ஜனவரி 05
ஜனவரி 05
1 யோவான் 3: 11-21
அன்பென்பது சொல்லல்ல, செயல்
நிகழ்வு
கணவன், மனைவி, அவர்களுடைய ஒரே ஒரு மகள் என்றிருந்த ஒரு வீட்டிற்கு ஒருநாள் விருந்தினர் ஒருவர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் வீட்டிலிருந்த சிறுமி உற்சாகமானாள்.
அவள் அந்த விருந்தினரிடம் சென்று, “அங்கிள்! என்னிடத்தில் ஏராளமான பொம்மைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டாள். விருந்தினரும், “ம்ம்ம்... கொண்டு வா பார்க்கிறேன்” என்றார். உடனே சிறுமி தன்னுடைய அறையிலிருந்த எல்லாப் பொம்மைகளையும் எடுத்து வந்து, அவருக்குக் காட்டினாள். அதில் அழகழகாக ஏராளமான பொம்மைகள் இருந்தன. கூடவே ஒரு பெரிய பர்பி பொம்மையும் இருந்தது. அது பார்ப்பதற்கு மற்ற எல்லாப் பொம்மைகளை விடவும் மிக அழகாக இருந்தது.
சிறுமி கொண்டுவந்து காட்டிய எல்லாப் பொம்மைகளையும் மிகப் பொறுமையாகப் பார்த்த அந்த விருந்தினர், “பாப்பா! இந்த பொம்மைகளில் எந்தப் பொம்மையை நீ மிகவும் அன்பு செய்கிறாய், எது உனக்கு மிகவும் பிடிக்கும்?” என்று கேட்டார். அவர் இவ்வாறு கேட்கும்போது, சிறுமி எப்படியும் தனக்கு பர்பிப் பொம்மைதான் மிகவும் பிடிக்கும் என்று சொல்லுவாள் என்ற நினைப்போடுதான் கேட்டார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக சிறுமி, “அங்கிள்! இந்த பொம்மைகளிலே எனக்கு மிகவும் பிடித்தது, இதோ அழுக்காக கன்னம் சிதைந்து போய், ஒரு கை இல்லாமல் இருக்கின்றதே, இந்தப் பொம்மைதான்” என்றாள்.
விருந்தினருக்கு சிறுமி பேசியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் தன்னுடைய ஆச்சரியத்தை அடக்க முடியாமல், “பாப்பா! அழுக்காகவும் கன்னம் சேதமடைந்தும், ஒரு கையில்லாமலும் இருக்கின்ற இந்த பொம்மையை உனக்கு ஏன் பிடித்திருக்கின்றது?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுமி மிகவும் பொறுமையாக, “என்னைத் தவிர யாருக்கும் இந்த பொம்மையைப் பிடிக்கவில்லை, அதனாலேயே எனக்கு இந்த பொம்மையை மிகவும் பிடித்திருக்கிறது. அதனாலேயே இந்த பொம்மையை நான் மிகவும் அன்பு செய்கிறேன்” என்றார்.
ஆண்டவர் இயேசுவும் அப்படித்தான். அவர் இந்த உலகின்மீது மிகவும் அன்புகொண்டிருந்தார். அந்த அன்பினை தனக்குள் வைத்துக்கொள்ளாமல் எல்லாருக்கும், அதிலும் குறிப்பாக யாருமே கண்டுகொள்ளாமல் இருந்த ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோரிடத்தில் அதை வெளிப்படுத்தினார். ஆம், உண்மையான அன்பு என்பது வெறும் சொல்லோ, பேச்சோ அல்ல, அது செயல்.
செயலில் வெளிப்படாத அன்பு, தன்னிலே உயிரற்றது
இன்றைய முதல் வாசகத்தில் யோவான், “பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்” என்று கூறுகின்றார். யோவான் இவ்வாறு கூறுவதற்குக் காரணமில்லாமல் இல்லை. ஏனென்றால், யோவான் வாழ்ந்து வந்த காலத்தில், அவருடைய சபையில் வசதி படைத்தோர் வறியவர்களைக் கண்டும் காணாமல் வாழ்ந்துவந்த ஒரு போக்குதான் நிலவிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு, தியானித்து வந்தவர்கள். அப்படி இருந்தபோதும் அவர்கள் தங்களுடைய அன்பை சொல்லளவிலும் பேச்சிலும் மட்டும் வெளிப்படுத்தினார்களே ஒழிய, செயலில் வெளிப்படுத்தவில்லை.
பசியாய் இருக்கின்ற ஒருவரைப் பார்த்து, உணவேதும் கொடுக்காமல், “பசியாறிக் கொள்ளுங்கள்” என்று சொல்வது எவ்வளவு போலித்தனமோ, குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கின்ற ஒருவரிடம், போர்த்திக்கொள்ள எதுவும் கொடுக்காமல், “குளிர்காய்ந்து காய்ந்துகொள்ளுங்கள்” என்று சொல்வது எவ்வளவு போலித்தனமோ, அதைப் போன்றதுதான் நம்மிடத்தில் வசதி வாய்ப்பு இருந்தபோதும், வறியநிலையில் இருக்கின்ற ஒருவருக்கு எதுவும் செய்யாமல், பேச்சுக்காக அவர்களை அன்பு செய்கிறேன் என்று சொல்வது. இது தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் சொல்வதுபோன்று, “செயலற்ற நம்பிக்கை/ அன்பு தன்னிலே உயிரற்றது”. நாம் உயிருள்ள அன்பினைக் கொண்டிருக்கின்றோமா? அல்லது உயிரற்ற அதாவது செயலில் வெளிப்படாத அன்பினைக் கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
சிந்தனை
கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஏராளமான செல்வத்தை, வசதி வாய்ப்பினைக் கொடுத்திருக்கின்றார். இதைக் கொண்டு நாம் நம்மோடு வாழக்கூடிய, அதுவும் வறிய நிலையில் இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும். அப்போதுதான் நம்முடைய அன்பு உண்மையான அன்பாக, செயலில் வெளிப்படுகின்ற அன்பாக இருக்கும். இல்லையென்றால் போலியான, வெறுமனே பேச்சளவில் நின்றுவிடுகின்ற ஒரு அன்பாக இருந்துவிடும்.
ஆகவே, நம்முடைய அன்பிற்கு செயல் வடிவம் கொடுப்போம், நம்மோடு இருப்பவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.