22 சனவரி 2022, சனி

“இஸ்ரயேலின் ஆயரே”

பொதுக்காலத்தின் இரண்டாம் வாரம் சனிக்கிழமை


திருப்பாடல் 80: 1-2, 4-6 (3b)

“இஸ்ரயேலின் ஆயரே”

ஆயன் இறந்தான், ஆடு காப்பாற்றப்பட்டது:


ஆயன் ஒருவன் தன்னுடைய ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டுத் திரும்பி வந்தபின் அவற்றைப் பட்டியில் அடைத்துவிட்டு, அருகில் இருந்த தனது குடிசையில் தூங்கப் போனான்.

நள்ளிரவு வேளையில் ஆட்டுப் பட்டியிலிருந்து பயங்கர சத்தம் கேட்டு, நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த ஆயன் விழித்தெழுந்து, ஆட்டுப் பட்டியை நோக்கி வேகமாக ஓடிவந்தான். அங்கு ஓர் ஓநாய் ஆட்டுப் பட்டியலிருந்த ஓர் ஆட்டைக் கடித்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும், அவன் கையில் இருந்த கோலால் அதைத் தாக்கினான். பதிலுக்கு அது திருப்பித் தாக்கியது. இதனால் ஆயன் தன் முழு ஆற்றலையும் பயன்படுத்தி ஓநாயை அடித்து, கொன்று போட்டான்.

பின்னர் அவன் ஓநாயால் கடிபட்டு, காயப்பட்டிருந்த ஆட்டிற்குக் கட்டுப்போட்டு, அது மேலும் பதற்றமடைந்து விடக்கூடாது என்பதற்காக அதைக் கட்டியணைத்துக் கொண்டு படுத்தான்.

மறுநாள் காலையில் அவனைக் காண ஆட்டுப் பட்டிக்கு வந்த ஆயனுக்குத் தெரிந்த ஒருவர், ஆயன் இறந்து கிடக்க, அவன் கட்டியணைத்துத் தூங்கிய ஆடு உயிரோடு இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற ஆயன் ஆட்டைக் காக்கின்ற போராட்டத்தில் தன் உயிரையே தந்தான். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப் பாடலில் ஆசாபு, “இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்” என்கிறார். இவ்வார்த்தைகள் நமக்கு உணர்த்துஅது என்ன என்பது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

பாடகர் குழுத் தலைவர் ஆசாபால் பாடப்பட்டதுதான் திருப்பாடல் 80. அசீசிரியர்கள் படையெடுப்பினால் வடநாடான இஸ்ரயேல் நாட்டில் இருந்தவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் இழிநிலையை அடைந்தது மட்டுமல்லாமல், வேற்று நாட்டவரால் அவமானத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில், இஸ்ரயேலின் ஆயரான ஆண்டவர் தங்கள்மீது இரக்கம் கொண்டு, தங்களை நல்ல நிலைக்குக் கொண்டு வருவது ஆசாபோ, அவரது வழிவந்தவரோ பாடிய பாடல்தான் திருப்பாடல் 80.

இத்திருப்பாடலில் இடம்பெறும் ‘ஒளிர்ந்தளரும்’, ‘உமது முக ஒளியைக் காட்டியருளும்’ போன்ற வார்த்தைகள் இஸ்ரயேலை ஆயரென ஆட்சி செய்த ஆண்டவராகிய கடவுள் தங்கள்மீது இரக்கம் கட்டவேண்டும் என்று இஸ்ரயேல் மக்கள் பாடுவதாக இருக்கின்றது.

நல்லயாரான ஆண்டவரின் வழியில் இஸ்ரயேல் மக்கள் நடந்திருக்கவேண்டும். அவர்கள் அவ்வாறு நடக்காதால் அவர்கள் பலவிதமான துன்பங்களை அனுபவித்தார்கள். நமக்கு நல்லாயனிடமிருந்து பாதுகாப்பும் எல்லாவிதமான ஆசியும் கிடைக்க அவர் வழி நடப்போம்.

சிந்தனைக்கு:

 ஆயன் குரல் கேட்டு நடப்பதே ஆடுகளுக்கு அழகு

 ஆண்டவர் நல்லாயனாய் இருக்கையில், அவரிடம் நம்மை முற்றிலுமாக ஒப்படைந்து, அவர் வழி நடப்பதே சிறந்தது.

 கீழ்ப்படியாமையே பலவிதமான தீமைகளுக்கு ஆணிவேர்

இறைவாக்கு:

‘இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்” (திபா 95:7) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நல்லாயனாம் ஆண்டவரின் குரல் கேட்டு, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.