04 ஜூலை 2022, திங்கள்

“உனது நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று”

பொதுக் காலத்தின் பதினான்காம் வாரம் திங்கட்கிழமை


I ஓசேயா 2: 14-16, 19-20
II மத்தேயு 9: 18-26

“உனது நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று”

நம்பியது நிறைவேறியது:


தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு மூதாட்டி, சாலையோரத்தில் வாழ்ந்து வந்தாள். அவளுக்குக் கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அதனால் அவள், “என்னுடைய பிள்ளைகள் என்னைக் கைவிட்டால் என்ன? கடவுள் நான் இருப்பதற்கு ஓர் இல்லத்தையும், என்மீது அன்பு காட்டுவதற்கு நல்ல மனிதர்களையும் தருவார்” என்று சொல்லிக்கொண்டு நம்பிக்கையோடு இருந்தாள்.

ஒருநாள் மாலை வேளையில் அவள் இருந்த சாலைவழியாக ஒருவர் நடைப் பயிற்சியை கொண்டிருந்திருந்தார். அவருக்கு வயது முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். அவர் மூதாட்டியை பார்த்ததும் அவருடைய மூளையில் சட்டென ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. அதனால் அவர் மூதாட்டியிடம் வந்து, “அம்மா! எங்களுடைய வீட்டிற்கு வேலைக்கு வருகிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, மூதாட்டியின் பதிலுக்குக் கூடக் காத்திராமல், “என்னுடைய மனைவியும் நானும் வேலைக்குப் போகவேண்டி இருப்பதால், குழந்தையைக் கவனிக்க ஆளே இல்லை. நீங்கள் என்னுடைய வீட்டில் தங்கிக்கொண்டு, குழந்தையைக் கவனித்துக் கொள்ள முடியுமா? அப்படிச் செய்தால் உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.

இதற்காகத்தானே அந்த மூதாட்டி இத்தனை நாள்களும் காத்துக்கொண்டிருந்தாள்! அதனால் அவள் அந்த மனிதர் சொன்ன வார்த்தைக்கு மறுவார்த்தை பேசமால் சம்மதம் தெரிவித்தாள். நாள்கள் வேகமாக நகர்கையில், அவள் குழந்தையை நல்லமுறையில் கவனித்துக் கொண்டதால், வீட்டில் இருந்தவர்கள் அவளைத் தாய் போலப் பாவித்து, அவள்மீது அன்பு காட்டினார்கள்.

ஆம், பிள்ளைகளால் கைவிடப்பட்ட இந்த மூதாட்டி, தங்குவதற்கு ஓர் இல்லமும் அன்பு செய்வதற்கு மனிதர்களும் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தாள். அவள் நம்பியது போன்றே எல்லாம் கிடைத்தது. இன்றைய இறைவார்த்தை நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

ஒருவர் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழும்போது அவர் ஆண்டவரிடமிருந்து மிகப்பெரிய ஆசியைப் பெறுவார். இதற்கு பெரிய சான்றாக இருப்பவர்கள்தான் இன்றைய நற்செய்தியில் வரும் தொழுகைக்கூடத் தலைவரும், பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தத்தைப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணியும்.

தொழுகைக்கூடத் தலைவரின் மகள் ஏற்கெனவே இறந்துபோயிருந்தாள். அப்படியிருந்தும் அவர் இயேசுவிடம் நம்பிக்கையோடு வருகின்றார். “என் மகள் இப்பொழுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள்மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்கிறார். அவர் நம்பியதோடு போன்ற இறந்துபோயிருந்த அவரது மகள் இயேசுவால் உயிரோடு திரும்பி வருகிறார்.

அடுத்ததாக வரும் பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்டிருந்த பெண், தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்த நிலையில், இயேசுவிடம் நம்பிக்கையோடு வந்து, அவரது ஆடையைத் தொட்டு நலம்பெறுகின்றார். இவ்வாறு இரண்டு பேரும் நம்பிக்கையினால் இயேசுவிடமிருந்து நன்மைகளைப் பெறுகின்றார்கள்

இயேசு – கடவுள் - தன்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு நலமளிக்கக் காரணம், அவர் பேரன்புமிக்கவராய் இருப்பதால்தான். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவர், “மாறாக அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்துள்ளேன்” என்கிறார். இது இஸ்ரயேல் மக்கள் தவறு செய்தாலும், அவர்களது தவறுகளை எல்லாம் மன்னித்து, அவர்களை ஏற்றுக்கொள்ளும் கடவுளின் பேரன்பைக் காட்டுகின்றது. எனவே, நம்மீது பேரன்பு காட்டும், நமக்கு நலமளிக்கும் ஆண்டவரிடம் நம்பிக்கையோடு இருப்போம்.

சிந்தனைக்கு:

 நம்பிக்கை இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கின்றது.

 நம்பிக்கையோடு உள்ளவர்களால் மட்டுமே எதையும் செய்து காட்ட முடிகின்றது.

 பேரன்பு மிக்க ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்து வாழ்வதுதான் எத்துணை சிறப்பான செயல்.

ஆன்றோர் வாக்கு:

‘உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்’ என்பார் தாமஸ் கார்லஸ். எனவே, தொடக்கத்தில் வரும் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், இறுதி வரை நம்பிக்கையோடு இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.