04 ஜூலை 2022, திங்கள்

“ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்”

பொதுக் காலத்தின் பதினான்காம் வாரம் திங்கட்கிழமை


திருப்பாடல் 145: 2-3, 4-5, 6-7, 8-9 (8a)

“ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்”

ஆண்டவரின் இரக்கத்தை உணர்ந்த விவசாயி:


தனது தோட்டத்தில் வேலையை முடித்துக்கொண்டு, மாலை வேளையில் மிதி வண்டியில் நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார் ஒரு விவசாயி.

அன்றைய நாளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவர் மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருக்கும்போது திடீரென மழை கொட்டோ கொட்டென கொட்டத் தொடங்கியது. அந்த நேரம் பார்த்து, அவருடைய மிதிவண்டி பஞ்சரானது. இதனால் அவர் மிதிவண்டியிலிருந்து கீழே இறங்கி, வண்டியைச் சாலையின் ஓரமாக உருட்டிக்கொண்டே வந்தார்.

அப்போது அவருக்குப் பக்கத்தில் ஒரு மகிழுந்து வந்து நின்றது. அதிலிருந்தவர் விவசாயிடம், “உங்களுக்கு என்ன ஆயிற்று? இப்படிக் கொட்டும் மழையில் வண்டியை உருட்டிக் கொண்டுவருகிறீர்களே!” என்று கேட்டதற்கு விவசாயி நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னார். உடனே மகிழுந்தில் இருந்தவர், “முதலில் நீங்கள் வண்டிக்குள் ஏறுங்கள். உங்களுடைய வண்டியை என்னுடைய வண்டியின் மேலே ஏற்றி வைத்துக்கொண்டு, உங்களை நான் உங்கள் வீட்டில் இறக்கிவிட்டுப் போகிறேன்” என்றார்.

விவசாயிக்கு என்ன சொல்வதே தெரியவில்லை. இக்கட்டான நேரத்தில் கடவுள் போல் வந்து உதவிய அந்த மனிதருக்கு நன்றி கூறிக்கொண்டு, விவசாயி வண்டியில் ஏறிக்கொண்டு, இரண்டு கிலோமீட்டர் தொலையில் இருந்த தன் வீட்டை அடைந்தார்.

ஆம், இக்கட்டான சூழ்நிலையில் இருந்த விவசாயிக்கு மகிழுந்தில் வந்தவர் இரக்கமும் கனிவும் உள்ள இறைவனைப் போன்று உதவினார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, “ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

நூற்று ஐம்பது திருப்பாடல்களில் தாவீது மன்னர் பாடிய திருப்பாடல்கள் மொத்தம் எழுபத்து மூன்று. இதில் கடைசியாக இடம்பெறும் திருப்பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 145.

இத்திருப்பாடலின் தொடக்கத்தில், “என் கடவுளே, என் அரசரே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்” என்று பாடும் தாவீது, எதற்காக ஆண்டவரைப் போற்றுவேன், அல்லது எதற்காக நாம் ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தைப் பட்டியலிடுகின்றார். ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். அவரது இரக்கத்தையும் கனிவையும் நாம் நம்முடைய வாழ்வில் ஒவ்வொருநாளும் உணரலாம். இதற்காக நாம் தாவீது மன்னரைப் போன்று ஆண்டவரைப் புகழ்ந்தேத்துவோம்.

சிந்தனைக்கு:

 ஆண்டவர் எத்துணை இரக்கமும் கனிவும் உள்ளவர் என்பதை நாம் சுவைத்துப் பார்த்து, அவரை மற்றவருக்கும் எடுத்துக்கூறுவது நமது கடமை.

 கடவுளைப் போற்றிப் புகழும்போது அவரது மேலான ஆசி நம்மீது தங்குகின்றது.

 நாம் கடவுளின் அன்பை மற்றவருக்கு அறிவிக்கும் கருவியாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

இறைவாக்கு:

‘உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்’ (மாற் 5:19) என்று பேய் பிடித்திருந்த மனிதரைப் பார்த்துச் சொல்வார் இயேசு. எனவே, நாமும் அந்த மனிதரைப் போன்று ஆண்டவர் நம்மீது எத்துணை இரக்கம் காட்டியுள்ளார் என்பதை மற்றவருக்கு அறிவித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.