18 செப்டம்பர் 2021, சனி

“என்றும் உள்ளது அவரது பேரன்பு”

பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம் சனிக்கிழமை


திருப்பாடல் 100: 1-2, 3-4, 5 (2b)

“என்றும் உள்ளது அவரது பேரன்பு”

கடவுள் உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்:


சிறுவன் ஒருவன் ஒரு விடுமுறை நாளில் தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றிருந்தான். அங்கு அவனுடைய கவனத்தைச் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு படம் வெகுவாகக் கவர்ந்தது. அவன் அதன் அருகில் சென்று பார்த்தபொழுது, அதில், “கடவுள் உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. உடனே அவன் தன் அத்தையிடம், “கடவுள் உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார் என்றால், எப்போது நான் தவறு செய்வேன் தண்டிக்கலாம் என்பதற்காகக் கடவுள் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்று அர்த்தமா?” என்றான்.

“அதுவல்ல அர்த்தம்” என்று பேச்சைத் தொடங்கிய அவர், “கடவுள் உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றார் எனில், நீ முதுமை அடைந்து இறக்கின்ற வரைக்கும் உனக்கு எந்தவொரு துன்பமும் வரக்கூடாது என்பதற்காக, அவர் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்பதே அர்த்தம். ஏனெனில், அவர் பேரன்பு கொண்ட கடவுள்” என்றார். தனக்கு மிகவும் பிடித்துப்போன அந்தப் படத்திற்கு தனது அத்தை நல்லதொரு விளக்கம் கொடுத்ததை அடுத்து, அவன் அவருடைய அனுமதியுடன் அந்தப் படத்தை தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று, தன் தனியறையில் மாட்டி வைத்தான் (Sunday School Times).

ஆம், கடவுள் பேரன்புகொண்டவராக இருப்பதால் நமக்கு எந்தவொரு துன்பமும் வரக்கூடாது என்பதற்காக அவர் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர் தம் பேரன்பு” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

ஒருவர் நம்மீது எந்தவோர் எதிர்பார்ப்புமின்றி அன்புகூர்ந்தால், நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! அதுவே, அவர் நம்மீது என்றும் அன்புகூர்ந்தால் அந்த மகிழ்ச்சியை நம்மால் வார்த்தைகளால் விவரித்துச் சொல்லமுடியாது. இத்தகைய பேரன்பை ஆண்டவர் நம்மீது கொண்டிருக்கின்றார். அதனால் நாம் அவரை மகிழ்ச்சியோடு வழிபட்டு, அவரது மக்கள் நாம் என்பதை உணர்ந்து, அவருக்கு நன்றிப் பாடவேண்டும் என்பதுதான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 100 இன் ஆசிரியருடைய அழைப்பாக இருக்கின்றது.

ஆண்டவராகிய கடவுள் யூதர்களைத் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்தாலும் (இச 7: 7), அவர் மற்ற மக்களைப் புறக்கணிக்கவில்லை. அவர்கள்மீதும் அவர் பேரன்பு கொண்டார். அதனால்தான் திருப்பாடல் ஆசிரியர், “அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்” என்கிறார். ஆதலால், எல்லார்மீதும் பேரன்பு கொண்டவரும்; நல்லவருமான ஆண்டவரை நாம் ஆர்ப்பரித்து வாழ்த்துவோம்; அவருக்கு நன்றிப் பண்பாடி, அவரை வழிபடுவோம்.

சிந்தனைக்கு:

 நல்லவர் ஒருவரே (மத் 19: 17).

 ஆண்டவரில் நம்பிக்கை கொண்டோரை அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும் (திபா 32: 10)

 தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி ஆண்டவரைப் போற்றுங்கள் (திபா 134: 2).

இறைவாக்கு:

‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக’ (திபா 118: 2) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, நாம் கடவுளின் பேரன்பை எல்லாருக்கும் சான்று பகர்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.