17 ஏப்ரல் 2021, சனி

“அஞ்சாதீர்கள்”

பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் சனிக்கிழமை


I திருத்தூதர் பணிகள் 6: 1-7
II யோவான் 6: 16-21

“அஞ்சாதீர்கள்”

அஞ்சி அஞ்சி வாழ்ந்த மனிதர்:


ஒரு நகரிலிருந்த பிரபல உளவியலாரிடம் வயதானவர் ஒருவர் வந்தார். அவர் உளவியலாரிடம், “ஐயா! நான் படுத்துறங்கும் கட்டிலுக்குக்கீழ் ஒருபெரிய விலங்கு இருந்துகொண்டு என்னைத் தூங்கவிடாமல் செய்துகொண்டிருக்கின்றது. மேலும் அது உருவத்தில் ஒவ்வொருநாளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த விலங்கை இப்படியே விட்டால் என்னை விழுங்கிவிடும்போல் இருக்கிறது. நீங்கள்தான் என்னை அந்த விலங்கிடமிருந்து எப்படியாவது காப்பாற்றவேண்டும்” என்றார். வயதானவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த உளவியலார், “நீங்கள் படுத்துறங்கும் கட்டிலுக்குக்கீழ் பெரிய விலங்கு இருக்க வாய்ப்பேயில்லை; அது உங்கள் மனபிரம்மையாகதான். தயவுசெய்து இப்படிப்பட்ட எண்ணத்திலிருந்து வெளியே வாருங்கள்” என்றார். பெரியவரால் உளவியலார் சொன்னதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை; தான் படுத்துறங்கும் கட்டிலுக்குக்கீழ் பெரியவிலங்கு இருக்கிறது என்பதை அவர் உறுதியாக நம்பினார். இதனால் அவர் ஒவ்வொருநாளும் உளவியலாரிடம் வந்து சொன்ன கதையையே மீண்டும் மீண்டுமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். உளவியலாரும் அவரிடம் சினங்கொள்ளாமல், பொறுமையாக, “அது மனபிரம்மைதானே தவிர வேறொன்றும் இல்லை” தைரியமூட்டி வந்தார்.

இப்படியிருக்கையில் சிலநாள்களாக வயதானவர் உளவியலாரிடம் வரவேயில்லை. ‘இவருக்கு என்னவாயிற்று?’ என்று உளவியலார் நினைத்துக்கொண்டிருக்கையில், ஒருநாள் வயதானவர் உளவியலாரிடம் வந்தார். “இத்தனை நாள்களாக எங்கே போனீர்கள்?” என்று உளவியலார் வயதானவரிடம் கேட்டதற்கு அவர், “நான் வேறொரு உளவியலாரிடம் சென்றேன். அவர் என்னுடைய பிரச்னையை ஒரே நாளில் தீர்த்துவைத்து விட்டார்” என்றார். “அது எப்படி?” என்று இந்த உளவியலார் அவரிடம் கேட்டதற்கு அவர், “நீங்கள் படுத்துறங்கும் கட்டிலின்கீழ் இருக்கும் நான்கு கால்களையும் வெட்டியெறிந்து விடுங்கள் என்றார். நானும் அவ்வாறே செய்தேன். இதனால் அந்த விலங்கிடமிருந்து எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை” என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த உளவியலார் சிரிப்பதா, அழுவதா? எனத் தெரியாமல் விழித்தார்.

பலரும் இந்நிகழ்வில் வருகின்ற வயதானவரைப் போன்றுதான் இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து அஞ்சி அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் அவர் கடல்மீது நடந்து வருவதைப் பார்த்துவிட்டுப் பேய் என்று அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு இயேசு என்ன பதிலளிக்கின்றார் என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருவிவிலியப் பின்னணி

ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததைத் தொடர்ந்து, மக்கள் தன்னைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை அறிந்தவராய், இயேசு தனியாய் மலைக்குப் போகிறார்; அவரது சீடர்களோ மறுகரையிலிருந்த கப்பர்நாகுக்குப் போகிறார்கள். சீடர்கள் பயணப்பட்ட கலிலேயக் கடல் தரைமட்டத்திலிருந்து 150 அடி ஆழமானது. மேலும் அதில் அடிக்கடி பெருங்காற்று வீசும். சீடர்கள் கடலில் பயணம் செய்தபொழுதும் அவ்வாறுதான் கடலில் பெருங்காற்று வீசியது. இந்நேரத்தில் இயேசு கடலில் நடந்து வருவதைப்பார்த்துவிட்டுச் சீடர்கள், “அது பேய்” (மாற் 6: 49) என்று அஞ்சுகிறார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “நான்தான், அஞ்சாதீர்கள்” என்கின்றார். இயேசுவின் சீடர்களைப் போன்றுதான் நாம் எல்லாவற்றிற்கு அஞ்சி அஞ்சி வாழ்கின்றோம். இத்தகைய தருணங்களில் ஆண்டவர் நமக்குத் தரும் நம்பிக்கை தரும் செய்தித்தான் “அஞ்சாதீர்கள்” என்பதாகும்.

சிந்தனைக்கு:

 ஆண்டவர் நம்மோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சத்தேவையில்லை (திபா 23: 4).

 அன்பில் அச்சத்திற்கு இடமில்லை (1 யோவா 4: 18).

 உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கின்றேன் (மத் 28: 20) என்ற இயேசுவின் வார்த்தையில் நமக்கு நம்பிக்கை இருக்கிறதா?

ஆன்றோர் வாக்கு

‘துணிவிருந்தால் துக்கமில்லை, துணிவில்லாவனுக்குத் தூக்கமில்லை’ என்பார் மு. கருணாநிதி. எனவே, நாம் ஆண்டரிடம் நம்பிக்கைகொண்டு அஞ்சிமின்றத் துணிவோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்