23 ஜூலை 2021, வெள்ளி

கடவுளின் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள்

பொதுக்காலம் பதினாறாம் வாரம் வெள்ளிக்கிழமை


திருப்பாடல் 19: 8, 9, 10, 11 (யோவா 6: 68)

கடவுளின் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள்

பார்வை இழந்தவர் நான்கு முறை திருவிவிலிய வாசித்தல்:


The wonders of the Word of God என்ற நூலில் ராபர்ட் எல்.சும்னர் (Robert L. Sumner) என்பவர் சொல்லக்கூடிய நிகழ்வு இது. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் (Kansas) நகரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் கிறிஸ்தவ சமயத்தில் சேர்ந்து, ஒருசில மாதங்களே ஆன இளைஞர் ஒருவர் பார்வை இழந்தார். மேலும் இவரது இரண்டு கைகளும் முற்றிலுமாகச் சேதமடைந்தன. இந்த நிலையிலும், திருவிவிலியம் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் எப்படியாவது திருவிவிலியம் வாசிக்க நினைத்தார்.

இச்சமயத்தில் இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன் இதழ்களைக் கொண்டு (Lips) பார்வையற்றவர்கள் வாசிக்கப் பயன்படுத்தும் ப்ரெயிலியின் (Braille) மூலம் திருவிவிலியத்தை வாசிப்பதாகக் கேள்விப்பட்டார். இச்செய்தி இவருக்கு நம்பிக்கை ஊட்டியது. எனவே இவர், ‘நாமும் ஏன் ப்ரெயிலின் மூலம் திருவிவிலியத்தை வாசிக்கக்கூடாது என்று முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து ப்ரெயிலி முறையில் வடிவமைக்கப்பட்ட திருவிவிலியம் இவருக்குக் கொடுக்கப்பட்டது. இவர் அதைத் தன் இதழ்களைக் கொண்டு வாசிக்க முற்பட்டபோதுதான் தெரிந்தது, குண்டுவெடிப்பில் இவரது இதழ்களும் செயலிழந்து போய்விட்டன என்று. இதனால் இவர் மன உளைச்சலுக்கு உள்ளானார். இதையடுத்துத் தற்செயலாக இவரது நா ப்ரெயிலி முறையில் வடிவமைக்கப்பட்ட திருவிவிலியத்தில் பட, நாவினால் இவரால் திருவிவிலியத்தை வாசிக்க முடிந்தது. இதனால் இவர் நாவினாலேயே ப்ரெயிலி முறையில் வடிவமைக்கப்பட்ட திருவிவிலியத்தைத் தொட்டுத் தொட்டு, அதை நான்கு முறை வாசித்தார்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் கிறிஸ்தவ இளைஞர் குண்டுவெடிப்பில் தன் கண்களை இழந்தாலும், நாவில் தொட்டுத் தொட்டு நான்குமுறை திருவிவிலியத்தை வாசித்தது நம்மை வியப்படைய வைக்கின்றது. திருவிவிலியத்தின்மீது இவர் எந்தளவுக்குத் தாகம் கொண்டிருந்தால் இப்படியொரு செயலைச் செய்திருப்பார் என்று நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், கடவுளின் வார்த்தை பசும்பொன்னிலும் மேலாக விலைமிக்கவை என்ற செய்தியைச் சொல்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

மிகப்பெரிய எழுத்தாளரும் சிந்தனையாளருமான சி.எஸ்.லெவிஸ் திருப்பாடல் 19 ஐக் குறித்துச் சொல்லும்பொழுது, “திருப்பாடல்களிலியே சிறந்ததொரு திருப்பாடல், திருப்பாடல் 19 தான். மேலும் இத்திருப்பாடலில் இடம்பெறும் வார்த்தைகள் அவ்வளவு அற்புதமானவை என்று குறிப்பிடுவார். சி.எஸ். லெவிஸ் சொல்லக்கூடிய வார்த்தைகள் முற்றிலும் உண்மை.

கடவுள் வார்த்தையைக் குறிக்க இத்திருப்பாடலில், திருச்சட்டம், ஒழுங்குமுறை, நியமங்கள், கட்டளைகள், அச்சம், நீதிநெறிகள் என ஆறு விதமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. கடவுளுடைய வார்த்தையின் மேன்மையை, இனிமையை விவரிக்க எத்தனை வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் போதாது. புத்துயிர் அளிக்கும் அவ்வார்த்தைகளை நாம் வாழ்வாக்கினால் அதைவிடச் சிறப்பான ஒரு செயல் வேறொன்றுமில்லை

சிந்தனைக்கு:

 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது (எபி 4: 12).

 ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும் (எசா 40: 8)

 நிலைவாழ்வளிக்கும் கடவுளின் வார்த்தையை நாம் கடைப்பிடித்து வாழ்வது எப்போது?

ஆன்றோர் வாக்கு:

‘கடவுளின் வார்த்தை உங்களை அமைதியானயும் நம்பிக்கையும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்’ என்பார் சுமித் விக்கில்ஸ்வொர்த் என்ற அறிஞர். எனவே, நமக்கு அமைதியையும் எல்லா ஆசிகளையும் தரும் இறைவார்த்தையை வாசித்து, வாழ்வாக்கி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.