07 சனவரி 2019, திங்கள்

தூய ரெய்மன்ட்

தூய ரெய்மன்ட் (ஜனவரி 07)

நிகழ்வு

ரெய்மன்ட்டுக்கும், ஸ்பெயின் நாட்டு மன்னர் ஜேம்சுக்கும் இடையே நட்புரீதியாக நல்லதொரு உறவு நீடித்து வந்தது. ஒருவர் மற்றவர்மீது அளவுகடந்த மதிப்பினை வைத்திருந்தார்கள்.

இதற்கிடையில் ஒரு சமயம் மஜோர்கா என்னும் தீவிற்கு இரண்டுபேரும் நற்செய்தி அறிவிப்பதற்காகச் சென்றிருந்தார்கள். அங்கே சென்றதும் ரெய்மன்ட் மிக ஆர்வத்தோடு அங்கிருந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்து வந்தார். ஆனால், மன்னர் ஜேம்சோ அங்கிருந்த பணிப்பெண் ஒருவருடன் தவறான வாழ்க்கை வாழத் தொடங்கினார். இது ரெய்மன்ட்டிற்கு சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. அதனால், அவர் மன்னரைக் கடிந்துகொண்டுவிட்டு, தீவிலிருந்து புறப்பட நினைத்தார். ஒரு சாதாரண மனிதர் நம்மைக் கடிந்துகொள்வதா? என்று நினைத்த மன்னர், ரெய்மன்ட்டை அத்தீவிலிருந்து போகவிடாமல் தடுக்கப் பார்த்தார். ஆனால் ரெய்மன்ட்டோ தன்னுடைய மேலாடையைக் கழற்றி கடலில் வீசி, அதன் ஒரு நுனியை ஒரு கம்பில் மாட்டி அதனைத் தோணிபோல பயன்படுத்தி, 150 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பார்சிலோனாவை ஆறு மணி நேரத்திற்குள் கடந்தார். இதையெல்லாம் பார்த்து மிரண்டு போன மன்னர் தன்னுடைய தவற்றுக்காக ரெய்மன்ட்டிடம் மன்னிப்புக் கேட்டார், அது மட்டுமல்லாமல், இனிமேலும் அப்படிப்பட்ட தவறு செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டார்.

ரெய்மன்ட் தன்னுடைய மேலாடையை தோணிபோல பயன்படுத்தி. கடல்மீது வந்ததைப் பார்த்த மக்கள் அனைவரும் அவர் உண்மையிலே இறையடியார் என்று நம்பத் தொடங்கினார்கள்.வாழ்க்கை வரலாறு

ரெய்மன்ட், 1175 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள பெனபோர்ட் என்னும் ஊரில் பிறந்தார். ரெய்மன்ட்டின் குடும்பம் ஆரோகன் என்னும் மன்னருக்கு நெருங்கிய உறவு. இதனால் ரெய்மன்ட் செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையப் பெற்றார். அவருடைய பெற்றோர் அவருக்கு மிக உயர்ந்த கல்வியை வழங்கினார்கள். ரெய்மன்ட்டும் தனக்கு வழங்கப்பட்ட கல்வியினால் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கினார். எந்தளவுக்கு என்றால், தன்னுடைய இருபதாவது வயதிலேயே திருச்சபை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அடுத்த ஒருசில ஆண்டுகளிலேயே, போலன்ஜோ என்னும் இடத்தில் இருந்த பல்கலைக்கழத்தில் திருச்சபை திருச்சட்ட பாடத்திற்கு பேராசிரியராக உயர்ந்தார். அவ்வாறு அவர் பேராசிரியராக இருந்து திருச்சபையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்தார்.

இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்போது ரெய்மன்ட், ரெஜினால்டு என்பவரின் மறையுரையைக் கேட்டு, மனம் உந்தப்பட்டு தொனிக்கன் சபையில் சேர்ந்தார். அங்கேயே ஒருசில ஆண்டுகள் இருந்து தன்னுடைய பணியினைச் செய்து வந்தார். இதற்கிடையில் அப்போது இருந்த திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரியார் ரெய்மன்ட்டைக் குறித்து கேள்விப்பட்டு, அவரை அழைத்து திருச்சபை திருச்சட்டங்களை ஒழுங்குபடுத்தி வரிசைப் படுத்தச்சொன்னார். அதுவரைக்கும் திருச்சபை சட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்தன. ரெய்மன்ட்தான் திருச்சபை திருச்சட்டங்களை ஒன்றாகத் தொகுத்து ஐந்து தகுதிகளாக வழங்கினார். இதனால் திருத்தந்தைக்கு ரெய்மன்ட்டை மிகவும் பிடித்துப்போனது. எனவே, அவர் அவரை தெரகொனா என்னும் இடத்திற்கு பேராயராக உயர்த்தினார். ரெய்மன்ட்திற்கு அந்த உயர்ந்த பொறுப்பு பிடிக்கவே இல்லை, இதனால் ஒருசில ஆண்டுகளிலேயே அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டுமாக தொனிக்கன் சபையில் சேர்ந்து தன்னுடைய பணிகளைச் செய்து வந்தார்.

தொமினிக்கன் சபையும் அவரைச் சும்மா விடவில்லை, அவரை சபைத் தலைவராக உயர்த்தி அழகு பார்த்தது. அந்த பதவியும் தனக்கு வேண்டாம் என்று சொல்லி உதறித்தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஒரு சாதாரண தொனிக்கன் சபைக் குருவாகவே வாழ்ந்து வந்தார்.

ரெய்மன்ட் மரியன்னையின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். அந்த பக்தியின் உந்துதலால், உபகார அன்னையை சபையை நிறுவினார். அதில் சேர்ந்த இளைஞர்களுக்கு சிறந்த விதமாய் பயிற்சி கொடுத்து, மரியன்னையின் புகழை எங்கும் பரவிச் செய்தார். இப்படி பல்வேறு விதங்களில் திருச்சபையின் வளர்ச்சிக்கு வித்திட்ட ரெய்மன்ட் தன்னுடைய நூறாவது அகவையில் அதாவது 1275 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1601 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ரெய்மன்ட்டின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. பதவிக்கு ஆசைப்படாதிருத்தல்

ரெய்மன்ட்டை நோக்கி எத்தனையோ உயர் பதவி தேடிவந்தன. பேராயர் பதவியும், தொமிக்கன் சபைத் தலைவர் பதவியும்கூட அவரைத் தேடி வந்தன. ஆனால், அவர் அந்தப் பதவிகள் தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, சிறிது காலத்திலேயே அந்தப் பதவிகளிலிருந்து விலகி ஒரு சாதாரண குருவாக இருந்து, மிகவும் தாழ்ச்சியோடு பணிசெய்து வந்தார்.

ரெய்மன்ட்டிம் இருந்த தாழ்ச்சி, பதவிக்கு ஆசைப்படாத நிலை நம்மிடம் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நற்செய்தியில் வரும் செபதேயுவின் மக்களான யோவானையும் யாக்கோபையும் போன்று அந்தப் பதவி வேண்டும், இந்தப் பதவி வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதிலே நாம் சிக்கி சின்னாபின்னமாகி விடுகின்றோம். ஆண்டவர் இயேசு இறைமகனாக இருந்தபோதும் தொண்டு செய்யவே வந்தேன் என்று உரைக்கின்றார். அவருடைய வழியில் நடக்கும் நாம் எந்தவொரு பதவிக்கும் ஆசைப்படாமல், தாழ்ச்சியோடு பணிசெயவதே சாலச் சிறந்த ஒன்றாகும்.

ஆகவே, தூய ரெய்மன்ட்டின் விழாவாக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சியோடு பணிசெய்வோம், இறைவனுக்கு உகந்த வாழக்கை வாழ்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.