25 நவம்பர் 2021, வியாழன்

காக்கும் இறைவன் நம்மோடு இருப்பதால், தலைநிமிர்ந்து நிற்போம்!

பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் வியாழக்கிழமை


I தானியேல் 6: 11-27
II லூக்கா 21: 20-28

காக்கும் இறைவன் நம்மோடு இருப்பதால், தலைநிமிர்ந்து நிற்போம்!

ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட கிறிஸ்தவக் குடும்பம்:


அன்று விடுமுறை நாள் என்பதால் கிறிஸ்டோபர் தனது பெற்றோர், மனைவி, மக்களுடன், தனக்குச் சொந்த ஊர்தியில் ஒரு மலைப்பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்றார். வழக்கமாக வெளியே எங்கே சென்றாலும் ஓட்டுநரை வைத்துக்கொள்ளும் கிறிஸ்டோபர், அன்று ஓட்டுநருக்கு விடுப்புக் கொடுத்துவிட்டு, அவரே ஊர்தியை ஓட்டிச் சென்றார். பயணம் மிக இனிதாகச் சென்றுகொண்டிருந்தது.

திடீரென்று கிறிஸ்டோபரின் உள்ளத்தில், ‘மலைப்பிரதேசத்திற்கு நெடுஞ்சாலை வழியாகச் செல்லாமல், மாற்றுப் பாதை வழியாகச் செல்’ என்ற உந்துதல் ஏற்பட்டது. அவர் ஒன்றும் புரியாமல் திகைத்தார். இதே உந்துதல் அவருக்கு மீண்டும் மீண்டுமாக வந்ததால், அவர் ஊர்தியை நெடுஞ்சாலையில் ஓட்டிச் செல்லாமல், மாற்றுப் பாதையில் ஓட்டத் தொடங்கினார். அவருடைய குடும்பத்தார் அவரிடம், “எதற்காக நெடுஞ்சாலையில் செல்லாமல் வேறொரு பாதையில் செல்கின்றீர்கள்?” என்று கேட்டதற்கு அவர் அவர்களிடம், “அது ஏன் என்று தெரியவில்லை. நெடுஞ்சாலையில் செல்லவேண்டாம் என்ற உந்துதல் எனக்கு மீண்டும் மீண்டுமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால்தான் நான் வேறொரு வழியைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார்.

ஒருசில மணி நேரத்தில் கிறிஸ்டோபர் தன் குடும்பத்துடன் மலைப் பிரதேசத்தை அடைந்தார். அவர் அந்த இடத்திற்குச் சென்றபோது, ஒரு கடைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த தொலைகாட்சியின் முன்பு, மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தார்கள். கிறிஸ்டோபர் அருகில் சென்று, அங்கிருந்த ஒருவரிடம் என்ன ஆயிற்று என்று விசாரித்தபோது, அவர் ஓர் ஆற்றின் பெயரைச் சொல்லி, அந்த ஆற்றுக்கு மேலே இருந்த பாலம் உடைந்து போனதையும், அது தெரியாமல் அந்த வழியாகச் சென்ற ஊர்திகள் உள்ளே விழுந்து விட்டதையும் சொன்னார். கிறிஸ்டோபோருக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது, தான் ஏன் நெடுஞ்சாலை வழியாகச் செல்லவேண்டாம், வேறொரு வழியாகச் செல்லவேண்டும் என உணர்த்தப்பட்டோம் என்று. உடனே அவர் இச்செய்தியை தன் குடும்பத்தாரிடம் சொல்லி, “ஆண்டவர்தான் நம்மைக் காப்பாற்றி இருக்கின்றார்” என்று அவர்களோடு சேர்ந்து ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்தார்.

ஆம், ஆண்டவர் தம் அடியார்களை ஆபத்துகளிலிருந்து காக்கின்றார். அதையே இந்த நிகழ்வும், இன்றைய இறைவார்த்தையும் உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட தானியேல், அங்கிருந்த மன்னரின் நன்மதிப்பைப் பெற்றவராய், அவருடைய அரசபையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மன்னருடைய தடையுத்தரவை மீறி, தானியேல் மூன்று வேளையும் கடவுளிடம் வேண்டிவிட்டார் என்பதற்காகச் சிங்கக் குகையில் தள்ளப்படுகின்றார். ஆனால், ஆண்டவரின் தூதர் சிங்கங்களை வாய்களைக் கட்டிப்போட்டு அவருக்கு எந்தவொரு தீங்கும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொண்டார். தானியேல் மாசற்றவராய், ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தாலேயே ஆண்டவர் அவரைச் சிங்கத்தின் வாயிலிருந்து மீட்டார்

நற்செய்தியில் இயேசு, இறுதிக் காலத்தில் என்னவெல்லாம் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். என்னுடைய சீடர்கள் என்பதற்காகவே நீங்கள் பலவாறு துன்புறுத்தப்படுவீர்கள் என்று தன் சீடர்களிடம் சொல்லும் இயேசு, இவற்றையெல்லாம் காணும்போது, தலைநிமிர்ந்து நில்லுங்கள். ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வந்துவிட்டது என்கிறார்.

எனவே, நாம் இயேசுவின் பொருட்டுத் துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தாலும், அவர் நம்மோடு இருக்கின்றார் என்ற உணர்வோடு, அவரில் நம்பிக்கை வைத்து, அவருடைய பணியைச் சிறப்பாகச் செய்வோம்.

சிந்தனைக்கு:

 புயலுக்குப் பின்னே அமைதி என்பதுபோல் கிறிஸ்துவின் பொருட்டு நாம் படும் துன்பங்களுக்குப் பின் இன்பம் வரும்.

 ஆண்டவர் தம் அடியார்களை மறப்பதுமில்லை; கை நெகிழ்வதுமில்லை

 உலகில் நடக்கும் அநீதிகளுக்கு ஒரு நாள் நிச்சயம் முடிவு வரும்.

இறைவாக்கு:

‘சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேரிட்டாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கும் அஞ்சிடேன்’ (திபா 23:4) என்பார் தாவீது. ஆகையால், கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு, அவருடைய வழியில் தொடர்ந்து நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.