24 பிப்ரவரி 2021, புதன்

கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே!

தவக்காலம் முதல் வாரம் புதன்கிழமை

திருப்பாடல் 51: 1-2, 10-11, 16-17 (17b)

கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே!


குற்றத்தை அறிக்கையிட மறுத்த இளைஞன்:

அமெரிக்காவில் இளைஞன் ஒருவன் கொலைக் குற்றத்திற்காகத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டான். இதையறிந்த அவனுடைய தாய், தன் மகனின் தண்டனையைக் குறைக்குமாறு ஆளுநருக்கொரு கடிதம் எழுதினார். ஆளுநரோ அந்தக் கடிதத்தை நிராகரித்துவிட்டார். இதனால் கொலைக்குற்றம் செய்த இளைஞன் எப்படியும் தான் சாகப்போகிறோம் என்று தூக்குத்தண்டனைக்கான நாளுக்காகக் காத்திருந்தான்.

தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு முந்தைய நாளில் அருள்பணியாளர் ஒருவர் அவனிடம் வந்து, “தம்பி! இறப்பதற்குள் உன் பாவத்தை அறிக்கையிட்டுவிட்டு, நல்லதோர் ஒப்புரவு அருளடையாளம் பெற்றுக்கொள்” என்றார். அவனோ, “ஆளுநரே என்னைக் கைவிட்டுவிட்டார்! உங்களிடம் நான் என்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதால் மட்டும் எனக்கு விடுதலை கிடைத்துவிடுமா?” என்று சொல்லி தன்துபாவத்தை அறிக்கையிட மறுத்தான். அதற்கு வந்திருந்த அருள்பணியாளர், “ஆளுநர் கைவிட்டாலும் ஆண்டவர் உன்னைக் கைவிடமாட்டார். அதனால் நீ உன்னுடைய பாவத்தை அறிக்கையிடு” என்று கெஞ்சிக்கேட்டார். அவன் எதற்கும் அடிபணியாததால் அவர் மிகவும் வருத்தத்தோடு சென்றார். அவர் சென்றபிறகு, சிறைக்காவலர் அவனிடம் வேகமாக ஓடிவந்து, “தம்பி! இப்பொழுது வந்தவர் அருள்பணியாளர் அல்ல, இந்த மாகாணத்தின் ஆளுநர். நீ மட்டும் உன்னுடைய குற்றத்தை அவரிடம் அறிக்கையிட்டிருந்தால், அவர் உன்னுடைய தண்டனையைக் குறைத்து, விரைவிலேயே உன்னை விடுவித்திருப்பார். நல்லதொரு வாய்ப்பை இப்படித் தவறவிட்டுவிட்டாயே!” என்றார். இதைக் கேட்டு இளைஞன், “நான் செய்த கொலைக் குற்றத்திற்காக அல்ல, என் பாவத்தை அறிக்கையிடாததற்காகவே எனக்குத் தூக்குத் தண்டனை” என்று கண்ணீர்விட்டு அழுதான்.

தான் செய்த குற்றத்தை அறிக்கையிடாததால் இளைஞன் தூக்குத் தண்டனை பெற்றான். இதற்கு முற்றிலும் மாறாக, தான் செய்த பாவத்தைக் கடவுளிடம் அறிக்கையிட்டு தாவீது மன்னிப்புப் பெறுகின்றார். அதைப் பற்றியதுதான் இன்றைய பதிலுரைப்பாடல்.

திருவிவிலியப் பின்னணி:

தாவீது, உரியாவின் மனைவியான பெத்சேபாவுடன் பாவம் செய்தபின் அதை மறைக்க முயற்சி செய்கின்றார்; ஆனால், இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் அவருடைய தவற்றைச் சுட்டிக்காட்டியதும், அவர் தன் தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுகின்றார்.

கடவுளிடம் தன் பாவத்தை அறிக்கையிடும்பொழுது, தாவீது பயன்படுத்தும் வார்த்தைகள் கவனிக்கத் தக்கவை. “என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்” என்று சொல்லும் அவர், “தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்” என்கின்றார். இதன்மூலம் அவர் தன் பாவத்திற்காக மனம் வருந்துவது மட்டுமல்லாமல், புதியதொரு வாழ்க்கை வாழவும் முடிவு செய்கின்றார். கடவுளும் குற்றமுணர்ந்த தாவீதை மன்னிக்கின்றார்

சிந்தனைக்கு:

 உண்மையான மனமாற்றம் செயலில் வெளிப்பட வேண்டும் (மத் 3: 8).

 நம்முடைய அநீதியான செயல்கள் ஆண்டவருக்கு மறைவாய் இருப்பதில்லை (சீஞா 17: 20)

 மண்ணுலகில் பாவங்கள் மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு (மத் 9: 6)

இறைவாக்கு:

‘எவரது பாவம் மன்னிக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர்’ (திபா 32: 1) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நம்மை மன்னிக்கும் ஆண்டவரிடம் நம் குர்ற்றங்களை அறிக்கையிட்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்