25 ஜூன் 2021, வெள்ளி

இயேசுவைப் பணிந்த தொழுநோயாளர்

பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை


I தொடக்க நூல் 17: 1, 9-10, 15-22
II மத்தேயு 8: 1-4

இயேசுவைப் பணிந்த தொழுநோயாளர்

பணிவோடு இருந்த இறையடியார்:


இறையடியார் ஒருவர் இருந்தார். இவர் இறைவனிடம் ஆழமான பற்றுக்கொண்டிருந்தார். இப்படிப்பட்டவரைச் சாத்தான் ஒருநாள் சோதிக்க நினைத்தது. அதனால் அது ஒரு வானதூதரைப் போன்று தன்னை மாற்றிக்கொண்டு இறையடியாரிடம் வந்தது.. “இறைவனிடமிருந்து ஒரு முக்கியான செய்தியை உங்களுக்குக் கொண்டுவந்திருக்கின்றேன்” என்று பவ்வியமாகச் சொன்னது வானதூதர் உருவில் இருந்த சாத்தான். இறையடியார் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. “முகவரி மாறி வந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்! ஏனெனில், கடவுள் எனக்கொரு முக்கியமான செய்தியைச் சொல்லும் அளவுக்கு நான் முக்கியமானவனும் கிடையாது; நல்லவனும் கிடையாது” என்று மிகவும் பணிவோடு சொன்னார் இறையடியார். இதைக் கேட்டதும் சாத்தான், ‘இவரை நம்மால் ஒரு காலமும் ஏமாற்றமுடியாது’ என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து ஓடிப்போனது.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற இறையடியார் உள்ளத்தில் தாழ்சசியோடு இருந்தார். அதனால் அவர் இறைவனின் ஆசியை அபரிமிதமாகப் பெற்றுச் சாத்தான் தன்னை அணுக முடியாதவாறு இருந்தார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில் வரும் தொழுநோயாளர் தாழ்ச்சியோடும் அதேநேரத்தில் நம்பிக்கையோடும் இருந்து நலம்பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

மலைப்பொழிவிற்குப் பிறகு, மலையிலிருந்து கீழே இறங்கிவரும் இயேசுவிடம் வரும் தொழுநோயாளர் முதலில் அவர்முன் பணிகின்றார். இங்கு நாம் ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், இயேசு மலையிலேயே இருந்துவிடவில்லை. அல்லது புனித பவுல் சொல்வது போன்று, கடவுள் வடிவிலேயே இருந்துவிடவில்லை. மாறாக, மலையிலிருந்து கீழே இறங்கி வருகின்றார்; தம்மையே தாழ்த்திக்கொள்கின்றார் (பிலி 2: 6-8) என்பதாகும். இப்படித் தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டான இயேசுவுக்கு முன்பாக தொழுநோயாளர் பணிவதன் மூலமாக இயேசுவின் கவனத்தை ஈர்க்கின்றார்.

மட்டுமல்லாமல், இந்தத் தொழுநோயாளர், “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்கிறார். இன்றைக்கு எத்தனையோ மனிதர்கள் கடவுளைத் தங்களுடைய விருப்பத்திற்கு வளைக்கின்றபொழுது, இவரோ கடவுளின் விருப்பத்திற்கு வளைந்து போகின்றார். இவற்றையெல்லாம் கண்டு இயேசு மிகவும் வியந்துபோயிருக்கவேண்டும். அதனால்தான் இயேசு அவரிடம், “நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!” என்கிறார்.

தான் தொழுநோயாளராய் இருப்பதால் இயேசுவிடம் சென்றால், அவர் தன்னை விரட்டிவிடுவாறே என்றெல்லாம் நினைத்து இந்தத் தொழுநோயாளர் கவலைப் படவில்லை. மாறாகத் தாழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் இயேசுவை அணுகிச் செல்கின்றார். அதனால் அவர் நலம்பெறுகின்றார். நாமும் இயேசுவைத் தாழ்சியோடும் நம்பிக்கையோடும் அணுகிச் சென்று, அவர் அளிக்கும் நலமான வாழ்வினைப் பெற்று மகிழ்வோம்.

சிந்தனைக்கு:

 தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும் (நீமொ 29: 33)

 ஆண்டவரை நம்புங்கள் (திபா 4: 5)

 நமக்கு நலமான வாழ்வினைத் தரும் ஆண்டவரை நாம் நம்பியிருக்கின்றோமா? சிந்திப்போம்.

ஆன்றோர் வாக்கு:

‘ஆணவத்தால் அழிவு மட்டுமே வரும்; தாழ்ச்சியால் ஆண்டவரின் எல்லா ஆசிகளும் வரும்’ என்பார் எஸ்ரா டாப்ட் பென்சன் என்ற அறிஞர். ஆதனால், நற்செய்தியில் வரும் தொழுநோயாளரைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.