22 சனவரி 2022, சனி

புனித வின்சென்ட் - திருத்தொண்டர், மறைச்சாட்சி

வி.நினைவு

முதல் வாசகம்

இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-15

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் மாட்சியாகிய செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை; அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது. நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.

இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறோம். சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது.

“நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும்.

இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)

பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.

1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3
என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் இழுத்துச் செல்லப்பட்டு, எனக்கு பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-22

அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக் கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.

இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.

ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும், தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.