14 அக்டோபர் 2021, வியாழன்

“பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவர்”

பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம் வியாழக்கிழமைதிருப்பாடல் 130: 1-2, 3-4, 5-6 (7)

“பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவர்”

ஆண்டவர் என்மீது கொண்டிருக்கும் பேரன்பே எனக்கு நலமளிக்கும்:


கோயில் திருப்பணிகளில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்ட பெரியவர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுந்தார். அப்பொழுது அவரிடம் நலம் விசாரிக்க அவருக்கு அறிமுகமான பலர் வந்தனர். பெரியவர் உறுப்பினராக இருந்த வின்சென்ட் தெ பவுல் சபையிலிருந்தும் அவரைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் அவரிடம் நலம் விசாரித்தபின், அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் அவருக்காக மன்றாடத் தொடங்கினார்: “ஆண்டவரே! இவர் உம்மீது எத்துணை அன்பு கொண்டு, யாவருக்கும் நல்லது செய்தவர் என்பதை நீர் அறிவீர். இவர் விரைவில் நலமடைய உமது இரக்கத்தைக் கெஞ்சிக் கேட்கின்றேன்.”

அவர் இவ்வாறு வேண்டிக்கொண்டிருக்கும்போதே, பெரியவர் அவரைத் தடுத்து நிறுத்தி, “நான் ஆண்டவரிடம் எத்துணை அன்பு கொண்டிருக்கிறேன் என்று சொல்லி வேண்டாதீர்கள். ஆண்டவர்மீது என்மீது எத்துணை அன்புகொண்டிருக்கின்றார் என்பதைச் சொல்லி மன்றாடுங்கள். ஏனெனில், இலாசர் இறந்த பின், அவரது கல்லறைக்குச் சென்று, இயேசு கண்ணீர் விட்டு அழுவதைப் பார்த்த யூதர்கள், ‘இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு’ என்றுதான் சொன்னார்களே அன்றி, ‘இலாசருக்கு இயேசுவின் மேல் எத்துணை அன்பு’ என்று சொல்லவில்லை. அதனால் நான் ஆண்டவர்மீது கொண்டிருக்கும் அன்பு அல்ல, ஆண்டவர் என்மீது கொண்டிருக்கும் பேரன்பே எனக்கு நலமளிக்கும் என்பதால், ‘நீர் பேரன்பு கொண்டிருக்கும் உம் அடியார் இவருக்கு நலமாளித்தருளும்’ என்று மன்றாடும்” என்றார்.

இதற்குப் பிறகு பெரியவருக்காக மன்றாடியவர் அவர் சொன்னது போன்றே மன்றாடினார். இதனால் அவர் விரைவில் நலமடைந்தார்.

ஆம், நாம் ஆண்டவர்மீது கொண்டிருக்கும் அன்பு அல்ல, ஆண்டவர்மீது நம்மீது கொண்டிருக்கும் பேரன்பே உயர்ந்தது. அதுவே நமக்கு நலமாளிக்கக்கூடியது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது” என்கிறது. அது குறித்து நாம் சந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

ஆண்டவரின் திருநகராம் எருசலேம் நோக்கித் திருப்பயணமாகச் சென்றபோது இஸ்ரயேல் மக்கள் பாடிய பாடிய பாவப்மன்னிப்புப் பாடல்தான் திருப்பாடல் 130. இத்திருப்பாடலானது துயரிலிருந்து ஆறுதலையும், பாவத்திலிருந்து விடுதலையையும் இருளிலிருந்து ஒளியையும், மீட்பையும் ஆண்டவர் தருமாறு கேட்கின்றது.

ஆண்டவரால் மட்டுமே நமக்கு ஆறுதலையும் விடுதலையையும் ஒளியையும் மீட்பைம் தரமுடியும். ஏனெனில் அவர் நம்மீது பேரன்பு கொண்டவர். ஆகையால், நமக்கு எல்லா நலன்களையும் தரும் ஆண்டவரிடம் மன்றாடி, அவரது ஆசியைப் பெறுவோம்.

இறைவாக்கு:

 தன் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறை வரைக்கும் ஆண்டவர் இரக்கம் காட்டுவார் (இச 5:10)

 என்றென்றும் உள்ளது ஆண்டவரின் பேரன்பு (1குறி 16:34)

 ஆண்டவரது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது (திபா 57:10)

சிந்தனைக்கு:

‘ஆண்டவரே, உம் பேரன்பு நன்மை மிக்கது’ (திபா 69:16) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நன்மைமிக்க ஆண்டவரின் பேரன்பை உணர்ந்தவர்களாய், அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.