15 சனவரி 2022, சனி

பாவிகளையே அழைக்க வந்தேன்!

பொதுக்காலத்தின் முதல் வாரம் சனிக்கிழமை


I 1சாமுவேல் 9:1-4, 17-19; 10:1a
II மாற்கு 2:13-17

பாவிகளையே அழைக்க வந்தேன்!

மதுபானக்கூட உரிமையாளரை அழைத்த ஆண்டவர்:


ஒரு நகரில் மதுபானக் கூடம் ஒன்றை நடத்தி வந்தார் ஒருவர். அவருடைய மதுபானக் கூடத்திற்கு ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கான ‘மதுப்பிரியர்கள்’ வந்து போனார்கள். அவ்வாறு வந்த பலரும் தங்கள் கண்ணீர்க் கதையை மதுபானக் கூட உரிமையாளரிடம் கொட்டிவிட்டுச் சென்றார்கள்.

ஒருநாள் மதுபானக்கூட உரிமையாளர் கடவுளுடைய வார்த்தையைக் கேட்க நேர்ந்தது. அவ்வார்த்தை அவரைக் கடவுளுடைய பணியைச் செய்யத் தூண்டியது. உடனே அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு முதலில் இங்கிலாந்திலும், அதன் பின்னர் அமெரிக்காவிலும் கடவுளுடைய வார்த்தையை அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார். அவர்தான் மிகப்பெரிய மறைப்பணியாளரான ஜார்ஜ் ஒய்ட்பீல்ட்.

மதுபானக் கூடத்தை நடத்தி வந்த ஜார்ஜ் ஒய்ட்பீல்டை ஆண்டவர் தமது பணிக்காக அழைத்து, அவர் வழியாக ஆயிரக்கணக்கான மக்களை மனம்மாறச் செய்தது, கடவுள் யாரையும் தன்னுடைய பணிக்காக அழைக்கலாம் என்ற செய்தியை நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய இறைவார்த்தை, கடவுள் பாவி என்றும், சிறியவர் என்று அழைக்கப்பட்டவர்களைத் தம் பணிக்காக அழைப்பதைப் பற்றி வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

வரிதண்டுபவர்கள் பிறப்பால் யூதர்களாக இருந்தாலும், அவர்கள் உரோமையர்களுக்குக் கீழ் பணிபுரிந்து வந்ததாலும், நிர்ணயிக்கப்பட்ட வரியை விடவும் மிகுதியான வரியை வசூலித்ததாலும் பாவிகள் என்று அழைக்கப்பட்டார்கள். இத்தகைய பாவிகளுள் ஒருவரான மத்தேயுவை இயேசு தனது பணிக்கென அழைக்கின்றார். மத்தேயுவும் இயேசு தன்னை அழைத்ததும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார். மட்டுமல்லாமல், தான் மனம்மாறிவிட்டேன் என்பதை உணர்த்தும் விதமாக மத்தேயு இயேசுவுக்குத் தன் வீட்டில் விருந்துகொடுக்கின்றார். அப்போதுதான் இயேசு, “நேர்மையாளர்களை அல்ல; பாவிகளையே அழைக்க வந்தேன்” என்ற வார்த்தைகளைக் கூறுகின்றார்.

முதல் வாசகத்தில், மிகச் சிறிய பென்யமின் குலத்தைச் சார்ந்த, இன்னும் சொல்லப்போனால் பென்யமின் குலத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும் மிகச் சிறியதாகக் கருதப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து சவுல் இஸ்ரயேலின் முதல் அரசராகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். இஸ்ரயேல் மக்கள் அரசர் வேண்டும் என்று கேட்டது ஆண்டவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவர்கள் கேட்டுக் கேட்டுக்கொண்டதற்கேற்ப ஆண்டவர் அவர்களுக்கு சவுலை அரசராகத் தருகின்றார். அதுவும் ஒரு சிறிய குடும்பத்திலிருந்து.

இதன்மூலம் கடவுள் தன் பணிக்கென நேர்மையாளர்களையும் பெரியவர்களையும்தான் அழைப்பார் என்று இல்லை. அவர் பாவிகளையும் சிறியவர்களையும் அழைப்பார் என்பது உறுதியாகின்றது. ஆண்டவர் ஒருவரே நல்லவர், வல்லவர் என்பதால், நாம் அனைவரும் பாவிகளே! ஆகவே, கடவுள் நம்மையும் தமது பணிக்காக அழைக்கின்றார் என்பதை உணர்ந்தவர்களாய், அவரது பணியைச் செய்ய நாம் அணியமாவோம்.

சிந்தனைக்கு:

 கடவுளின் அழைப்பு வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் கொடுக்கப்படும்போது, அதைத் தடுப்பவர்கள்தான் உண்மையில் பாவிகள்

 கடவுள் சோம்பேறிகளை அல்ல, தமது பணியைச் செய்துகொண்டிருப்பவர்களையே அவரது பணிக்காக அழைக்கின்றார்.

 உலக செல்வத்தின் மீதான பற்றுகளை அறுத்து, ஆண்டவர்மீது பற்றுக்கொண்டு வாழ்பவரே அவரது உண்மையான சீடர்.

இறைவாக்கு:

‘நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்’ (யோவா 15:16) என்பார் இயேசு. எனவே, கடவுள் நம்மைத் தமது பணிக்காகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் என்ற உணர்வோடு, அவரது பணிசெய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்பிற நாட்கள்