07 சனவரி 2019, திங்கள்

திங்கள்கிழமை

திருக்காட்சிக்குப் பின் வரும் வாரம்

திங்கள்கிழமை

மத்தேயு 4:12-17, 23-25

 

பேரொளியைக் கண்ட மக்கள்

 

நிகழ்வு

 

         ஓரூரில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவருக்கு ஒன்பது வயதில் மகன் ஒருவன் இருந்தான். ஒருநாள் மகன் தந்தையிடம் வந்து, “அப்பா! நானும் உங்களோடு சேர்ந்து செருப்புத் தைக்கட்டுமா?” என்று கேட்டான். அதற்கு அவனுடைய தந்தை, “வேண்டாம்பா! என்னோட கஷ்டம் என்னோடேயே போகட்டும்... நீயாவது படித்து பெரியாளாய் வா” என்றார். “நீங்கள் சொன்னதுபோன்றே நான் பெரிய ஆளாய் வருகிறேன்பா... இப்போது சிறுதுநேரம் மட்டும் உங்களோடு சேர்ந்து செருப்புத் தைத்து, உங்களுக்கு ஒத்தாசை புரிகிறேனே” என்று இழுத்தான் மகன்.

 

மகன் சொன்னதைத் தட்டமுடியாமல் தந்தை, “சரிப்பா! உன் விரும்பம் போல செய்” என்று சொல்லிவிட்டு, கையில் பெரிய ஊசியை எடுத்துக்கொண்டு செருப்புத் தைக்கத் தொடங்கினார். மகனும் தன் தந்தை செய்வதுபோன்று கையில் ஊசியை எடுத்துக்கொண்டு செருப்புத் தைக்கத் தொடங்கினான். ஆனால் எதிர்பாராத விதமாக அவனுடைய கையில் இருந்த பெரிய ஊசி அவனுடைய கண்களில் பட்டு, பார்வையை இழந்தான்.

 

தன் சொல் பேச்சைக் கேட்காமல் பார்வையை இழந்து நின்ற தன் மகனை நினைத்து தந்தை பெரிதும் வருந்தினார். இருந்தாலும் மகனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவனை நகரத்தில் இருந்த பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். அக்காலத்தில் பார்வையற்றோர் மரப்பலகையில் செதுக்கப்பட்ட எழுத்துகளைத் தடவித் தடவித்தான் படிக்கவேண்டும். அது அவனுக்கு மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும் மனந்தளராமல் படித்தான். அதேநேரத்தில் அவனுக்குள், தன்னைப் போன்று பார்வை இழந்து நிற்கின்றவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ள ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதற்கான சோதனை முயற்சிகளில் அவன் தொடர்ந்து ஈடுபட்டான்.

 

இப்படிப் பல சோதனைகளுக்குப் பின்னும் போராட்டங்களுக்குப் பின்னும் அந்த பார்வையற்ற மாணவன், பார்வையற்ற குழந்தைகள் எளிதாகப் பாடம் கற்றுக்கொள்கின்ற அளவுக்கு ஒன்றைக் கண்டுபிடித்தான். அதான் ப்ரெயில் முறை. அதைக் கண்டுபிடித்த மாணவ(ர்)ன்தான் லூயிஸ் ப்ரெயில்.

 

இன்றைக்கு உலகமெங்கிலும் உள்ள பார்வையற்றவர்கள் எளிதாகப் பாடம் கற்றுக்கொள்கின்ற அளவுக்கு அவர்களுடைய வாழ்வில் ஒளியை ஏற்றிவைத்த லூயிஸ் ப்ரெயிலை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 

 

காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்

 

         யோவான் கைதுசெய்யப்பட்டதை அறிந்து, இயேசு கப்பர்நாகுமுக்கு வந்து  அங்கு தன்னுடைய பணியைச் செய்யத் தொடங்குகின்றார். எப்போதுமே இயேசுவின் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும், பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட இறைவார்த்தை நிறைவேறுவதாக எழுதும் மத்தேயு நற்செய்தியாளர், இயேசு புறவினத்தார் அதிகமாக வாழும் கலிலேயாப் பகுதியில் தன்னுடைய நற்செய்திப் பணியை செய்யத் தொடங்கியதும், “காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது” என்று எழுதுகின்றார்.

 

இயேசுவும் அவருடைய பணிவாழ்வும் காரிருளில் இருந்த மக்களுக்கு எப்படிப் பேரொளியாக இருந்தது என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் வருகைக்கு  முன்பாக மக்கள் ஆயனில்லாத ஆடுகள் போன்று இருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களுக்கு நல்லவற்றைப் – இறைவார்த்தையைப் – போதிக்கவும், அவர்களைக் கரிசனையோடு வழிநடத்துவதற்கும் நல்ல தலைவர்கள் இல்லை. இதனாலே மக்கள் ‘காரிருளில்’ இருந்தார்கள்.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயேசு வருகின்றார். அவர் மக்களுக்கு ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைத்து, அவர்களிடமிருந்த பல்வேறுவிதமான நோயாளிகளையும் குணப்படுத்துகின்றார்.   பல்வேறு விதமான நோய்கள் என்று சொன்னால் உடல், உள்ள, ஆன்ம நோய்கள் அத்தனையும் அடங்கும். இயேசு மக்களிடமிருந்த பல்வேறுவிதமான நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களைக் குணப்படுத்துவதன் வழியாக அவர்களுக்கு பேரொளியாக விளங்குகின்றார். இயேசு இப்படி மக்களிடமிருந்து எல்லா விதமான நோயாளிகளையும் குணப்படுத்தியதைத் தொடர்ந்து, அவருடைய பெயரும் புகழும் எங்கும் பரவுகின்றது. அதனால் எல்லாத் திசையிலிருந்தும் மக்கள் அவரைப் பின்பற்றத் தொடங்குகிறார்கள்.

 

சிந்தனை

 

         “நானே உலகின் ஒளி” என்று சொல்லும் (யோவான் 8:12) இயேசு, “நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள்” என்கின்றார் (மத் 5:14). அப்படியானால், இயேசு தன்னுடைய நற்செயல்களால் உலகிற்கு ஒளியானது போன்று, நாமும் நம்முடைய நற்செயல்களால் உலகிற்கு ஒளியாக வேண்டும். அதைத் தான் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றார்.

 

ஆகவே, நாம் இயேசுவைப் போன்று நமது நற்செயல்களால் உலகிற்கு ஒளியாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.