08 சனவரி 2019, செவ்வாய்

ஜனவரி 08

ஜனவரி 08

 

1 யோவான் 4: 7-10

 

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக

 

நிகழ்வு

 

         ஓர் அரசு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்புப் படித்து வந்த ரஞ்சித் என்ற மாணவனை அந்த வகுப்பில் இருந்த எல்லாரும் வெறுத்து வந்தனர். காரணம் அவன் எல்லார்மீதும் கோபப்பட்டு, அடிக்கடி சண்டைபோட்டு வந்தான். இன்னொரு பக்கம் அவன் உடுத்திவந்த பழைய, சில சமயங்களில் கிழிந்த ஆடைகள்கூட அவனுடைய வகுப்பு மாணவர்களை அவனருகே அண்டவிடாமல் செய்தன. ஏற்கனவே படிப்பில் மிகவும் பின்தங்கியிருந்த ரஞ்சித்தை இவையெல்லம் சேர்த்து, அவனை மிகவும் தனிமைப்படுத்தின.

 

ரஞ்சித் படித்து வந்த அதே வகுப்பில் ரூபன் என்ற ஒரு மாணவன் படித்துவந்தான். அவன் பிடிப்பில் கெட்டிக்காரன். அதே நேரத்தில் கரிசனையோடு இருக்கக்கூடியவன். அப்படிப்பட்டவன் ஒவ்வொருநாளும் ரஞ்சித்தைக் கூர்ந்து கவனித்து வந்தான். அவன் ரஞ்சித்திடம் பேச நினைப்பான். ஆனாலும் ரஞ்சித்தைப் பற்றி அவனுடைய உள்ளத்தில் இருந்த ஒருவிதமான பய உணர்வு, அவனை அவனோடு பேசவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது.

 

ஒருநாள் காலையில் ரூபன் வகுப்பிற்குள் நுழைந்தபோது, ரஞ்சித் வகுப்பில் ஓர் ஓரமாக அமர்ந்துகொண்டு அழுதுகொண்டிருந்தான். அவனருகே சென்ற ரூபன், “ஏனப்பா அழுகிறாய், உனக்கு என்னாயிற்று, சொல். நான் அதை நிவர்த்திசெய்து தருகிறேன்” என்றான். ரஞ்சித் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே, “என்னை யாருக்குமே பிடிக்கவில்லை. யாரும் என்னை அன்பு செய்யத்தயாராக இல்லை” என்றான். “அழாதே ரஞ்சித். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். உன்னை நான் அன்பு செய்கிறேன். இனிமேல் நாம் இருவரும் நண்பர்கள் சரியா” என்று ரூபன் அவனைத் தேற்றினான்.

 

பின்னர் ரூபன் அவனிடம், “அப்புறம் ரஞ்சித், உன்னுடைய  பெற்றோர் என்ன செய்கிறார்கள்?, உன்னுடைய குடும்பத்தில் யாராரெல்லாம் இருக்கிறார்கள் என்று சொல்?” என்றான். ரஞ்சித் மிகவும் தயங்கியவாறு, “என்னுடைய வீட்டில் நான், என் அப்பா, அம்மா அவ்வளவுதான். அம்மா ஒரு கான்சர் பேசியன்ட். அப்பா பயங்கரக் குடிகாரர். அதனால் ஒவ்வொருநாளும் சாப்பிடுவதற்கே மிகவும் கஷ்டப்படுவோம்” என்றான். இதைக் கேட்டு ரூபன் கண்கலங்கினான்.

 

“கவலைப்படாதே ரஞ்சித். இனிமேல் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான் கவனித்து கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அன்றுமுதல் ரூபன் ரஞ்சித்தோடு அதிகமான நேரம் செலவழித்து அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தான். மேலும் தன்னுடைய பெற்றோருடைய அனுமதியுடன், ரூபன் தனக்காக வாங்கப்பட்ட புது ஆடைகளை எடுத்துவந்து ரஞ்சித்துக்குக் கொடுத்தான். இதனால் ரஞ்சித் படிப்பிலும் சரி, நடவடிக்கைகளிலும் சரி நன்றாகத் தேறி, அந்த வகுப்பில் உள்ள அனைவருக்கும் பிடித்த ஒரு மாணவனாக மாறினான்.

 

ரூபன் ரஞ்சித்தின் மீது காட்டிய அன்பு, நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழக்கூடிய சக மனிதர்கள்மீது காட்டவேண்டிய அன்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

 

அன்பு செலுத்தும் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்

 

         இன்றைய முதல் வாசகத்தில் யோவான் இவ்வாறு கூறுகிறார், “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக. ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகின்றது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்” என்று. இதையே  நாம் இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.

 

இயேசு கிறிஸ்து தன் சீடர்களுக்கு, ஏன் இந்த மானுட சமூகத்திற்குக் கொடுத்த மேலான கட்டளை, “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும்” என்பதாகும். இயேசு சொன்னதுபோன்று நாம் ஒருவர் மற்றவரை, அவர் நம்மை அன்பு செய்ததுபோன்று அன்பு செய்யவேண்டும். இப்படி நாம் ஒருவர் மற்றவரை அன்புசெய்தோம் என்றால், நாம் யாவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்களாகின்றோம். ஏனெனில் கடவுள் அன்பாக இருக்கின்றார்.

 

இன்றைக்கு நாம் வாழ்ந்துகொண்டிருந்த இவ்வுலகில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கலவரம், வன்முறை என்று தீமையான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது எங்கே நாம் சாத்தானின் வழிவந்தவர்களோ என்று எண்ணத் தொன்றுகின்றது. சாத்தான் இருக்கின்ற இடத்தில்தான் பிரிவினையும் பிரச்சனைகளும் பிளவுகளும் இருக்கும். ஆகவே, இப்படிப்பட்ட சூழலில், நாம் இயேசு கொடுத்த அன்புக் கட்டளையின் நடந்து, இவ்வுலகை அன்பில் மேலோங்கி இருக்கின்ற ஓர் இடமாக மாற்றுவதுதான் நமக்கு முன்பாக இருக்கின்ற சவாலாக இருக்கின்றது.

 

சிந்தனை

 

         ஒருவர் சக மனிதரிடம் காட்டுகின்ற அன்பை வைத்துதான் அவர் கடவுளிடமிருந்து வந்தவரா? அல்லது சாத்தானிடமிருந்து வந்தவரா? என்பதை அறிந்துகொள்ளமுடியும். நாம் ஒருவர் மற்றவரை இயேசு நம்மை அன்பு செய்தது போன்று அன்பு செய்வோம். அதன்வழியாக நாம் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் ஆவோம். அவருடைய அருளை நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.