08 ஏப்ரல் 2021, வியாழன்

“எங்கள் சொந்த வல்லமையால் அல்ல”

பாஸ்கா காலம் முதல் வாரம் வியாழக்கிழமை


I திருத்தூதர் பணிகள் 3: 11-26
II லூக்கா 24: 35-48

“எங்கள் சொந்த வல்லமையால் அல்ல”

தன்னைப் பெரியவராகக் காட்டிக்கொண்டே முகம்மது அலி:


அமெரிக்காவைச் சார்ந்த பிரபல குத்துச்சண்டை வீரரான முகம்மது அலி (1942 – 2016) ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யும்பொழுது, சீட் பெல்ட் அணியாமலேயே பயணம் செய்தார். அவரைப் பார்த்த விமானப் பணிப்பெண் அவரிடம், “தயது செய்து சீட்பெல்ட் அணிந்து கொள்ளுங்கள்’ என்றார். அதற்கு முகம்மது அலி அவரிடம், “வலிமை வாய்ந்த நான் எதற்குச் சீட் பெல்ட் அணிந்துகொள்ளவேண்டும்? நான் ஒருபோதும் அதை அணிந்துகொள்ள மாட்டேன்” என்றார்.

உடனே பணிப்பெண் அவரிடம், “நீங்கள் வலிமை வாய்ந்தவர் என்றால், எதற்கு விமானத்தில் பயணம் செய்யசெய்ய வேண்டும்! பேசாமல் நீங்கள் சேரவேண்டிய இடத்திற்குப் பறந்து சென்றுவிடலாமே!” என்றார். பணிப்பெண்ணிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டதும், அவரது ஆணவம் அடங்கியது. அதன்பிறகு அவர் பணிப்பெண் சொன்னது போன்று சீட் பெல்ட் அணிந்துகொண்டார்.

பலரும் இந்த நிகழ்வில் வருகின்ற குத்துச்சண்டை வீரரான முகம்மது அலியைப் போன்று, தாங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்று காட்ட விழைன்றார்கள். இத்தகைய பின்னணியில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் பேதுரு மிகுந்த தாழ்ச்சியோடு எங்களுடைய சொந்த வல்லமையால் அல்ல, இயேசுவின் திருப்பெயராலேயே கால் ஊனமுற்றவரை நலப்படுத்த முடிந்தது என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இயேசுவின் திருப்பெயரைச் சொல்லிப் பேதுரு கால் ஊனமுற்றவரை எழுந்து நடக்கச் செய்ததைப் பார்த்த மக்கள் எல்லாரும் சாலமோன் மண்டபத்திற்கு வருகின்றார்கள். அப்பொழுது பேதுரு இரண்டு முக்கியமான கருத்துகளை எடுத்துக்கூறுகின்றார். ஒன்று, கால் ஊனமுற்றவரை எழுந்து நடக்கச் செய்தது தங்கள் சொந்த வல்லமையால அல்ல. மாறாக ஆண்டவரின் திருபெயரின்மீதுகொண்ட நம்பிக்கைதான் கால் ஊனமுற்றவரை எழுந்து நடக்கச் செய்தது என்பதாகும். இரண்டு, கடவுளின் ஊழியராம் இயேசுவைப் புறக்கணித்து, அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றதற்காக மக்கள் மனம்மாற வேண்டும் என்பதாகும்.

திருத்தூதர் புனித பேதுரு, கால் ஊனமுற்ற மனிதரைத் தன் சொந்த வல்லமையால் நலப்படுத்தினேன் என்று சொல்லி தனக்குப் பெருமை தேடிக் கொள்ளவில்லை. மாறாக, ஆண்டவரின் திருப்பெயரே அவருக்கு நலமளித்தது என்று மிகத் துணிச்சலாகக் கூறுகின்றார். பேதுரு இப்படிச்சொல்வதற்கு அவருக்கு நிறையவே தாழ்ச்சி இருந்திருக்கவேண்டும். அதனாலேயே அவரால் பின்னாளில் “உங்களைத் தாழ்த்துகள்; அப்பொழுது கடவுள் உங்களை ஏற்ற காலத்தில் உயர்த்துவார்” (1 பேது 5: 6) என்று சொல்ல முடிந்தது. நாமும் பேதுருவைப் போன்று நம்மைத் தாழ்த்திக்கொண்டு ஆண்டவருக்குப் பெருமைசேர்ப்போம்.

சிந்தனைக்கு:

 பெருமைபாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டும் (2 கொரி 10: 17).

 மேன்மை அடையத் தாழ்ச்சியே வழி (நீமொ 18: 12)

 நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் (மாற் 9: 23)

ஆன்றோர் வாக்கு:

‘தாழ்ச்சியுடைவர் எப்பொழுதும் பாதுகாப்பாகவே இருப்பர்’ என்பார் கில்பர்ட். கே. செஸ்டர்டன். எனவே, நாம் தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.