05 சனவரி 2019, சனி

தூய சைமன் ஸ்டைலைட்

தூய சைமன் ஸ்டைலைட் (ஜனவரி 05)

நிகழ்வு

அறுபது அடி தூண் மேல் முழந்தாள் படியிட்டுக்கொண்டு தன்னையே ஒறுத்து, ஜெப தவ வாழ்வில் ஈடுபட்டு வந்த துறவியான சைமனைச் சந்திக்க ஏராளமான பேர் வந்து போனார்கள், நிறைய பேர் அவருடைய ஜெபத்தின் வல்லமையால் குணம்பெற்றுச் சென்றார்கள். இச்செய்தி சிரியா பாலைவனத்தில் தனிமையில் நோன்பிருந்து ஜெபித்து வந்த மற்ற துறவிகளின் காதுகளை எட்டியது. உடனே அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, “இது என்ன புதுவிதமான ஒறுத்தல் முயற்சியாக இருக்கின்றதே, மக்களும் அவரைப் பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாகச் செல்கின்றார்களே... வாருங்கள் நாமும் சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவோம்” என்று முடிவுசெய்துகொண்டு அவரைப் பார்ப்பதற்கு அவர்கள் கிளம்பிப் போனார்கள்.

அவர்கள் போகிற வழியில் அவர்களுக்குளே ஒரு விவாதம் எழுந்தது. “ஒருவேளை நாம் அவரைப் பார்க்கச் செல்லும்போது அவர் மேலேயே இருந்துகொண்டு நம்மிடத்தில் பேசினால் அவரை என்ன செய்வது?” என்பதுதான் அந்த விவாதம். அப்போது ஒரு துறவி, “நாம் அவரிடத்தில் பேசும்போது அவர் ஆணவத் திமிறில் மேலேயே இருந்துகொண்டு நமக்குப் பதில்கூறும் பட்சத்தில், நாம் அனைவரும் மேலே சென்று, அவரை தரதரவென்று கீழே இழுத்துப் போடுவோம், ஒருவேளை நாம் அவரிடத்தில் பேசும்போது, உடனடியாக அவர் கீழே இறங்கி வந்து நம்மிடத்தில் பேசினால், அவர் உண்மையிலே தாழ்ச்சி நிறைந்தவர் என்று விட்டுவிட்டுப் போய்விடலாம்” என்றார். அந்தத் துறவி சொன்னதை எல்லாரும் சரியென ஏற்றுக்கொண்டு தூய சைமன் ஸ்டைலைட் இருந்த இடத்திற்கு விரைந்து சென்றார்கள்.

அவர்கள் அவர் இருந்த இடத்தை அடைந்ததும், “சைமன்” என்று அழைத்தார்கள். அந்நேரத்தில் தூய சைமன் ஸ்டைலைட் அறுபது அடி தூணில் முழந்தாள் படியிட்டு இறைவனிடம் ஜெபித்துக்கொண்டிருந்தார். தன்னை அழைப்பது துறவிகள் என அறிந்த அவர், உடனடியாக அந்த அறுபது அடி தூணிலிருந்து கீழே இறங்கி வந்து, அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போதுதான் அவர்கள் உணர்ந்துகொண்டார்கள் சைமன் ஸ்டைலைட் உண்மையிலே தாழ்ச்சி நிறைந்தவர் என்று. சிறிதுநேரம் அவரோடு பேசிவிட்டு, அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். சைமன் ஸ்டைலைடோ மக்களால் உயர்வாக போற்றப்படக்கூடிய, மதிக்கப்படக்கூடிய துறவியாக இருந்தபோதும், தன் வாழ்நாள் முழுக்க தாழ்ச்சியோடு இருந்தார்.

வாழ்க்கை வரலாறு

சைமன், கி.பி. 388 ஆம் ஆண்டு சிரியாவில் பிறந்தார். சிறு வயதில் ஆடுமேய்க்கும் தொழிலைச் செய்து வந்தார். ஒருநாள் யாரோ ஒருவர் இயேசுவின் மலைபொழிவை அவருக்கு வாசித்துக்காட்டியபோது, அதனால் கவரப்பட்டு, துறவற மடத்தில் சேர்ந்து துறவியாக வாழத் தீர்மானித்தார். அப்போது அவருக்கு பதினாறு வயது. துறவு மடத்தில் சைமன் மிகக் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்துவந்தார். இதனைப் பார்த்த ஏனைய இளந்துறவிகள், ‘இவர் வரம்புக்கு மீறி ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்கின்றார், எனவே இவர் துறவற மடத்தில் இருப்பது நல்லதல்ல” என்றார்கள். அதன்பேரில் இவர் துறவற மடத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். அங்கிருந்து வெளியே வந்தபின் ஷேய்க் ப்ராகட் (Sheik Brakat) என்னும் குன்றில் ஒரு குடிசை அமைத்து, அதிலே ஒன்றரை ஆண்டுகள் தனியாக இருந்து ஜெப தவ வாழ்வில் முன்னேறினார்.

இதற்கிடையில் துறவி ஒருவர் குடிசையில் இருந்துகொண்டு மக்களுக்கு அருள்வாக்கு சொல்லிக்கொண்டு இருக்கின்றார் என்ற கேள்விப்பட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எல்லாம் அவரைத் தேடி வந்தார்கள். அவரும் மக்களுக்கும் மறையுரைகளை ஆற்றினார், அவர்களிடமிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தினார். இதனால் அவருடைய புகழ் மக்களிடத்தில் அதிகமாகப் பரவியது. மக்கள் கூட்டம் அதிகமாக வருவது தன்னுடைய ஜெப தவ வாழ்விற்கு சிறிது இடையூறாய் இருக்கின்றது என்பதை உணர்ந்து அவர் பக்கத்திலிருந்த ஒரு குன்றில் பத்தடிக்கு ஒரு தூண் எழுப்பி, அங்கேயே முழந்தாள் படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். அப்போதும் மக்கள் கூட்டம் அவரைத் தேடி வந்ததால் அறுபது அடி உயரத்திற்கு ஒரு தூண் எழுப்பி, அங்கேயே தூங்காமல் இரவு பகலாக ஜெபத்திலும் தவத்திலும் ஒறுத்தல் முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

சைமன் எவ்வளவுதான் மேலே மேலே சென்றபோதும், அவரை நாடி வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. அவர் அங்கிருந்தே மக்களுக்குப் போதித்து வந்தார், பலருடைய நோய்களைக் குணமாக்கி வந்தார். சைமனைப் பற்றிய செய்தி மன்னர் தியோடோசியஸ் மற்றும் அவருடைய மனைவி யுடோசியாவின் செவிகளை எட்டியது. அவர்களும் அவரை வந்து பார்த்து ஆசி பெற்றுச் சென்றார்கள். சைமன் மக்கள் கொண்டு வந்து கொடுத்த காய்ந்த ரொட்டி மற்றும் பாலைக்கொண்டு தான் தன்னுடைய பசியாற்றிக்கொண்டார். அதுவும் எப்போதாவதுதான் அதனை அவர் உட்கொண்டார்.

இப்படி ஜெப தவ வாழ்விலும் ஒறுத்தல் முயற்சிகளிலும் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்டு கிறிஸ்துவுக்காக தன்னை அர்ப்பணித்த சைமன், உடல் நலம் குன்றி 459 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இறந்த அவருடைய உடலை, அவருடைய சீடர்கள் எடுத்து அடக்கம் செய்தார்கள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சைமன் ஸ்டைலைட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஜெபத்திலும் தவத்திலும் நிலைத்திருத்தல்

சைமன் ஸ்டைலைட்டின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் தன்னுடைய வாழ்வில் எந்தளவுக்கு ஜெபத்திற்கும் தவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துவந்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு சமயம் அவர் கடுமையான நோயிற்றிருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட மன்னர் தியோடோசியசும் அவருடைய மனைவியும் அவரிடம், “இனிமேலும் காட்டில் இருந்து கடுந்தவம் செய்யவேண்டாம், அரண்மனைக்கு வந்துவந்துவிடுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு சைமனோ, “”எனக்கு அரண்மனையோ வேறு எந்த வசதியும் வேண்டும். நான் செய்யக்கூடிய ஜெப தவத்தினால் எனக்கு வந்திருக்கின்ற நோயினை குணப்படுத்திக்கொள்வேன்” என்று சொல்லி அனுப்பி விட்டார். இது நடந்து ஒரு மாத காலம் இருக்கும். சைமன் தான் மேற்கொண்டிருந்த ஜெபத்தினாலும் தவத்தினாலும் தன்னிடமிருந்த நோயினைக் குணமாக்கியிருந்தார். அவர் எந்தளவுக்கு ஜெபத்திலும் தவத்திலும் உறுதியாக இருந்திருந்தார் என்றால், அவரிடமிருந்த நோயினை அவரால் குணமாக்க முடிந்தது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் அவரிடம், “அதை (பேயை) ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை” என்று கேட்டும்போது இயேசு அவர்களிடம், “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது” என்பார். (மத் 17: 19, 21) இதன்மூலம் ஜெபத்திற்கும் நோன்பிருக்கும் எந்தளவுக்கு வல்லமை இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஆகவே, தூய சைமன் ஸ்டைலைட்டின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஜெபத்திலும் தவத்திலும் வேரூன்றி இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Anontyraj, Palayamkottai.