08 சனவரி 2019, செவ்வாய்

தூய செவரின்

தூய செவரின் (ஜனவரி 08)

நிகழ்வு

சில காலம் பாலைவனத்தில் நோன்பிருந்து ஜெபித்துவிட்டு நோரிக்கும் என்னும் பகுதிக்கு நற்செய்தியை அறிவிக்கச் சென்றபோது புனித செவரினை யாரும் அங்கு ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் அறிவித்த நற்செய்தியை யாரும் காது கொடுத்துக் கேட்கவுமில்லை. இதனால் சினங்கொண்ட செவரின், “இன்னும் சில நாட்களில் இந்நகரின் மீது எதிரிகள் படையெடுத்து வருவர், அப்போது அவர்கள் இந்நகரை தரைமட்டமாக்கிவிட்டுச் செல்வர்” என்று இறைவாக்கு உரைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவர் சொன்னதுபோன்றே சில நாட்கள் கழித்து குணர்கள் என்னும் பிரிவினர் நோரிக்கும்மீது படையெடுத்து வந்து, அந்நகரை தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். அப்போதுதான் நோரிக்குமிலிருந்த மக்களுக்குப் புரிந்தது, முன்பு தங்களிடத்தில் வந்தவர் சாதாரணமானவர் கிடையாது, இறையடியார் என்று. உடனே அவர்கள் செவரினைத் தேடிச் சென்று, அவரைத் தங்களுடைய இடத்திற்கு அழைத்து வந்து அவர் அறிவித்து வந்த இறைவார்த்தைக்கு செவிமடுத்து வந்தார்கள்.

வாழ்க்கை வரலாறு

செவரின் எப்போது, எங்கு பிறந்தார் என்பது பற்றிய தெளிவான குறிப்புகள் கிடையாது. இருந்தாலும் பின்னாளில் இவருடைய எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஆய்வுசெய்யப்பட்டபோது, இவர் 410 ஆம் ஆண்டு, உரோமையில் பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

தொடக்கத்தில் இவர் பாலைவனத்தில் தனியாக இருந்து நோன்பிருந்து வந்தார். அதன்பின்னர் இவர் நோரிக்கும் (தற்போதைய ஆஸ்திரியா) என்னும் பகுதிச் சென்று, அங்கு ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைத்து வந்தார். தொடக்கத்தில் அங்கிருந்த மக்கள் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை, பின்னர்தான் அவர்கள் இவருடைய வாழ்வையும் இவரிடமிருந்த வல்லமையையும் கண்டு ஏற்றுக்கொண்டார்கள்.

ஒரு சமயம் பவாரியா என்னும் பகுதியில் பயங்கர பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் எல்லாரும் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள். அப்போது அங்கிருந்த செல்வச் சீமாட்டியிடம் ஏராளமான தானியங்கள் இருந்தன. இதை அறிந்த செவரின் அந்த செல்வச் சீமாட்டியிடம் சென்று, மக்களின் நிலையை எடுத்துகூறி, அவர்களுக்கு உணவு கிடைக்க வழிவகை செய்தார். இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அதுமட்டுமல்லாமல், செவரினை அவர்கள் மிக உயர்வாக மதிக்கத் தொடங்கினார்கள். பஞ்ச காலத்தில் செவரின் மக்களோடு இருந்து, அவர்களுக்கு ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துக்கூறி, அவர்களை ஆறுதல் படுத்தினார்.

இதற்கிடையில் மக்கள் அவர் செய்துவந்த செயல்களைப் பார்த்து அவரை ஆயராகத் திருநிலைப்படுத்துவதற்கு முயன்றார்கள். ஆனால், செவரினோ தாழ்ச்சியோடு பணிசெய்யக் கூடிய எனக்கு ஆயர் பதவியோ, வேறு எந்த பதவியோ வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டார். இவ்வாறு மக்களுக்கு மத்தியில் போதிக்கும் பணியையும் அவர்களிடமிருந்த கைவிடப்பட்டவர்கள், அடிமைகள் போன்றோருக்கு ஆற்றுப்படுத்தும் பணியையும் செய்து வந்த செவரின் பாசா, பவியானா போன்ற பகுதிகளில் துறவற சபையை நிறுவி, அங்கு வந்த மக்களுக்கு நல்ல பயற்சிகளைக் கொடுத்து வந்தார். செவரின் எப்போதுமே பின்னர் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிவிக்கும் கொடையைப் பெற்றிருந்தார். ஓடோ ஆசர் என்னும் ஜெர்மானியத் தளபதியிடம், பின்னாளில் நீ உரோமையின் அரசராக மாறுவாய் என்று இறைவாக்கு உரைத்தார். அவர் சொன்னது நடந்தது, இதனால் ஓடோ ஆசர் செவரினை மிக உயர்வாக மதித்து வந்தார். செவரின் ஒரு தீர்க்கத்தரசியைப் போன்று வாழ்ந்துவந்ததால், தன்னுடைய சாவையும் அவர் முன்கூட்டியே அறிவித்தார். அவர் சொன்னதுபோன்றே 482 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். அவர் இறக்கும்போது திருப்பாடல் 150 ஐ பாடிக்கொண்டே உயிர்துறந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய செவரினின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தாழ்ச்சி

தூய செவரினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடமிருந்த தாழ்ச்சிதான். செவரினை இறைவன் பல்வேறு வரங்களாலும் கொடைகளாலும் ஆசிர்வதித்திருந்தார். அப்படி இருந்தும்கூட அவர் தான் என்ற மமதையில் ஆடாமல், மிகவும் தாச்சியோடு இறைப்பணி செய்து வந்தார். அவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சியோடு இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மேன்மையடைய தாழ்ச்சியே வழி என்கின்றது நீதிமொழிகள் புத்தகம் (நீமொ 15:33). நாம் தாச்சியோடு இருக்கும்போது, தாழ்ச்சியோடு பணிசெயகின்றபோது இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, தூய செவரினின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- Fr. Maria Antonyraj, Palayamkottai.