணுகினார்கள். ஆனால், இயேசுவோ கடவுள்மீது கொண்ட நம்பிக்கையால் அணுகினார். அதனால் அதிசயம் நடந்தது.
நாமும் நமக்கு முன்பாக இருக்கக்கூடிய பிரச்சினையை பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அதை, நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஓர் ஏணியாக, வாய்ப்பாக பார்த்தோம் என்றால், நம்மாலும் அதிசயங்களைச் செய்ய முடியும்.
சிந்தனை
வாழ்க்கையை எதிர்மறையாகப் பார்க்கின்றவன், ‘ரோஜாவில் முட்கள் இருப்பதாகச்’ சொல்வான். ஆனால், வாழ்க்கை நேர்மறையாகப் பார்க்கின்றவன், ‘முள்ளில் ரோஜா இருக்கின்றதே’ என்று மகிழ்ச்சி கொள்வான். நாம் நமக்கு முன்பாகப் பிரச்சினை இருக்கின்றதே என்று வருந்தாமல், அந்தப் பிரச்சினையிலும் ஒரு வாய்ப்பு இருக்கின்றது என்ற நேர்மறையோடு வாழ்க்கையை அணுகுவோம். இயேசுவைப் போன்று பரிவுள்ளம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.