07 சனவரி 2019, திங்கள்

ஜனவரி 07

ஜனவரி 07

 

01யோவான் 3: 22 - 4:6

 

“கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வோருடைய மன்றாட்டு கேட்கப்படும்”

 

நிகழ்வு

 

         நகர்புறத்தில் இருந்த ஒரு பங்கில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த குருவானவர் ஒருவர், ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் அன்பியத் திருப்பலிக்காக ஓர் இல்லத்திற்குச் சென்றிருந்தார். அன்பியத் திருப்பலியில் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான ஆண்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

 

அன்றைய இறைவார்த்தை ஜெபத்தை மையப்படுத்தியதாக இருந்தது. இறைவார்த்தைப் பகிர்வின்போது பங்குத்தந்தை ஜெபத்தின் வல்லமையைக் குறித்தும், எத்தகைய மனநிலையோடு ஜெபித்தால், ஒருவருடைய ஜெபம் கேட்கப்படும் என்றும் மிக அற்புதமாக எடுத்துச் சொன்னார். எல்லாரும் அதனை மிகக் கவனமாகக் கேட்டார்கள்.

 

அன்பியத் திருப்பலி முடிந்தது. அப்போது அன்பியத் திருப்பலிக்கு வந்திருந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் பங்குத்தந்தையிடம் வந்து, “தந்தையே! வணக்கம். உங்களிடத்தில் நான் ஒன்றைக் கேட்கவேண்டும். நீங்கள் உங்களுடைய மறையுரையில் ஜெபத்தில் வல்லமையைப் பற்றி மிக அற்புதமாக எடுத்துச் சொன்னீர்கள். இப்போது என்னுடைய கேள்வி இதுதான். ஊதாரித்தனமாக அலைந்துகொண்டிருக்கும் என்னுடைய மகன் மனம்மாறி நல்ல மனிதனாக வாழவேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக நான் ஜெபித்துக்கொண்டு வருகிறேன். ஆனால் இறைவன் என்னுடைய ஜெபத்தை இதுவரை கேட்கவில்லை? அது ஏன்?” என்று கேட்டார்.

 

பங்குத்தந்த சிறுதுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, அந்த மனிதரைப் பார்த்துக் கேட்டார், “உங்களுக்கு யார்மீதும் முன்விரோதம் இருக்கின்றா?”. “ஆமாம் தந்தையே! நானும் என்னுடைய நெருங்கிய நண்பனும் ஒன்றாகச் சேர்ந்து தொழில் செய்தோம். ஆனால், என்னுடைய நண்பன் என்னை ஏமாற்றி, பணத்தை அபகரித்துக் கொண்டான். அதனால்தான் நான் இத்தனை நாளும் அவனைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கின்றேன்” என்றார். உடனே பங்குத்தந்தை அவரிடம், “உங்களுடைய ஜெபம் கேட்கப்படவில்லை என்று சொன்னீர்களே. அதற்கு முழுமுதற் காரணம். இப்போது நீங்கள் சொன்னதுதான். முதலில் நீங்கள் போய் உங்கள் நண்பரோடு சமரசம் ஆகுங்கள். அப்போது தன்னாலே உங்களுடைய ஜெபம் கேட்கப்படும்” என்றார்.

 

பங்குத்தந்தை சொன்ன வார்த்தைகளை மனதில் ஏற்றுக்கொண்டு, அந்த மனிதர் வெளியே சென்று, தன்னோடு நண்பரோடு சமரசமானார். இது நடந்து ஒருசில மாதங்களிலேயே அந்த மனிதருடைய மகன் மனம்மாறி நல்ல மனிதனாக வாழத் தொடங்கினான்.

 

கடவுளின் கட்டளைகளான அன்பு, மன்னிப்பு, கீழ்ப்படிதல் போன்ற கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோருடைய ஜெபங்களை இறைவன் நிச்சயம் கேட்பார். அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்தான் இந்த நிகழ்வு.

 

கடவுளை அன்புசெய்வோர்  அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பர். அப்போது அவர் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்பார்

 

இன்றைய முதல் வாசகத்தில் யோவான் இவ்வாறு எழுதுகின்றார்: “அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றோம்”. இதையே நாம் இவ்வாறு மாற்றிச் சிந்திக்கலாம். ‘யாராரெல்லாம் கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிக்கின்றார்களோ, அவர்களுடைய ஜெபங்களை ஆண்டவர் கேட்கிறார்” என்று.

 

கடவுளின் கட்டளைகளை எல்லாராலும் கடைப்பிடித்துவிட முடியுமா? என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். யோவான் தன்னுடைய நற்செய்தியில் இயேசு கூறுவதாக இவ்வாறு எழுதுவார், “நீங்கள் என்மீது அன்புகொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்” என்று (யோவான் 14:15). கடவுளை முழுமையாக அன்பு செய்கின்ற ஒருவரால்தான் அவருடைய கட்டளைகளைக் கடைபிடிக்க முடியும். அப்படி கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வோருடைய ஜெபத்தை இறைவன் உறுதியாகக் கேட்கின்றார். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.

 

இன்றைக்கு பலருடைய உள்ளத்தில் எழுகின்ற கேள்வி இதுதான். ‘இறைவனிடத்தில் நான் தொடர்ந்து ஜெபித்து வருகிறேனே... அப்படியிருந்தும் இறைவன் ஏன் என்னுடைய ஜெபத்தைக் கேட்கவில்லை?’. இப்படிபட்ட கேள்வியோடு அங்கலாய்க்கின்ற ஒவ்வொருவரையும் பார்த்து இறைவன் கேட்கின்ற ஒரு கேள்வி, “என்னிடத்தில் தொடர்ந்து ஜெபிக்கின்றீர்களே, என்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றீர்களா?’ என்பதுதான். என்றைக்கு நாம் இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றோமா? அன்றைக்கு நம்முடைய ஜெபம் கேட்கப்படுவது உறுதி.

 

சிந்தனை

 

         திருப்பாடல் ஆசிரியர் கூறுவார், “என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்கு செவிசாய்த்திருக்க மாட்டார்” (திபா 66:18). இவ்வார்த்தைகள் கடவுளின் கட்டளைகளுக்கு எதிராக ஒருவர் நடக்கின்றபோது, அவருக்கு கடவுள்  செவி சாய்க்கமாட்டார் என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. ஆதலால், இறைவன் நமக்கு செவிசாய்க்க வேண்டுமெனில், அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்து வாழவேண்டும்.

 

நாம் இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.