17 ஏப்ரல் 2021, சனி

“யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்”

பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் சனிக்கிழமை


திருப்பாடல் 33: 1-2, 4-5, 18-19 (22)

“யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்”

யாருமே நன்றி சொல்லவில்லை:


சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள இல்லினோய்ஸ் மாகாணம், இவான்ஸ்டன் பகுதியில் ஒரு கப்பல் உடைந்தது. அந்தக் கப்பலில் பயணம் செய்தவர்களை மீட்பதற்காக Northwestern University என்ற பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் சென்றிருந்தார்கள். இதில் எட்வர்ட் ஸ்பென்சர் என்ற கல்லூரி மாணவர் மட்டும் பதினேழு பேரை மீட்டார்.

இது நடந்து சில நாள்கள் கழித்து, செய்தியாளர் ஒருவர் கப்பலில் உயிருக்குப் போராடிய பதினேழு பேரை மீட்டி எட்வர்ட் ஸ்பென்சரைச் சந்தித்து, “பதினேழு பேரைக் காப்பாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?’ என்று கேட்டபொழுது, அவர் செய்தியாளரிடம், “நான் உயிரைப் பணயம் வைத்துப் பதினேழு பேரைக் காப்பாற்றினேன்; ஆனால்,இதுவரைக்கு யாரும் எனக்கு நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னதில்லை” என்று வருத்தப்பட்டார்.

ஆம், பலரும் இந்த நிகழ்வில் வரும் பதினேரு பேரைப் போன்றுதான், தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றி சொல்வதே இல்லை; ஆனால், தாவீது மன்னர் இறைவனிடமிருந்து தாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றி சொன்னார். அதைத் தான் இன்று பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில், “யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்” என்று கேட்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

பொறாமை மிகுதியால் சவுல் தாவீதைக் கொல்ல முயன்றபொழுது தாவீது அவரிடமிருந்து தப்பித்து, காத்து மன்னர் ஆக்கிசிடம் செல்கின்றார். பின்னர் அவரிடமிருந்து தப்பித்து எருசலேமிற்குத் திரும்பி வருகின்றார் (1 சாமு 21: 10-15). இத்தகைய தருணங்களில் ஆண்டவர் தம்மோடு இருந்து, தம்மைக் காத்ததற்காக தாவீது ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார்; அவருக்கு நன்றி செலுத்துகின்றார். இதுவே இன்று நாம் பாடக்கேட்ட திருப்பாடல் 33 ஆகும். பின்னாளில் இத்திருப்பாடல் திருவழிபாட்டில் பயன்படுத்தப்பட்டது.

இத்திருப்பாடல் இறைஞானத்தையும் இறை வல்லமையையும், மானிடர்மீது கடவுள் கொண்டிக்கும் பேரன்பையும் நினைந்து போற்றுவதாக இருக்கின்றது. மேலும் இத்திருப்பாடல் கடவுள் தங்களுக்குச் செய்த நன்மைகளுக்கு, அவருக்கு நன்றி கூற அழைப்பு விடுப்பதாகவும் இருக்கின்றது. எனவே, நாம் கடவுள் நமது வாழ்வில் செய்த நன்மைகளை நினைத்து, அவருக்கு நன்றி செலுத்துவோம்.

சிந்தனைக்கு:

 குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் – ஜான் எப். கென்னடி.

 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏனெனில், அவர் நல்லவர் (1 குறி 16: 34)

 எல்லாச் சூழலிலும் நன்றி கூறுங்கள் (1 தெச 5: 18)

ஆன்றோர் வாக்கு:

‘நன்றியுணர்வோடு இருப்பதே உயர்ந்த ஆன்மாக்களின் அடையாளம்’ என்பார் ஈசாப். எனவே, நாம் இறைவன் நமக்குச் செய்த நன்மைகளுக்கு நன்றியுடையவகளாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்