05 சனவரி 2019, சனி

சனிக்கிழமை

கிறிஸ்து பிறப்புக் காலம்

சனிக்கிழமை

யோவான் 1: 43-51

 

“இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்”

 

நிகழ்வு

 

         அது ஒரு மழைக்காலம். இரவுநேரம் வேறு. அந்நேரத்தில் ஊருக்கு வெளியே, தனியாக இருந்த ஒரு குடிசை வீட்டின் கதவு தட்டப்பட்டது. அந்தக் குடிசை வீட்டில் கணவன், மனைவி என இருவர் இருந்தனர். அதற்கு மேலும் அந்த வீட்டில் யாரும் இருக்கமுடியாது. அந்தளவுக்கு அந்தக் குடிசை வீடு மிகவும் சிறியதாக இருந்தது.

 

“இந்த இராத்திரி நேரத்தில் யார் நம்முடைய வீட்டின் கதவைத் தட்டுவது?, திருடன் கிருடன் எவனாவது வந்து கதவைத் தட்டிக்கொண்டிருக்கின்றானா?” என்று மனைவி பதைபதைத்தாள். “அப்படியெல்லாம் இருக்காது... யாராவது இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டிருப்பார்கள். அதனால்தான் இந்நேரத்தில் நம்முடைய கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றார்கள்... யாராக இருக்கும் என்று கதவைத் திறந்து பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு கணவன் கதவைத் திறந்து பார்த்தான். அங்கே பெரியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

 

“வியாபார விசயமாக பக்கத்துக்கு ஊர்வரை சென்றிருந்தேன். வேலை முடித்துவிட்டு, திரும்பி வருவதற்குள் இருட்டிவிட்டது. இனிமேலும் வீட்டுக்குப் போவதற்கு வழியில்லை. காட்டுப்பகுதி வேறு. அதனால் இந்த இரவுமட்டும் உங்களுடைய வீட்டில் தங்கிக்கொண்டு, அதிகாலையில் கிளம்பிப் போய்விடுகிறேன்” என்றார் அந்தப் பெரியவர். ஒருகணம் யோசித்த கணவர், “ஐயா! எங்களுடைய வீட்டில் இரண்டுபேர் மட்டுதான் கால்நீட்டிப் படுத்துறங்க முடியும். மூன்றாவது நபர் படுத்துக்கொள்கிற அளவுக்கு வீட்டில் இடமில்லை... நீங்கள் விரும்பினால் நாம் மூவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டே இந்த இரவைக் கழிக்கலாம்” என்றார். அந்தப் பெரியவரும் அதற்குச் சரியென்று சொல்ல, மூவரும் அந்தக் குடிசை வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டே நேரத்தைக் கழிக்கத் தொடங்கினார்.

 

சிறிதுநேரத்திற்குப் பிறகு கதவு மீண்டுமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது. யாரென்று கணவர் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கே நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர் தொப்பலாக நனைந்துகொண்டு வெளியே நின்றுகொண்டிருந்தார். “தெரிந்தவர் ஒருவருடைய வீட்டுக்குத் திருமணத்திற்குப் போய்விட்டு திரும்புவதற்குள் கடுமையாக மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இப்போதைக்குப் மழை ஓய்வதாகவும் இல்லை. அதனால் இந்த இரவு மட்டும் நான் ஒதுங்குவதற்கு உங்கள் வீட்டில் இடம் தாருங்கள்” என்றார் அவர். கணவர் அவரிடம், “வீடு மிகவும் சிறியது. வீட்டில் இருக்கும் நாங்களே உட்கார்ந்துகொண்டுதான் நேரத்தைக் கழித்துக்கொண்டிருக்கின்றோம். இப்போது நீங்கள் வரும் பட்சத்தில் எண்ணிக்கை நான்காகிவிடும். நான்குபேர் உட்கார முடியாது. நிற்கத்தான் முடியும். இருந்தாலும் நீங்கள் நிற்பதற்குச் சம்மத்தித்தால் வீட்டிற்குள் வரலாம்” என்றார். அவரும் சரியென்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்தார்.

 

இப்போது எண்ணிக்கை நான்கானது. நான்குபேரும் நின்று பேசிக்கொண்டே நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது மீண்டுமாக கதவு தட்டப்பட்டும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டுப் போன மனைவி, ‘ஏற்கனவே நான்கு பேர், இன்னும் ஓர் ஆளைச் சேர்த்துக்கொள்ளப் போகிறீர்களா?’ என்பதுபோல் கணவரைப் பார்த்தாள். கணவர் அதை எல்லாம் சட்டை செய்யாமல், கதவைத் திறந்து வெளியே பார்த்தார். அங்கே கழுதை ஒன்று குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த கணவர், வேறெதுவும் யோசிக்காமல், அந்தக் கழுதையைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்தார். ஏற்கனவே வீட்டில் நான்குபேர் இருக்க, இப்போது கழுதையும் வந்து சேர்ந்ததால் மிகவும் நெருக்கடியானது. எல்லாரும் ஒருவரை ஒருவர் நெருக்கிக்கொண்டுதான் இரவைப் போக்கினார்கள்.

 

ஒருவழியாக இரவு முடிந்து பொழுது புலர்ந்தது. மழைகூட ஓய்ந்திருந்தது. வீட்டுக்குள் ஒதுங்கியிருந்த பெரியவரும் நடுத்தர வயது மதிக்கத்தக்க மனிதரும் வீட்டாருக்கு நன்றிகூறி அவர்களிடமிருந்து விடைபெற்றனர். அப்படி அவர்கள் விடைபெறும்போது, பெரியவர் கணவரைப் பார்த்து, “இரவில் எங்களுக்கு மட்டுமல்ல, குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு கழுதைக்கும்கூட உங்களுடைய வீட்டில் தங்க இடம்கொடுத்தீர்களே, உங்களைப் போன்று கள்ளம் கபறற்ற ஒரு வெள்ளந்தி மனிதனை இதுவரைக்கும் என்வாழ்வில் பார்த்ததே இல்லை, நீங்கள் நல்லா இருக்கணும்” என்று வாழ்த்திவிட்டுப் போனார்.

 

கபடற்ற நத்தனியேல்

 

இயேசுவின் சீடராக மாறி, அவரிடமிருந்து அனுபவம் பெற்ற பிலிப்பு, நத்தனியேலைச் சந்தித்து, அவரிடம் இயேசுவைப் பற்றிச் சொல்லி, அவரை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வருகின்றார். நத்தனியேல் தன்னிடம் வருவதைக் கண்ட இயேசு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்கின்றார். தம்மைக் குறித்து இயேசு இப்படிச் சொல்வதைக் கேட்டு வியப்படைகின்ற நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கின்றார். இயேசுவோ அவரிடம், “நீர் அத்திமரத்தின்கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்கின்றார்.

 

‘அத்திமரத்தின் கீழ் கண்டேன்’ என்று இயேசு சொன்னதற்கு ஓர் அர்த்தம் இருக்கின்றது. அது என்னவென்றால், ஆண்டவருடைய வார்த்தையை தியானிப்பதாகும். நத்தனியேல் இறைவார்த்தையை தியானித்து வந்தார். அந்த வார்த்தையின்படியே தன்னுடைய வாழ்வை மாற்றிக்கொண்டார். அதனால் இயேசு அவரை உண்மையான இஸ்ரயேலர், கபறற்றவர்” என்கின்றார். திருப்பாடல் 1 ஆம் அதிகாரம் நற்பெயர் பெற்றவர் யார் என்பதற்கான விளக்கத்தைத் தரும். அவ்வாறு தரப்படுகின்ற விளக்கத்தில் வருகின்ற ஒரு சொற்றொடர்தான், நற்பெயர் பெற்றவர் யார், “அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்” என்பதாகும். நத்தனியேலும் மேற்சொன்ன வழிகளில் நடந்திருப்பார். அதனால்தான் அவரை இயேசு உண்மையான இஸ்ரயேலர், கபற்றவர்” என்கின்றார்.

 

சிந்தனை

 

         நமது வழிபாட்டுக் கொண்டாட்டங்கள், நம்முடைய விவிலிய வாசிப்பு அனைத்தும் நம்மை நத்தனியேலைப் போன்று உண்மையுள்ளவர்களாக, கபற்றவர்களாக, எளியவர் மட்டில் இரங்குபவர்களாக  மாற்றவேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அவை எல்லாம் வீண்.

 

ஆகவே, நாம் இறைவார்த்தையை வாசித்து, உண்மையுள்ளவர்களாக, கபற்றவர்களாக, இரக்கமுள்ளவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.