14 அக்டோபர் 2021, வியாழன்

புனித முதலாம் கலிஸ்து - திருத்தந்தை, மறைச்சாட்சி

வி.நினைவு

முதல் வாசகம்

உங்கள் பொறுப்பில் இருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4

அன்பிற்குரியவரே,

கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்பட இருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை: உங்கள் பொறுப்பில் இருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள்.

தலைமை ஆயர் வெளிப்படும்போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 40: 1,3ab. 6-7a,7b-8,9 (பல்லவி: 7a,8a)

பல்லவி: என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற ‘இதோ வருகின்றேன்.’

1
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
3ab
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். - பல்லவி

6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7a
எனவே, ‘இதோ வருகின்றேன்.’ - பல்லவி

7b
என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். - பல்லவி

9
என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 15b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 24-30

அக்காலத்தில்

தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் திருத்தூதர்களிடையே எழுந்தது.

இயேசு அவர்களிடம், “பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்.

நான் சோதிக்கப்படும் போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.