08 ஏப்ரல் 2021, வியாழன்

“உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையை விளங்குகின்றது”

பாஸ்கா காலம் முதல் வாரம் வியாழக்கிழமை


திருப்பாடல் 8: 1a, 4, 5-6, 7-8 (1ab)

“உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையை விளங்குகின்றது”

இயேசுவின் திருப்பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்:

இரஷ்யாவில் கிறிஸ்துவத்திற்கு எதிரான அடக்குமுறைகள் மிகுதியான இருந்த நேரமது. கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி வேண்டுவதற்குத் தடைசெய்யப்பட்டிருந்தார்கள். அதையும்மீறி ஒரு சிற்றூரில், சில கிறிஸ்தவர்கள் ஒரு வீட்டில் கூடி இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று அவர்கள் இருந்த வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனே ஒருவர் எழுந்து சென்று, கதவைத் திறந்தபொழுது, அங்குக் காவலர் ஒருவர் கையில் துப்பாக்கி ஏந்தி நின்றுகொண்டிருந்தார். அவர் அங்குக் கூடியிருந்த கிறிஸ்தவர்களிடம், “தடையைமீறி நீங்கள் ஏன் இங்குக் கூடினீர்கள்?” என்று கத்தினார். தொடர்ந்து அவர் அவர்களிடம், “உங்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் வரிசையாகச் சொல்லுங்கள். ஏனெனில், உங்களை நான் கைது செய்து சிறையிலடைக்கவேண்டும்” என்றார். அவர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தங்கள் பெயர்களைச் சொன்னார்கள். எல்லாரும் தங்களுடைய பெயர்களைச் சொல்லி முடித்த பின், “இங்கு இன்னும் ஒருவர் இருக்கின்றார். அவருடைய பெயரையும் எழுதிக் கொள்ளுங்கள்” என்றார் ஒருவர்.

காவலர் அங்கிருந்தவர்களை மீண்டுமாக எண்ணிவிட்டு, “இங்கு முப்பது பேர் இருக்கின்றார்கள். இவர்கள் யாவருடைய பெயரையும் எழுதிவிட்டேன். இதற்கு மேலும் யார் இங்கு இருக்கின்றார் என்று அவருடைய பெயரையும் எழுதச்சொல்கின்றாய்?” என்றார். அதற்கு அவரிடம் பேசியவர். “இங்கு எங்களோடு சேர்த்து இயேசு கிறிஸ்துவும் இருக்கின்றார். அதனால்தான் அவருடைய திருப்பெயரையும் எழுதச் சொன்னேன்” என்றார். இதைக்கேட்ட காவலர் மிரண்டுபோனார்.

ஆம், நம்மோடு இருப்பவர் நம் ஆண்டவர் இயேசு. அவரது திருப்பெயர்தான் எத்துணை மென்மையானது! இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், ‘ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இன்று நாம் பாடக்கேட்ட திருப்பாடல் 8, தாவீது மன்னரின் புகழ்ப்பா வகையைச் சார்ந்தது. இத்திருப்பாடல் கடவுளின் மாட்சியையும், அதிலிருந்து ஒளிரும் மாந்தருடைய மாண்பையும் போற்றுகின்ற ஒரு பாடலாக இருக்கின்றது. மேலும் இத்திருப்பாடல் கடவுள் தம் அளவில்லா இரக்கத்தினால் மாந்தர்களை மீட்டு, பராமரித்துப் பாதுகாத்து வருவதால், அவர்கள் அடையும் மேன்மையை எடுத்துக்கூறுகின்ற ஒரு பாடலாக இருக்கின்றது.

கடவுள் மனிதப்பிறவிகளை நினைப்பதற்கு அவர்கள் எம்மாத்திரம், ஆனாலும் கடவுள் அவர்களைத் தமக்குச் சற்றே சிறியவர்களாக்கி, அவர்களுக்கு மாட்சியையும் மேன்மையையும் முடியாகச் சூட்டியதைக் கொண்டே கடவுள் எத்துணை உயர்ந்தவர்! அவரது திருப்பெயர் எத்துணை மேன்மையானது என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். எனவே, நாம் மேன்மையான திருப்பெயரைக்கொண்ட கடவுளைப் போற்றிப்புகழ்வோம்.

சிந்தனைக்கு:

 இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2: 10).

 தூயவர் என்பதே அவரது பெயர் (லூக் 1: 49)

 கடவுளுடைய திருப்பெயரின் வல்லமையை உணர்ந்து, அவரைப் போற்றிப் புகழ்கின்றோமா?

இறைவாக்கு:

‘கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு என்றென்றும் பணிந்திருப்போம்’ (மீக் 6: 9) என்கிறது இறைவார்த்தை. எனவே, மேன்மையான கடவுளின் திருப்பெயருக்குப் பணிந்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.