15 சனவரி 2022, சனி

“அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை”

பொதுக்காலத்தின் முதல் வாரம் சனிக்கிழமை


திருப்பாடல் 21: 1-2, 3-4, 5-6 (1a)

“அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை”

மூதாட்டியின் வேண்டுதலைக் கேட்ட ஆண்டவர்:


ஒருமுறை ஒரு பெரிய கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பலில் ஓர் அருள்பணியாளர் இருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட கப்பல் தளபதி அவரை முதல் வகுப்பில் இருந்த பயணிகளுக்குப் போதிக்கச் சொன்னார். அவரும் கப்பல் தளபதி தன்னிடம் கேட்டுக்கொண்டதற்கேற்ப ‘கடவுள் தம்மை நோக்கி மன்றாடுபவர்களின் மன்றாட்டிற்குச் செவி சாய்க்கிறார்” என்ற தலைப்பில் போதித்தார்.

அவரது போதனையைக் கேட்டு எல்லாரும் வியந்துபோக, அந்தக் கூட்டத்தில் இருந்த நாத்திகர் ஒருவர், ‘கடவுளே இல்லை என்கிறபோது, அவர் எப்படி மனிதர்கள் எழுப்பும் மன்றாட்டைக் கேட்பார்?’ என்று சக பயணிகளிடம் சொல்லிக் கேலி செய்தார். மாலை வேளையில், அருள்பணியாளர் இரண்டாம் வகுப்பில் உள்ளவர்களுக்குப் போதிக்கப் போகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட நாத்திகர் அவரைக் கேலி செய்ய முடிவுசெய்தார். அதன் நிமித்தம் அவர் தன்னுடைய கையில் இரண்டு ஆரஞ்சுப் பழங்களை எடுத்துக்கொண்டு போனார்.

அருள்பணியாளரின் போதனை தொடங்கியது. கையில் இரண்டு ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு சென்றிந்த நாத்திகர் ஒரு மூதாட்டி இரண்டு கைகளையும் விரித்தவாறு தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். உடனே அவர் தன்னிடம் இருந்த இரண்டு ஆரஞ்சுப் பழங்களையும் அந்த மூதாட்டியின் கையில் திணித்து, அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்த்தார்.

தன்னுடைய கையில் ஏதோவொன்று வைக்கப்படுவதை உணர்ந்த மூதாட்டி, கண்களைத் திறந்து பார்த்தார். தனது கையில் இரண்டு ஆரஞ்சுப் பழங்கள் இருப்பதைக் கண்டு வியந்து, “ஆண்டவருக்கு நன்றி! ஆண்டவருக்கு நன்றி! என்று சத்தமாகக் கத்தினார். இதைப் பார்த்துவிட்டு நாத்திகர் அவரிடம், “ஆண்டவருக்கு நன்றியா? பழங்களை உங்கள் கையில் வைத்தவன் நான். அப்படியிருக்கையில் நீங்கள் ஆண்டவருக்கு நன்றி சொல்கிறீர்களே!” என்றார். அதற்கு மூதாட்டி அவரிடம், “சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாமல் இருந்தேன். அதனால் நான் கடவுளிடம் ஓர் ஆரஞ்சுப் பழமாவது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மன்றாடினேன். அவரோ உங்கள் வழியாக எனக்கு இரண்டு ஆரஞ்சுப் பழங்களைத் தந்திருக்கின்றார். அதனால்தான் நான் என்னுடைய மன்றாட்டைக் கேட்ட ஆண்டவருக்கு நன்றி சொன்னேன்” என்றார்.

ஆம், கடவுள் இந்த மூதாட்டியின் மன்றாட்டைக் கேட்டது போன்று நம்முடைய மன்றாட்டைக் கேட்கின்றார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, “அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை” என்று பாடுகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

திருப்பாடல் இருபதுக்கும், இன்று நாம் பதிலுரைப் பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் இருபத்து ஒன்றுக்கும் நிறையவே தொடர்பிருக்கின்றது. எதிரிகளோடு போரிடுவதற்கு முன்பு தாவீது பாடிய பாடல்தான் திருப்பாடல் 20. இதில் அவர், ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார்” (திபா 20:6). அவர் பாடியது போன்று, ஆண்டவர் அவருக்கு வெற்றி அளிக்கின்றார். இன்னும் ஏராளமான ஆசிகளை வழங்குகின்றார். அதன் நிமித்தம் திருப்பாடல் 21 இல் தாவீது ஆண்டவருக்கு நன்றி சொல்கிறார்.

இதன்மூலம் நமக்கு இரண்டு செய்திகள் சொல்லப்படுகின்றன. ஒன்று, ஆண்டவர் தம் அடியார்களின் மன்றாட்டைக் கேட்கிறார். இரண்டு, ஆண்டவர் நமது மன்றாட்டுகளைக் கேட்க வேண்டுமெனில், நாம் அவர்மீது நம்பிக்கை வைத்து, வாழ வேண்டும். தாவீது ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தார். அதனால் ஆண்டவர் அவருக்கு வெற்றியளித்தார். நாமும் தாவீதைப் போன்று ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 தம்மீது நம்பிக்கை கொண்ட தம் அடியார்களை ஆண்டவர் கைவிடுவதில்லை.

 கடவுள் நமது மன்றாட்டிற்குச் செவி சாய்க்கின்றார் எனில், அவர் நம்மீது எத்துணை அன்பு கொண்டிருப்பார் என்று சிந்தித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

 கடவுள் அளிக்கும் ஆசியில் எல்லா நலன்களும் அடங்கியுள்ளது.

இறைவாக்கு:

‘நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்’ (திபா 116:2) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமது மன்றாட்டிற்குச் செவிசாய்த்து, நமக்கு வெற்றியை அளிக்கின்ற ஆண்டவருக்குக் நன்றி கூறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்பிற நாட்கள்