24 பிப்ரவரி 2021, புதன்

மன்னிக்கும் இறைவன்

தவக்காலம் முதல் வாரம் புதன்கிழமை


I யோனா 3: 1-10
II லூக்கா 11: 29-32

மன்னிக்கும் இறைவன்


ஆண்டவர் மன்னிப்பதுபோல் மனிதர்கள் மன்னிப்பதில்லை:

பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பெரிய எழுத்தாளரும் கடவுள் மறுப்பாளருமான வால்டர், சுவிட்சர்லாந்தில் உள்ள லாசன் (Lousanne) என்ற நகரில் இருந்தபொழுது, அவரைச் சந்திக்க வழக்குரைஞர் ஒருவர் வந்தார். அவர் வால்டரிடம், “ஐயா நீங்கள் கடவுளை மறுத்தும், அவர் இல்லையென்றும் எழுதிக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஒன்றை நீங்கள் உங்களது மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள், கடவுள் தன்னை மறுப்போரையும் தனக்கெதிராகப் பேசுவோரையும் கட்டாயம் மன்னிப்பார்; ஆனால், தயவுசெய்து நீங்கள் இந்த நகரில் உள்ள உயரதிகாரிகளுக்கு எதிராக எதுவும் எழுதிவிடாதீர்கள். ஏனெனில், கடவுள் மன்னிப்பது போல், இவர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்” என்றார்

இந்த வழக்குரைஞர் வால்டரிடம் சொன்ன வார்த்தைகள்தான் எத்துணை ஆழமானவை! ஆம், மனிதர்கள் தங்களுக்கு எதிராகப் பேசுபவர்களையும், நடந்து கொள்கின்றவர்களையும் மன்னியாமல் போகலாம்; ஆனால், ஆண்டவர் நிச்சயம் மன்னிப்பவர். ஏனெனில், ஆண்டவர் மன்னிப்பதில் தாராளமானவர். இன்றைய இறைவார்த்தை, தவறுசெய்து பின் மனம்மாறிய நினிவே நகர மக்களை ஆண்டவராகிய கடவுள் மன்னித்து, அவர்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பாததைக் குறித்து வாசிக்கின்றோம். அதைப் பற்றி நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

அசீரியரியர்களின் தலைநகர் நினிவே நகர். இங்கு வாழ்ந்தவர்கள் போர்புரிவதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள். அதே நேரத்தில் பாவத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள். இப்படிப்பட்ட மக்களிடம் ஆண்டவராகிய கடவுள் தன்னுடைய செய்தியை அறிவிக்குமாறு இறைவாக்கினர் யோனாவை அனுப்பி வைக்கின்றார். அவரும் நினிவே நகருக்குச் சென்று, “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவிக்கின்றார். அவருடைய செய்தியைக் கேட்டு, நினிவே நகர் மக்கள் மனம்மாறுகின்றார்கள். இதனால் ஆண்டவர் அவர்களது குற்றத்தை மன்னித்து, அவர்கள்மீது தாம் அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

“மன்னிப்பதில் ஆண்டவர் தாளர மனத்தினர்” (எசா 55: 7) என்று கூறுவார் எசாயா இறைவாக்கினர். எசாயாவின் இவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது, ஆண்டவர் நினிவே நகர மக்களை மன்னித்து, அவர்கள்மீது தாம் அனுப்புவதாக இருந்த தண்டனையை அனுப்பாதது; ஆனால் நினிவே நகர மக்களுக்கு மனமாற்றச் செய்தியை அறிவித்த யோனாவை விட இயேசு பெரியவர். அவரது போதனையைக் கேட்டு மக்கள் மனம்மாறாதுதான் வியப்பாக இருக்கின்றது. அதனால் இயேசு, தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள் என்கின்றார். நாம் இறைவார்த்தையைக் கேட்டு மனம்மாறத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

 ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுவது நலம் (எசா 55: 6).

 பிறஇனத்தாராகிய நினிவே மக்களுக்கு மனமாற்றச் செய்தி அறிவிக்கப்பட்டதன் மூலம், கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் ஆகின்றார்.

 நமக்கு அறிவிக்கப்படும் நற்செய்தியைக் கேட்டு நாம் மனம் மாறுகின்றோமா?

இறைவாக்கு:

‘.....மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்’ (மாற் 1: 15) என்பார் இயேசு. எனவே, நாம் அறிவிக்கப்படும் நற்செய்தியைக் கேட்டு மனம்மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்