25 ஜூன் 2021, வெள்ளி

உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பர்

பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை


திருப்பாடல் 128: 1-2, 3, 4-5 (4)

உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பர்

இல்லற வாழ்வில் தோற்றுப்போன செல்வந்தர்:


அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் ஜே. பால் கெட்டி (J. Paul Getty). யார்மீதும் பொறாமைப்படாத இவர், மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகளைக் கண்டால் மட்டும் பெரிதும் பொறாமைப்படுவார். காரணம் இவர் ஒருவர் மாற்றி ஒருவர் என ஐந்து பேரைத் திருமணம் முடித்தார்.. வேதனை என்னவென்றால், இந்த ஐந்து திருமணங்களும் விவாகரத்தில் போய் முடிந்தன.

ஆம், ஜே. பால் கெட்டியால் மிகுதியாகப் பணம் சம்பாதிக்க முடிந்தது. ஆனால், ஒரு மனைவியைக்கூடத் தன்னோடு வைத்திருக்க முடியவில்லை. பலரும் இந்தப் பால் கெட்டியைப் போன்றுதான் நல்லதொரு வாழ்க்கை துணைவியார் இல்லாமல், நிம்மதி இழந்து தவிக்கின்றார்கள். இத்தகைய சூழநிலையில் இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருடைய துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார் என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

திருமலையாம் சீயோன் மலைநோக்கி மக்கள் திருப்பயணமாகச் செல்லும்போது பாடப்பட்ட பாடல்தான் இன்று நாம் பாடக்கேட்ட திருப்பாடல் 128. இத்திருப்பாடல், ஒருவர் ஆண்டவருக்கு அஞ்சி, அவர் வழி நடக்கும்பொழுது பேறுபெற்றவர் என்கின்றது. மேலும் அவர் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கின்றபொழுது எத்தகைய ஆசிகளைகளை எல்லாம் பெறுவார் என்பதை எடுத்துக்கூறுகின்றது.

லேவியர் புத்தகம் 26 ஆவது அதிகாரம், ஆண்டவருக்கு அஞ்சாமலும், அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்காமலும் இருக்கும்பொழுது, முதலில் பாதிக்கப்படுவது நிலம்தான் என்கிறது. இத்தகைய பின்னணியில் திருப்பாடல் 128 – ஐக் குறித்து நாம் சிந்தித்துப் பார்த்தோமெனில், ஒருவர் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால், அவர் உழைப்பின் பயனை உண்பார் என்றும், நற்பெயரும் நலமும் பெறுவார் என்றும், அவரது துணைவியார் திராட்சைக் கொடிபோல் இருப்பார் என்றும், அவரது பிள்ளைகள் ஒலிவக் கிளைகள் போல் சூழ்ந்திருப்பர் என்றும் கூறுகின்றது. அப்படியானால், ஒருவர் கடவுளின் ஆசியைப் பெறுவதற்கு, அவர் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வது இன்றியமையாததாக இருக்கின்றது.

ஆண்டவர் அஞ்சி வாழ்வது என்றால், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவர் வழியில் நடப்பதாகும். நாம் ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழியில் நடக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

 உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட, அவருக்கு பணிந்து அவர் பெயராலே ஆணையிடு (இச 6: 13).

 நான் ஆண்டவரை நம்பினேன்; நான் தடுமாறவில்லை (திபா 26: 1).

 எப்பொழுதும் நாம் ஆண்டவருக்கு அஞ்சி, அவர் வழியில் நடக்க முயற்சி செய்வோம்.

இறைவாக்கு:

‘ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்’ (திபா 34: 7) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, நாம் ஆண்டவருக்கு அஞ்சி, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.