17 மே 2022, செவ்வாய்

“உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு”

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை


திருப்பாடல் 145: 10-11, 12-13, 21 (1a)

“உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு”

இயேசுவைத் தவிர வேறு அரசர் இல்லை:


ஒரு காலத்தில் தன்னை எல்லா அதிகாரம் கொண்டவர்; மற்ற நாட்டிலுள்ளவர்கள் தனக்குப் பணிந்து நடக்க வேண்டும் என நினைத்தவர் இங்கிலாந்தை ஆண்ட மூன்றாம் ஜார்ஜ் என்ற மன்னர். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் குடிபுகுந்த காலனியாதிக்க நாடுகள் (Colonisalist) யாவும் தனக்குப் பணிந்து நடக்கவேண்டும் என்ற கட்டளை பிறப்பித்தபோது, அங்கிருந்தவர்கள், “இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு அரசர் எங்களுக்கு இல்லை” என்று சொல்லி, இவரது கட்டளையைப் புறக்கணித்தார்கள்.

முன்னதாக, இங்கிலாந்தின் கொட்டத்தை அடக்குவதற்கு அமெரிக்கப் படைகளுக்குத் தலைமை தாங்கிய அமெரிக்க இராணுவத் தளபதியான ஜார்ஜ் வாஷிங்டனிடம் காலனியாதிக்க நாடுகளின் தலைவர்கள், “நீர் எங்களுக்கு அரசராக இருந்து ஆட்சி புரியும்” என்று கேட்டபோதும், “இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு அரசர் இல்லை” என்று மறுத்துவிட்டார். இதனால் இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட போரில் முதன்மையான முழக்கமாக இருந்தது, “இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு அரசர் இல்லை” என்பதுதான்.

ஆம், “இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு அரசர் இல்லை” என்ற முழக்கம் எவ்வளவு உண்மையானது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது அரசர், “உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

150 திருப்பாடல்களில் தாவீது பாடிய திருப்பாடல்கள் மொத்தம் 73. இந்த 73 திருப்பாடல்களில் கடைசியாக இடம்பெறும் திருப்பாடல்தான் 145 வது திருப்பாடல்.

ஆண்டவராகிய கடவுள் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் அரசர் கிடையாது, அல்லது இந்த மண்ணுலகிற்கு மட்டும் அரசர் கிடையாது. அவர் அனைத்துலகிற்கும் அரசர். அதைவிடவும் அவரது அரசு எல்லாக் காலங்களிலுமுல்ல அரசு. இந்த உண்மையை உணர்ந்தவராய்த் தாவீது, “ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம் அன்பர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்” என்கிறார்.

கடவுளைப் போன்று வேறு அரசர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில், அவரது அரசு அன்பின் அரசு; முடிவில்லாத அரசு. இத்தகைய அரசரை நாம் போற்றிப் புகழ்ந்து, அவரது அன்பு மக்களாய் வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனைக்கு:

 கடவுளின் அரசு அன்பில் கட்டப்பட்டது, அந்த அரசில் நாம் பங்குபெற ஒருவர் மற்றவரை அன்பு செய்வோம்.

 இறையாட்சி இம்மண்ணில் மலர அதற்காக வேண்டுவோம், உழைப்போம் .

 இறையாட்சியில் பங்குபெறுவோருக்கு எந்தவொரு குறையும் இராது.

இறைவாக்கு:

‘அவரது ஆட்சியுரிமை என்றுமுள்ளதாகும்; அதற்கு முடிவே இராது” (தானி 7:14) என்கிறது இறைவார்த்தை. எனவே, என்றுமுள்ள அரசராம் ஆண்டவரின் ஆட்சியுரிமையில் நாம் பங்கு பெற, அவரது வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்