25 நவம்பர் 2021, வியாழன்

என்றென்றும் அவரைப் புகழ்ந்துபாடி,ஏத்திப் போற்றுங்கள்

பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் வியாழக்கிழமை


தானியேல் (இ) 1: 45,46-47, 48-49, 50-51

என்றென்றும் அவரைப் புகழ்ந்துபாடி,ஏத்திப் போற்றுங்கள்

கைகளை உயர்த்தி, ஆண்டவரைப் போற்றுங்கள்:


ஒருபங்கில் நற்செய்திக்கூட்டம் நடைபெற்றது. அதில் பலரும் மிக ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். ஒருசிலர், நற்செய்திக் கூட்டத்தை முன்னின்று வழிநடத்திய அருள்பணியாளர், கைகளை உயர்த்தி ஆண்டவரைப் போற்றுங்கள் என்று சொன்னபோது, அதைப் பெரிதுபடுத்தாமல் அப்படியே இருந்தார்கள்

அதைப் பார்த்துவிட்டு அருள்பணியாளர் அவர்களிடம், “கைகளை உயர்த்தி, ஆண்டவரைப் போற்றுவதற்கு வெட்கப்பட வேண்டாம். திருவிவிலியத்தில், மக்கள் கைகளை உயர்த்தி ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்ததற்குப் பல சான்றுகள் இருக்கின்றன என்றுசொல்லிவிட்டுக் கீழ்காணும் மேற்கோள்களை அவர்களுக்கு எடுத்துக்கூறினார்: 1 அர 8:38, திபா 134:2, 1 திமொ 2:8.

இதன் பிறகு அந்த நற்செய்திக்கூட்டத்தில் கலந்துகொண்ட எல்லாரும் தம் கைகளை உயர்த்தி ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள். ஆண்டவரும் அவர்களுக்குத் தன் ஆசியை வழங்கினார்.

ஆம், ஆண்டவரை நாம் நம் கைகளை; ஏன், நம் இதயத்தை உயர்ததிப் போற்றிப் புகழ்கின்றபோது அபரிமிதமான ஆசியைப் பெறுகின்றோம். இன்று நாம் பாடக் கேட்டபதிலுரைப் பாடலில் தீயினின்று ஆண்டவர் தங்களை அற்புதமாகக் காப்பாற்றியதைத் தொடர்ந்து மூன்று இளைஞர்கள், என்றென்றும் ஆண்டவரை புகழ்ந்துபாடி, ஏத்திப் போற்றுங்கள் என்கிறார்கள். அதுகுறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இஸ்ரயேலின் முதல் மன்னரான சவுல், கடவுளின் சொற்படி நடக்காமல், தன் விருப்பத்ததின்படி நடந்தபோது, கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது! (1 சாமு 15:22) என்று சாமுவேல் அவரிடம் கூறுவார். இதன் மூலம் கடவுளின் வார்த்தைகளுக்கு, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

ஆண்டராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்கவேண்டாம். நீ அவைகளை வழிபடவோ, அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம் (விப 20:4-5) என்றுசொல்லி இருப்பார். இக்கட்டளைக்கு அப்படியே பணிந்தவர்கள்தான் இன்று நாம் பாடிய பதிலுரைப்பாடலில் வரும் அனனியா, அசரியா, மிசாவேல் ஆகிய மூன்று இளைஞர்கள். இவர்கள் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தனது பொற்சிலையை வணங்குமாறு சொன்னபோது வணங்காமல், அதற்காகத் தீச்சூளையில் போடப்பட்டபோதும், அஞ்சாமல், தங்கள் முடிவில் மிக உறுதியாக இருக்கின்றார்கள். இதனால் ஆண்டவர் அவர்களைக் காப்பாற்றுகிறார். அப்போது அவர்கள் பாடும் பாடல்தான் இன்றைய பதிலுரைப் பாடல்.

பனித்திவலைகள் தொடங்கி, மண்ணுலகுவரை யாவும் என்றென்றும் கடவுளைப் புகழ்ந்துபாடி. ஏத்திப் போற்றுங்கள் என்றுபாடும் இந்த மூன்று இளைஞர்களும் நாம் ஒவ்வாருவரும் கடவுளைப் போற்றிப் புகழ நமக்குஅழைப்பு விடுக்கின்றார்கள்.

சிந்தனைக்கு:

 ஆண்டவரைப் போற்றிப் புகழும்போது நாம் ஆறுதல் பெறுகிறோம்.

 ஆண்டவரைப் போற்றிப் புகழ்வோரோடு, ஆண்டவர் உடனிருக்கிறார்.

 ஆண்டவரைப் போற்றிப் புகழ்வதற்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனெனில் பலருக்கு அந்தவாய்ப்பு இல்லை.

இறைவாக்கு:

‘தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி ஆண்டவரைப் போற்றுங்கள்’ (திபா 134:2) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால் நாம் தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்திக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.