23 பிப்ரவரி 2021, செவ்வாய்

மன்றாட்டிற்குச் செவிசாய்க்கும் கடவுள்

தவக்காலம் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை

திருப்பாடல் 34: 3-4, 5-6, 15-16, 17-18 (17b)

மன்றாட்டிற்குச் செவிசாய்க்கும் கடவுள்


வாஷிங்டனின் மன்றாட்டைக் கேட்ட கடவுள்:

இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடுமையாகப் போர் நடந்து கொண்டிருந்த நேரமது. இங்கிலாந்திற்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்தது. இதனால் அந்நாட்டுப் படைவீரர்கள் வெற்றிக் களிப்பில் இருந்தார்கள். தொடர்ந்து அவர்கள் அமெரிக்கப் படையின்மீது தாக்குதல் நடத்த டெல்வியர் ஆற்றின் வட கரையில் பாளையம் இறங்கியிருந்தார்கள். மறுகரையில் அமெரிக்கப் படை சோர்ந்து கிடந்தது. அப்பொழுது அமெரிக்காவின் தளபதியான ஜார்ஜ் வாஷிங்டன் கடவுளிடம் இவ்வாறு உருக்கமாக மன்றாடினார்: “கடவுளே! எம் படைவீரர்கள் மட்டும் எப்படியாவது இந்த டெல்வியர் ஆற்றைக் கடந்து போக உதவிசெய்யும். அப்படிச் செய்தால், நிச்சயம் நாங்கள் எங்களுடைய எதிரிகளை வெற்றி கொண்டுவிடுவோம்.”

ஜார்ஜ் வாஷிங்டன் இவ்வாறு கடவுளிடம் வேண்டிய காலம், பனி நிறைந்த குளிர்காலமாகும். அவர் கடவுளிடம் வேண்டியவாறு அதிசயம் ஒன்று நடந்திருந்தது. அது என்ன அதிசயமெனில் டெல்வியர் ஆறானது உறைந்துபோனதுதான். இதனால் அமெரிக்கப் படை ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையில் டெல்வியர் ஆற்றில் நடந்து சென்று, மறுகரையில் பாளையம் இறங்கியிருந்த இங்கிலாந்துப் படையை மிக எளிதாக வெற்றிகொண்டது.

ஆம், 1776 ஆம் ஆண்டு, டிசம்பர் 26 ஆம் நாள் வரலாற்றில் நடந்த இந்த அதிசயம், கடவுளிடம் நாம் நம்பிக்கையோடு வேண்டுகின்றபொழுது, அவர் நமக்குச் செவிசாய்க்கின்றார் என்ற செய்தியை எடுத்துக் கூறுகின்றது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக் கூறுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

திருப்பாடல் 34 தாவீது மன்னர் பாடிய பாடலாகும். இப்பாடலை அவர் காத்தின் மன்னர் ஆக்கிசிடமிருந்து ஆண்டவர் தனக்கு விடுதலையளித்த பின் பாடுகின்றார் (1 சாமு 21: 10-22:1).

தன்னைக் கொல்லத் துடித்த சவுலிடமிருந்து தப்பியோடிய தாவீது, காத்தின் மன்னரான ஆக்கிசிடம் செல்கின்றார். அங்கு அவர் தன்னை யாரென்று வெளிப்படுத்தாமல், தன் முகத் தோற்றத்தை மாற்றிக்கொண்டு ஒரு பைத்தியம் நடிக்கின்றார். இதனால் ஆக்கிசு அவரை விட்டுவிடுகின்றார். இதற்குப் பிறகுதான் தாவீது, “ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்” என்றும், “துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்” என்கின்றார். தாவீது மன்னருக்கு வந்த பிரச்சனைகள் போன்று நமக்கும் பிரச்சனைகள் வரலாம். அத்தகைய தருணங்களில் நாம் நம்முடைய குரலுக்குச் செவிசாய்க்கும் ஆண்டவரிடம் தஞ்சம் அடைவது நல்லது.

சிந்தனைக்கு:

 எல்லா நெருக்கடியிலிருந்தும் நம்மை விடுவித்துக் காக்கும் ஆண்டவர் நம்மோடு இருப்பதுதான் எத்துணைச் சிறப்பு!

 ஆண்டவரிடம் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்கின்றபொழுது, எதற்கும் பதற்றமடையத் தேவையில்லை (எசா 28: 16)

 கடவுள் நமது வேண்டுதலுக்குச் செவி சாய்க்கின்றார் எனினும், நமது வேண்டுதல் அவரது திருவுளத்திற்கேற்ப இருப்பது நல்லது (1 யோவா 5: 14)

இறைவாக்கு:

‘அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர் அவர்களைத் துன்பங்களிலிருந்து விடுவித்தார்’ (திபா 107: 13) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் நம்மைத் துன்பங்களிலிருந்து விடுவிக்கும் ஆண்டவரிடம் மன்றாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.