17 மே 2022, செவ்வாய்

இயேசு தரும் அமைதி

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை


I திருத்தூதர் பணிகள் 14: 19-28
II யோவான் 14: 27-31b

இயேசு தரும் அமைதி

துன்பங்களுக்கு நடுவிலும் மகிழ்ச்சி:


கி.பி.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த - சாகும் தருவாயில் ஒருவர் - தன் நண்பருக்கு இப்படியொரு கடிதம் எழுதினார்:

“இந்த உலகம் மிகவும் மோசமானது. துன்பம் நிறைந்தது. இந்தத் துன்பங்களுக்கு நடுவிலும் ஒருசிலர் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கக் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் வேறு யாருமல்லர் கிறிஸ்தவர்களே! அவர்களில் ஒருவன் நான்.”

கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்க காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்கள் சந்தித்த துன்பங்கள் ஏராளம். ஆனாலும் அவர்கள் இந்த உலகம் தரமுடியாத இயேசு ஒருவரால் மட்டுமே தர முடிந்த அமைதியைப் பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியாக இருந்தது மிகவும் வியப்பாக இருக்கின்றது.

இன்றைய நற்செய்தியில் இயேசு, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு துன்பமே இராது என்று சொல்லிவிட முடியாது. துன்பங்கள் நிச்சயம் உண்டு. இன்றைய முதல் வாசகத்தில் பவுல் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததற்காகக் கல்லால் எறியப்படுகின்றார். இன்னும் பலவிதமான துன்பங்களையும் அவர் அனுபவிக்கின்றார் (2 கொரி 11: 23-28). இதற்காக அவர் தான் ஆற்றிய பணியை நிறுத்துக்கொள்ளவில்லை; மாறாக அவர் தொடர்ந்து கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்கின்றார். “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்” என்று அவர் மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துகின்றார்.

நற்செய்தியில் இயேசு தம் சீடரிடம், “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” என்கிறார். இன்றைய காலக்கட்டத்தில் நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சு வார்த்தை நடக்கின்றது; ஆனால், அது எந்தளவுக்கு உண்மையாய், நிலைத்திருக்கின்றது என்று தெரியவில்லை. இயேசு தரும் அமைதி துன்பங்களுக்கு நடுவிலும் நம்மை மனவுறுதியோடு இருக்கச் செய்வது. அதனால்தான் இயேசு உயிர்த்தபின் தன் சீடர்களைப் பார்த்து, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” (யோவா 20: 19-26) என்று வாழ்த்துகின்றார்.

எனவே, நமது வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், இயேசு தரும் அமைதியைக் கொண்டு, அவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 விடியாத ஓர் இரவும் இல்லை; முடியாத ஒரு போராட்டமும் இல்லை.

 இயேசு தரும் அமைதி எல்லா நலன்களையும் உள்ளடக்கியது. நிச்சயம் அது நமது போராட்டங்களில் நமக்கு ஆற்றலைத் தரும்.

 இயேசு தரும் அமைதி இவ்வுலகில் நிலைத்திருக்க மன்றாடுவோம்.

இறைவாக்கு:

‘இயேசுவே நமக்கு அமைதி அருள்பவர்’ (எபே 2:14) என்பார் புனித பவுல். எனவே, நமக்குக் உண்மையான அமைதியைத் தரும் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்